இலிங்கம் என்பதற்குக் குறி என்று பொருள். முகம் கை கால் போன்ற அவயவங்கள் இல்லாமல் இறைவனைக் குறிப்பாக உணர்த்துவதால் இத்திருமேனிக்கு இலிங்கம் எனப் பெயர் ஏற்பட்டது.
பிரம்மன், திருமாலுக்கிடையே யார் பெரியவர் என்று போட்டியெழுந்த போது, அவர்கள் முன் சிவபெருமான் சோதி வடிவாகத் தோன்றினார். அவ்விருவரும் அச்சோதியின் முதலும் முடிவும் காணாது வருந்த, அச்சோதி வழிபாட்டிற்கு ஏற்ற சிவலிங்கமாகத் திடமானது. அச்சிவலிங்கத்தை வழிபட்டு அவர்கள் பேறு பெற்றனர். தன்னிலையில் அருவமான பரமசிவம் உயிர்களுக்கு இரங்கித் தன் கருணையால் அருவுருவத் திருமேனி கொண்டதே சிவலிங்கத் திருமேனி என்பதை இங்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.
சிவலிங்கம் என்பது பரார்த்த லிங்கம், இட்ட லிங்கம் என இரு வகைப்படும்.
சிவபெருமான் சங்கார காலம் வரையும் சாந்நித்தியராய் இருந்து ஆன்மாக்களுக்கு அனுக்கிரகிக்கும் போது உள்ள இலிங்கம், பரார்த்த இலிங்கம் எனப்படுகிறது. இது, தாவரலிங்கம் எனவும் பெயர் பெறும். சாந்நித்யம் - அண்மை, அடுத்தல், வெளிப்படுத்தல். தாவரம் எனினும், ஸ்திரம் எனினும் நிலையியல் பொருள் எனினும் பொருந்தும். பரார்த்த இலிங்கமானது, சுயம்பு லிங்கம், காண லிங்கம், தைவிக லிங்கம், ஆரிட லிங்கம், மானுட லிங்கம் என ஐவகைப்படும். இவைகளுள்ளே, சுயம்பு லிங்கம் தானே தோன்றியது. காண லிங்கம் விநாயகர், சுப்பிரமணியர் முதலிய கணர்களாலே உருவாக்கப்பட்டது. தைவித லிங்கம் விஷ்ணு முதலிய தேவர்களால் உருவாக்கப்பட்டது. ஆரிட லிங்கம் இருடிகளால் உருவாக்கப்பட்டது. அசுரர், இராட்சதர் முதலானவர்களால் உருவாக்கப்பட்டதும் ஆரிட இலிங்கம் என்பார்கள். மானுட லிங்கம் மனிதர்களால் உருவாக்கப்பட்டது.
இட்ட லிங்கம் என்பது, ஆச்சாரியார் (குரு) விசேட தீக்கை செய்து, சீடனைப் பார்த்து, “நீ உள்ள அளவும் கைவிடாது இவரை நாள்தோறும் பூசி" என்று அனுமதி செய்து, “அடியேன் இவ்வுடல் உள்ளவரையும் சிவபூசை செய்தன்றி ஒன்றும் உட்கொள்ளே" என்று ஆணை செய்வித்துக் கொண்டு கொடுக்க, அவன் வாங்கிப் பூசிக்கும் இலிங்கமாகும் இது, ஆன்மார்த்த லிங்கம் எனவும், சல லிங்கம் என்றும் சொல்லப்படும். இட்டலிங்கம் என்பது வாண லிங்கம், படிக லிங்கம், இரத்தின லிங்கம், சைல லிங்கம், சணிக லிங்கம் எனப் பலவகைப்படும். சணிக இலிங்கம் என்பது பூசித்தவுடன் விடப்படும் இலிங்கமாகும். மண், அரிசி, அன்னம், ஆற்று மணல், கோமயம், வெண்ணெய், உருத்திராக்கம், சந்தனம், கூர்ச்சம், பூ மாலை, சருக்கரை, மா எனப் பன்னிரண்டு வகைப்படும்.