மகாலட்சுமி சாபம் ஒன்றில் தனது அழகிய உருவத்தை இழந்த நிலையில், தனது உண்மையான உருவம் கிடைக்க வேண்டி வழிபட்டு வந்த இடத்தில் திருக்கள்வனூர் கள்வப்பெருமாள் கோயில் அமைந்திருக்கிறது.
இக்கோயிலில் இருக்கும் விஷ்ணு ஆதிவராகப் பெருமாள் என்றும், உடனிருக்கும் தாயார் அஞ்சிலை வல்லி நாச்சியார் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் காமாட்சியம்மன் கருவறைக்கு முன்பாக ஒரு மூலையில் இக்கோயில் சிறிய அளவில் அமைந்திருக்கிறது.
இந்தக் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் 55வது திருத்தலமாகவும், ஆழ்வார்களில் திருமங்கையாழ்வார் என்பவரால் பாடல் பெற்ற தலமாகவும் இருக்கிறது.
சைவசமயக் கோவில்களுக்குள் பாடல் பெற்ற வைணவ சமயக் கோவிலாக இக்கோயில் ஒன்று மட்டுமே இருக்கிறது.
108 வைணவத் திருத்தலங்களில் மிகச் சிறிய அளவிலான இறைவன் திருவுருவச்சிலை இங்குதான் இருக்கிறது.
இந்தக் கோயிலில் உற்சவர் தனியாக இல்லாததால் இக்கோயிலுக்கென்று தனி விழாக்கள் எதுவும் நடத்தப்படுவதில்லை.
இங்கு இருக்கும் ஆதிவராகப் பெருமாள் மற்றும் அஞ்சிலை வல்லி நாச்சியார் ஆகியோருக்குத் தினசரி வழிபாடுகள் காமாட்சியம்மன் கோவில் அர்ச்சகர்களாலேயே செய்யப்படுகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.