ஸ்ரீ ராமன் விளம்பி ஆண்டு, சித்திரை மாதம், சுக்லபட்ச நவமி, புதன்கிழமை, புனர்பூச நட்சத்திரம் கடக லக்கினம் கொண்ட நாளில் தோற்றம் பெற்றார். இந்த இலக்கினத்தினை ‘அபிஜித் இலக்கினம்’ என்று போற்றுகின்றனர். சௌம்ய ஆண்டு, பங்குனி மாதம், பௌர்ணமி நாளில், உத்திரம் நட்சத்திர நாளில் ஸ்ரீ ராமன் சீதாதேவியைத் திருமணம் செய்து கொண்டார். இருப்பினும், ராம நவமியன்று ஸ்ரீ ராமன் - சீதாதேவி திருமண நிகழ்வு நடத்தப்படுவது ஏன் என்று சிலர் கேட்பதுண்டு.
ஸ்ரீ ராமன் மேல் பக்தி கொண்ட பக்தர்கள் பலரும் ஸ்ரீ ராமரின் தோற்றம் பெற்ற நாளான ராம நவமி நாளை ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். திருமணம் செய்து கொண்ட பலரும், தாங்களும் இல்லற வாழ்க்கையில் ஸ்ரீ ராமன் - சீதாதேவி போன்று இருக்க வேண்டும் என்றே விருப்பம் கொள்கின்றனர். விஷ்ணு - மகாலெட்சுமியின் தோற்றங்களான ஸ்ரீ ராமன் - சீதாதேவியை வழிபடுவதன் மூலம் இல்வாழ்க்கையில் நிறைந்த வளங்களுடன் வாழ்வதற்கான வாய்ப்புகளைப் பெற முடியும் என்கிற நம்பிக்கையும் இருந்து வருகிறது. எனவே, ஸ்ரீ ராமன் தோற்றம் பெற்ற நாளிலேயே ஸ்ரீ ராமன் - சீதாதேவி திருமணத்தையும் நடத்தி, அதன் மூலம் பக்தர்கள் மகிழ்வு கொள்கின்றனர். பக்தர்கள் விருப்பத்தையே இறைவனும் ஏற்றுக் கொண்டு அருள்புரிந்து வருகிறார்.