பார்வதி தேவி ஒருமுறை விளையாட்டாக ஓவியம் ஒன்று வரைந்தாள். அது மிகவும் அழகாக இருந்தது. உடனே பார்வதிதேவியின் தோழியர்கள் இதற்கு உயிர் கொடுங்கள் என்று வேண்டினர். அன்னை உமையாளும் தான் வரைந்த சித்திரத்திற்கு உயிர் ஊட்டினாள். அது அழகான இளைஞனாக மாறியது. பார்வதிதேவி, அவனுக்கு சித்திரத்தில் இருந்து வந்ததால் சித்ர குப்தன் என்று பெயர் சூட்டினாள். பின் உலகைக் காக்கும் பரம்பொருளான சிவபெருமானிடம் சித்ரகுப்தனை அழைத்துச் சென்ற பார்வதிதேவி, நடந்தவற்றை விளக்கி சித்ரகுப்தனுக்கு ஏதாவது ஒரு பொறுப்பைக் கொடுக்க வேண்டும் என்று வேண்டினாள். அந்தச் சமயத்தில் மரணத்திற்குப் பிறகு உயிர்களின் பாவபுண்ணியக் கணக்கை ஆராய்ந்து சொல்ல, தனக்கு உதவியாக ஒருவர் வேண்டும் என்று எமலோகத்தின் அதிபதியான எமதர்ம ராஜன் இறைவனிடம் வேண்டினான். உடனே இறைவனும் சித்ரகுப்தனை எமனின் உதவியாளனாக உயிர்களின் பாவ புண்ணிய கணக்கை எழுதும் பொறுப்பை ஒப்படைத்தார் என்று சித்ரகுப்தன் கதை சொல்லப்படுகிறது.
மறுமையில் நன்மை வேண்டுபவர்கள், மீண்டும் பிறவாமை வேண்டுபவர்கள், பிறப்பில் துன்பமில்லா நற்பிறவி வேண்டும் என்பவர்கள் சித்ரகுப்தனை வழிபடுவது நல்லது என்கின்றனர். குறிப்பாக, சித்ரா பௌர்ணமி நாளில் சித்திரகுப்த வழிபாடு செய்வது சிறப்புக்குரியது என்கின்றனர்.
சித்ரா பௌர்ணமி நாளில், காலையில் கோவிலுக்கு சென்று பிள்ளையார், நந்தி, சிவபெருமான் மூன்று தெய்வங்களுக்கும் அர்ச்சனை செய்து கொண்டு வருவார்கள். விரதம் இருப்பவர்கள் காலையில் குளித்தவுடன் பசுவுக்கு வெல்லம் கலந்த பச்சரிசி வைப்பார்கள். ஒரு வேளை தான் உணவு உட்கொள்ள வேண்டும். வீடுகளில் பெண்கள் மாக்கோலம் போட்டு, அதன் ஒரு பகுதியில் சித்திரகுப்தனைப் போல் ஒரு உருவத்தையும் கோலமாகப் போடுவார்கள். அருகில் ஏடும் எழுத்தாணியும் வைப்பார்கள். விளக்கு ஏற்றி வைத்து பூஜை செய்வார்கள். வெண் பொங்கல் இடுவதும் உண்டு. இட்ட பொங்கலுடன் இனிப்பு கொழுக்கட்டை, மாங்காய், தட்டைப்பயறு குழம்பு இவைகளுடன், நீர், மோர், பழங்கள், கண் திறந்த இளநீர், பானம் இவைகளை வைத்து வழிபடுவர். பலகாரங்களும் செய்து வைக்கலாம்.
"சித்திர குப்தம் மஹா ப்ராக்ஞம்
லேகனிபத்ர தாரிணம்
சித்ர ரத்னாம்பரதரம்
மத்யஸ்தம் ஸர்வதேஹினாம்''
எனும் சுலோகத்தினைச் சொல்லிச் சித்திர குப்தனை வழிபட வேண்டும். அதன் பிறகு, சித்திர புத்திர நாயனார் கதை, புராணம் ஆகியவற்றை படிக்க வேண்டும்.