சப்தகன்னியர் வழிபாடு என்பது ஒரு கிராமியத் தெய்வ வழிபாடாகும். இந்த சப்தகன்னியர்கள் தோன்றிய கதை தெரியுமா உங்களுக்கு...?
அண்ட முண்டர்கள் என்ற அரக்கர்கள் மூவுலகில் இருப்பவர்களையும் தங்களது கொடுஞ்செயல்களால் துன்புறுத்தி வந்தனர். அவர்கள் மனித கருவிலிருந்து பிறக்காமலும், ஆண், பெண் இணைவில் பிறக்காமலும் இருக்கும் பெண்ணால் மட்டுமே தங்களுக்கு அழிவு ஏற்படும் என்கிற வரத்தைக் கேட்டுப் பெற்றிருந்ததால், அவர்களை அழிப்பதற்காகப் பார்வதி தேவியிடமிருந்து பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி எனும் ஏழு கன்னியர்கள் தோற்றம் பெற்றனர்.
பிராமி
பார்வதி தேவியின் முகத்தில் இருந்து உருவானவள் பிராமி. மேற்குத் திசையின் அதிபதி. கல்விக்கு அதிபதியான சரஸ்வதி என்ற கலைவாணியின் வடிவமாவாள். நான்முகனின் அம்சமாய்த் தோன்றியவள். நான்கு முகங்கள், நான்கு கரங்கள். மஞ்சள் வண்ணம் பிடித்த வண்ணம். கமண்டலம், அட்சமாலையைப் பின்புறத்திலிருக்கும் இரு கரங்களில் ஏந்தி முன்னாலிருக்கும் இரு கைகளில் அபயவரதம் காட்டுவாள். ருத்திராட்ச மாலை தரித்து அன்னவாகனத்தில் அமர்ந்திருப்பவள். மான் தோல் அணிந்திருப்பவள். ஞானம் தந்து அஞ்ஞானம் நீக்குபவள். இவளது காயத்ரி மந்திரத்தை படிக்கும் மாணவர்கள் தினமும் அதனை உச்சரித்து வந்தால், ஞாபக மறதி நீங்கிவிடும். அரசு உயர் பணிகளுக்கான தேர்வு எழுதுபவர்கள் தினமும் இவளை நினைத்து 108 முறை மேற்கு நோக்கி உச்சரித்து வந்தால் வெற்றி நிச்சயம் என்பர்.
வாராஹி
பார்வதி தேவியின் பிருஷ்டம் பகுதியிலிருந்து உருவானவள் வராஹி. நமது பிருஷ்டம் பகுதி கழிவுகளை வெளியேற்றுவதும், உடம்பைத் தாங்குவதும், ஓய்வு தருவதும் ஆகும். இதன் சக்தியாக பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் தேவியின் முக்கியப் பணிகளைக் கொண்டவளாக இருக்கிறாள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும். தேவியின் வடிவமாகப் பிறந்ததால், இவள் சிவன், விஷ்ணு, சக்தி என்ற மூன்று வடிவங்களை உள்ளடக்கமாகக் கொண்டவளாவாள். எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னியர்களில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள். எருமையை வாகனமாக உடையவள். கலப்பை, உலக்கை ஆகியவற்றைப் பின்னிரு கரங்களில் தாங்கி அபயவரதம் காட்டுவாள். லலிதாம்பிகையின் படைத்தலைவி இவளே. தண்டினி என்ற பெயருடன் சிம்மவாஹினியாய்க் காட்சி கொடுப்பாள். இவளை வணங்குவோர் வாழ்வில் சிக்கல்கள், தடைகள், தீராத பகைகள் தீரும் என்பர்.
