தமிழ்க் கடவுளான முருகப்பெருமானுக்குரிய விழாக்களில் தைப்பூசம் தனிச் சிறப்பு கொண்டது. முழுநிலவு தினத்தன்று பூசம் நட்சத்திரம் வரும்போது சிறப்பு வழிபாடுகள் செய்வதே தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாகும். முருகப்பெருமானின் அருள் பெற இருக்கும் விரதங்களில் தைப்பூசம் விரதமே முதன்மையானதாக கருதப்படுகிறது. சூரனை அழிக்கப் பார்வதி தன் சக்தி, ஆற்றல் அனைத்தையும் திரட்டி ஒன்று சேர்த்து வேலாக மாற்றி அந்தச் சக்திவேலை முருகனுக்கு அளித்த நாள் தைப்பூசம் என்கின்றனர். தைப்பூசம் நாளில்தான் முருகன் வள்ளியை மணம் புரிந்து கொண்டான் என்றும் சொல்கின்றனர்.
1. தைப்பூசம் இந்தியாவில் மட்டுமின்றி தமிழர்கள் அதிகம் வசிக்கும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.
2. தைப்பூசம் தினத்தன்று அனைத்து முருகன் தலங்களிலும் முருகப்பெருமான் வீதி உலா வருவது வழக்கத்திலிருக்கிறது.
3. தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசமாகும். எனவே தைப்பூசத் தினத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.
4. தைப்பூசத்தன்று பழனிக்குக் காவடி எடுத்து வரும் பக்தர்கள் வழிநெடுக முருகனை நினைத்து பாடியபடி செல்வர். அந்தப் பாடல்கள் ‘காவடிச் சிந்து’ என்று அழைக்கப்படுகின்றன.
5. தைப்பூசத் தினத்தன்று குழந்தைகளுக்கு காது குத்துவது, கல்வி கற்கத் தொடங்குதல், கிரகப்பிரவேசம் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
6. தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் என்றொரு பழமொழியும் உண்டு.
7. தைப்பூசத்தன்று சூரியனின் ஏழாம் பார்வை சந்திரனின் வீடான கடகத்திலும், சந்திரனின் ஏழாம் பார்வை சூரியனின் மகர வீட்டிலும் விழுகிறது. இது மிகவும் உயர்ந்த நிலையாகும். சூரியனால் ஆத்ம பலமும் சந்திரனால் மனோபலமும் கிடைக்கிறது என்று ஜோதிட சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.
8. வள்ளலார் ஒரு தைப்பூச வெள்ளிக்கிழமை நாளில் ஒளியோடு கலந்தார் என்று சொல்லப்படுவதால், அன்றைய நாளில் வடலூரில் ஒளி வழிபாடு சிறப்பு வழிபாடாக இருக்கிறது.
9. தைப்பூச நாளில் சிவாலயங்கள் மற்றும் முருகன் ஆலயங்களில் வழிபாடு செய்யும் தம்பதியர்களுக்கு இடையே எந்தவிதக் கருத்து வேறுபாடும் வராமல் சிறப்புடன் வாழ்வர் எனும் நம்பிக்கை இருக்கிறது.
10. உலக நாடுகளில் தைப்பூசத்திற்காக மலேசியாவில் மட்டுமே அரசு விடுமுறை விடப்படுகிறது .