கோயிலுக்குச் செல்லும் போது, அபிஷேகத்திற்கும், அர்ச்சனைக்கும் என்று சில பூசைப் பொருட்கள் வாங்கிச் செல்வோம். அதை எதற்காகக் கோயிலுக்கு வாங்கிச் செல்கிறோம் என்று உங்களுக்குத் தெரியுமா?
தேங்காய்
தேங்காயின் ஓடு மிகவும் வலுவாகவும், கடினமாகவும் இருக்கும். அதை இரண்டாக உடைக்கும் போது வெண்மையான தேங்காய் பருப்பும், இனிமையான தண்ணீரும் கிடைக்கின்றது. அதுபோல் அகம்பாவம் என்னும் ஓட்டை உடைக்கும் பொழுது வெண்மையான மனமும், அதிலிருந்து உருவாகும் எண்ணங்கள் இனிமையாகவும், அன்பாகவும் இருக்கும்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தின் நடுவே கருப்பு கலரில் மிகச்சிறியதாக விதைகள் இருக்கும். ஆனால் முளைக்காது. ஏனென்றால் உலகத்தில் உள்ள எந்த வாழைப்பழ விதையும் பெரும்பாலும் முளைக்காது. ஆதலால் எனக்கு இந்த பிறவியிலேயே முக்தியை கொடு வேறு பிறவி வேண்டாம் என அருள் பெறவே வாழைப்பழத்தை இறைவனுக்கு சமர்ப்பித்து வேண்டுகிறோம்.
ஊதுபத்தி
அது புகைந்து சாம்பலானாலும், தன்னைச் சுற்றியிருப்பவர்களைத் தன் மணத்தால் மகிழ்விக்கின்றது. அதுபோல, ஒரு உண்மையான இறைத் தொண்டன், தன்னுடைய சுயநலக் குணங்களை எல்லாம் விட்டொழிக்க வேண்டும். பிறருக்காக நன்மை செய்வதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். மற்றவர்களின் வாழ்க்கையும் மணம்வீச வழி செய்திட வேண்டுமென்கிற எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
விபூதி(திருநீரு)
சாம்பலின் மறுபெயரே விபூதி ஆகும். நாமும் இதுபோல் ஒரு நாளைக்கு சாம்பல் ஆகப்போகிறோம். ஆதலால் நான் என்ற அகம்பாவமும், சுயநலம், பொறாமை இருக்ககூடாது என்ற எண்ணத்தையும், சிந்தனையும் நமக்கு உணர்த்தவே, விபூதியை நெற்றியிலும், உடம்பிலும் பூசிக்கொள்கிறோம்.
அகல் விளக்கு
ஒரு மின்சார விளக்கினால் மற்றொரு மின்சார விளக்கை ஒளிர வைக்கமுடியாது. ஆனால் ஒரு அகல் விளக்கினால் மற்றொரு அகல் விளக்கை ஒளிர வைக்கமுடியும். அதுபோல் நாம் வாழ்ந்தால் மட்டும் போதாது, அடுத்தவரையும் வாழ வைக்கவேண்டும் என்பதை நாம் உணர்ந்து கொள்ளவே அகல் விளக்கை ஏற்றுகின்றோம்.