கிருதயுகக் காலத்தில் சூரியன், தனது ஒற்றைச் சக்கரத் தேரில் பயணித்துக் கொண்டிருந்தான்.
ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்த போது, அவனது தேர்க்கால் (சக்கரம்) நகராமல் நின்று விட்டது. அதனால், அவன் அங்கிருந்து தொடர்ந்து பயணிக்க முடியாமல் தவித்தான்.
உடனே அவன், இறைவன் சிவபெருமானை நினைத்து, அங்கிருந்து தடை நீங்கிச் செல்வதற்கு உதவும்படி வேண்டினான்.
அப்போது, “சூரியனே, எந்த இடத்தில் உன் தேர்க்கால் நகர முடியாமலிருக்கிறதோ, அந்த இடத்திற்கு நேராகக் கீழிறங்கிச் சென்று, அங்கு ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி வழிபட்டால், உனது தேர் அங்கிருந்து தானாக நகர்ந்து சென்று விடும்” என்று வானிலிருந்து ஒரு குரல் மட்டும் கேட்டது.
அந்தக் குரலைக் கேட்ட அவன், தனது தேரிலிருந்து கீழிறங்கி வந்தான். பாரிஜாத மரங்கள் நிறைந்த அந்தக் காட்டுப் பகுதியில் மணிமுத்தா நதியின் கிழக்குக் கரையில் நீலரத்தினத்தால் ஆன சிவலிங்கத்தை உருவாக்கி நிறுவினான். அதனருகில் ஒரு குளத்தையும் உருவாக்கிய அவன், அங்கிருந்து தண்ணீர் எடுத்து வந்து அந்தச் சிவலிங்கத்தை முழுமையாகச் சுத்தம் செய்து, அங்கு கிடைத்த பாரிஜாத மலர்களைக் கொண்டு அலங்கரித்து வழிபட்டான்.
அவன் செய்த வழிபாட்டினை முடித்த நிலையில், அவனுடைய தேர் வானிலிருந்து கீழிறங்கி வந்தது. பின்னர் அவன், அந்தத் தேரில் ஏறித் தனது பயணத்தை எப்போதும் போல் தொடர்ந்தான்.
சூரியனால் நிறுவப்பட்ட சிவலிங்கம் நீலநிறத்திலான ரத்தினம் என்பதால், இங்கிருக்கும் இறைவன் ரத்தினேஸ்வரர் என்று அழைக்கப்பட்டார். உலகின் தொடக்கக் காலத்தில் நிறுவப்பட்ட இறைவன் என்பதால் ஆதிரத்தினேவரர் என்றும் அழைக்கப்பட்டார். பின்னர், வருணன் மகனான வாருணி, துர்வாச முனிவரின் சாபத்தால் ஆட்டுத்தலையும், யானை உடலுமாக இருந்து வழிபட்டுச் சாப விமோசனம் பெற்றதால் ஆடானை நாதர் என்றும் அழைக்கப்பட்டார்.
திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்றான இந்தக் கோயில், தேவாரப்பாடல் பெற்ற பாண்டியநாட்டுத் திருத்தலங்களில் ஒன்பதாவதாகவும், தேவாரப்பாடல் பெற்றத் திருத்தலங்களில் இருநூறாவாதாகவும் இருக்கிறது. இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை எனும் ஊரில் இந்தக் கோயில் அமைந்திருக்கிறது.