மகேஸ்வரி
பார்வதி தேவியின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி. சிவபெருமான் இவளது சக்தியால்தான் சம்ஹாரமே செய்கிறார். மகேசனின் சக்தி இவள். முக்கண் படைத்தவள். ஜடா மகுடத்துடன் காட்சியளிப்பாள். மான், மழு ஏந்தி, அபயவரதம் காட்டி நான்கு கரங்களுடன் இருப்பாள். தூய வெண்ணிறமே பிடித்த வண்ணம். வடகிழக்கு என்னும் ஈசானியம் திசையை நிர்வகித்து வருபவள். இவளை வழிபட்டால், நமது கோபத்தைப் போக்கி சாந்தத்தை அளிப்பாள். இவளது வாகனம் ரிஷபம் ஆகும். பார்வதிதேவியின் மற்றொரு வடிவமாகப் போற்றப்படுகிறாள்.
இந்திராணி
பார்வதி தேவியின் பிறப்புறுப்பிலிருந்து தோன்றியவள் இந்திராணி. இந்திரனின் வடிவம். கற்பகமலர்களைக் கூந்தலில் சூடியவள். யானை இவளது வாகனம். சொத்து சுகம் தருபவர். உலகத்தின் சகல உயிர்களும் தோன்ற பெண் பிறப்புறுப்புதான் காரணமாக இருக்கிறது. இவளை வழிபடுபவர்களின் உயிரைப் பேணுவதும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணையை அமைத்துத் தருவதிலும், மிகவும் தலைசிறந்தவள் என்பதுடன் அதே சமயம் முறையான காமசுகத்தைத் தருவதும் இவள். மணமாகாத ஆண்கள் இவளை வழிபட்டால், அவர்கள் மிகச்சிறந்த மனைவியையும், கன்னிப்பெண்கள் இவளை வழிபட்டால், மிகப்பொருத்தமான கணவனையும் அடைவார்கள். இந்திரனின் சக்தியான இவள் ரத்ன மகுடம் தரித்தவள். பொன்னிற மேனி உடையவள். நாற்கரத்தினள். சக்தி ஆயுதமும், வஜ்ராயுதமும் தாங்கி அபயகரம் காட்டுவாள். சத்ரு பயம் போக்குபவள். மாகேந்திரி என்ற பெயரையும் கொண்டவள்.
கௌமாரி
கௌமாரன் என்றால் குமரன். குமரன் என்றால் முருகக்கடவுள். சிவபெருமானும் பார்வதிதேவியும் அழிக்க இயலாதவர்களை அழித்தவர்தான் குமரக்கடவுள் எனப்படும் முருகக்கடவுள். முருகனின் வடிவமே கௌமாரி. இவளுக்கு சஷ்டி, தேவசேனா என்ற வேறு பெயர்களும் உண்டு. மயில் வாகனத்தில் வருபவள். அஷ்ட திக்கிற்கும் அதிபதி இவளே. கடலின் வயிறு கிழியுமாறு வேற்படையைச் செலுத்திய சக்தி இவள். இவளை வழிபட்டால், குழந்தைச் செல்வம் உண்டாகும். இளமையைத் தருபவர்.
வைஷ்ணவி
பார்வதிதேவியின் கைகளில் இருந்து பிறந்தவள் வைஷ்ணவி. இவள் விஷ்ணுவின் வடிவம். கருடனை வாகனமாகக் கொண்டவள். வளமான வாழ்வு தருபவர். சகல சவுபாக்கியங்கள், செல்வ வளம் அனைத்தையும் தருபவளே வைஷ்ணவி. குறிப்பாக, தங்கம் அளவின்றி கிடைத்திட வைஷ்ணவி வழிபாடு செய்வர்.
சாமுண்டி
சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பத்திரகாளியானவள், தனது கோரமான முகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனவள். இவள் தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன் என்ற அரக்கனை அழித்தாள். பதினாறு கைகள், பதினாறு விதமான ஆயுதங்கள், மூன்று கண்கள், செந்நிறம், யானைத் தோலால் ஆன ஆடையை அணிந்திருப்பவள். சப்தகன்னிகைகளில் முதலில் தோன்றியவள் இவளே. சப்த கன்னிகைகளில் சர்வ சக்திகளையும் கொண்டிருப்பவள். மனிதர்களுக்கு மட்டுமல்ல; தேவர்களுக்கே வரங்களை அருளுபவள் இவள்.