அனைத்து வகையான செடிகளிலும் துளசிச் செடி மட்டும் மிகப் புனிதமானதாகக் கருதப்படுகின்றது. மகாலட்சுமியின் மறு வடிவமாகக் கருதப்படும் துளசி தான் அனைத்து செடிகளுக்கும், மரங்களுக்கும் தேவியாக இருக்கிறது. முப்பத்து முக்கோடி தேவர்களும் துளசிச் செடியில் வாசம் செய்கிறார்கள் என்பர். துளசியானது விருந்தா, விருந்தாவினீ, வில்வபூஜிதா, வில்வபவானி, நந்தினி மற்றும் கிருஷ்ண ஜீவானி போன்ற வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.
எந்த வீட்டில் துளசிச் செடி தினமும் வணங்கப்படுகிறதோ அங்கே எமதூதர்கள் நுழைய அச்சப்படுவார்கள். அது போன்று, பூதங்கள், பிரேதங்கள், பிசாசுகள் மற்றும் கெட்ட ஆவிகள் அந்த வீட்டிலிருந்து வெகு தொலைவிலேயே இருக்கும். மேலும், எங்கெல்லாம் துளசி வனம் இருக்கிறதோ அங்கெல்லாம் விஷ்ணு மற்றும் மகாலட்சுமி ஆகியோர் இருப்பர் என்று வேதங்களிலும் புராணங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது.
இதே போன்று, மேலும் துளசியின் பலன்கள் சில:
* எந்த வீட்டில் துளசி செடி தினமும் வணங்கப்படுகிறதோ அந்த இடத்தில் மகாலெட்சுமி வாசம் பண்ணுகிறாள்.
* எந்த ஒரு மனிதன் விஷ்ணுவை துளசி தளங்களை கொண்டு பூஜிக்கிறானோ, அவன் தாய்ப்பால் கூட அருந்தத் தேவையில்லை. அதாவது அவருக்கு மறுபிறவி இல்லை.
* விஷ்ணுவுக்கு ஆயிரக்கணக்கான அமிர்தக் குடங்களால் அபிஷேகம் செய்து திருப்தி அடைவதைவிட, ஒரே ஒரு துளசி தளங்கொண்டு வணங்கினாலும், அதில் திருப்தியடைந்து விடுவார்.
* துளசியின் இலை, பூ, கனி, வேர், கிளை, தோல் மற்றும் மண் அனைத்தும் புனிதமானவை. இறந்த ஒரு உடல் மரக்கட்டைகளுடன் எரியும் போது, அதனுடன் ஒரு துளசிக் குச்சி இருந்தாலும் அந்த ஜீவனுடைய கோடிக்கணக்கான பாவங்கள் அதனுடன் சேர்ந்து அழிக்கப்பட்டு விடும். அதுமட்டும் அல்ல அந்த ஜீவனும் முக்தி அடையும்.
* ஒவ்வொரு நாளும் துளசியைக் கவனித்து பராமரித்தல், தொடுதல், வணங்குதல், பூஜை செய்தல், மந்திரங்கள் வாசித்தல், சுற்றி வலம் வருதல், நீர் வார்த்தல், நித்ய பூஜை செய்தல் மற்றும் நமஸ்கரித்தல் போன்ற ஒன்பது விதமான பக்தி நிலைகளைத் துளசிக்குச் செய்கிறாரோ அவருடைய புண்ணியம் கோடிக்கணக்கான யுகங்களுக்கு நிலைத்து நிற்கும்.
* ஒருவர் பத்தாயிரம் பசுமாடுகளைத் தானம் செய்வதன் மூலம் என்ன பயன் அடைவாரோ, அதே பலன் ஒரு துளசி தளத்தை தானம் செய்வதன் மூலம் பெற முடியும்.
* விஷ்ணுவுக்குப் படைக்கப்பட்ட பிறகு, துளசி கலந்த நீரை இறந்து கொண்டிருக்கும் ஒருவர் அருந்தினால், அவருடைய அனைத்து பாவங்களும் நீக்கப்பட்டு விஷ்ணு உலகம் அடைவார்.
* விஷ்ணுவுக்கு ஒருவர் துளசி இலை கலந்த நீரைப் படைத்து, பின் அதை பக்தியுடன் அருந்தினால் அவர் ஜீவன் முக்தி அடையும் மற்றும் அவர் கங்கையில் நீராடிய பலனை அடைவார்.
* விஷ்ணுவின் தாமரைப் பாதங்களில் துளசி இலைகளை சமர்ப்பிக்கிறவருக்கு, ஒரு இலட்சம் அசுவமேத யாகங்களை நடத்திய பலன் கிடைக்கும்.