துர்க்கையை சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை என்று இரு உருவங்களாகக் கொண்டு வழிபடுகின்றனர். சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை என்று எப்படிக் கண்டறிந்து வழிபடுவது என்று சிலர் கேட்கலாம்.
சிவதுர்க்கை
பதினெட்டு அல்லது எட்டு அல்லது நான்கு கைகளுடனும் ஒவ்வொரு கைகளிலும் கத்தி, சூலம் போன்ற ஆயுதங்களுடனும், அசுரர்களை எதிர்த்து போரிடும் உருவமாகக் காட்சிக் கொடுப்பவள் சிவதுர்க்கை எனப்படுகிறாள். சும்பன், நிசும்பன், சக்தபீஜன் போன்ற அரக்கர்களை அழிப்பதற்காக தேவர்களின் வேண்டுதலை ஏற்றுப் பூமியில் சிம்ம வாகனத்துடன் தோன்றிக் காட்சியளிப்பவள் சிவதுர்க்கை எனப்படுகிறாள்.
விஷ்ணு துர்க்கை
நான்கு கரங்களுடன் குறிப்பாக, தனது இரண்டு கைகளிலும் சங்கும் சக்கரமும் ஏந்தி மஹாவிஷ்ணுவின் தோற்றமாகக் காட்சி தருபவள் விஷ்ணு துர்க்கை எனப்படுகிறாள். மஹாவிஷ்ணுவின் கட்டளைப்படி மதுரா நகரத்தில் தேவகியின் வயிற்றில் தோன்றிய ஏழாவது கருவை அங்கிருந்து எடுத்துக் கொண்டு போய் நந்தகோகுலத்தில் ரோஹிணி என்பவளின் கருவில் சேர்த்துவிட்டு, தானும் யசோதைக்குப் பெண் குழந்தையாகப் பிறந்து கம்சனுக்கு அறிவுரை சொல்லி வான்வெளியில் காட்சி தந்தவள் விஷ்ணு துர்கை என்கிறது ஸ்ரீ பாகவதம்.
எனவே, கைகளில் சங்கும் சக்ரமும் இருந்தால் அந்த துர்க்கை விஷ்ணு துர்க்கை. அது இல்லாமல், பிற ஆயுதங்களுடன் இருந்தால் அது சிவதுர்க்கை என்று கொண்டு, அதற்கான வழிபாட்டு நடைமுறைகளைக் கையாண்டு வழிபட்டிட வேண்டும்.