விளக்கு வகைகள்
மு. சு. முத்துக்கமலம்

முற்காலத்தில் மக்கள் மண் விளக்கையே பயன்படுத்தி வந்தனர். அதன் பிறகு, கல் விளக்குகளைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். அதனைத் தொடர்ந்து, உலோகங்கள் பயன்படுத்த ஆரம்பித்த பின்பு, பல்வேறு வேலைப்பாடுகள் கொண்ட கலை அம்சம் நிறைந்த விளக்குகள் வந்து விட்டன. உதாரணமாக, திருவிளக்கில் குத்துவிளக்கு, தூக்கு விளக்கு, நந்தா விளக்கு, அன்னப்பட்சி விளக்கு, காமாட்சி விளக்கு, பாவை விளக்கு, சரவிளக்கு, கிளை விளக்கு என ஏராளமான விளக்குகள் இருக்கின்றன.
கை விளக்கு
ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்ல வசதியாகச் சிறிய விளக்காக இருக்கும். இதற்குக் கைப்பிடியும், அரசிலை போன்ற பாதமும் இருக்கும். கைப்பிடியில் தெய்வத்தின் திரு உருவங்கள், இலை, கொடிகள், யானை, மயில் போன்ற உருவங்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.
குத்துவிளக்கு
பழங்காலத்தில் விளக்குகள் மரத்தண்டின் மீது இரும்பு அகல் பொருத்தி பயன்படுத்தப்பட்டன. மரப் பகுதியை மண்ணில் ஊன்றி நட்டுப் பயன்படுத்தினர். இதனால் இது குத்துவிளக்கு எனப்பட்டது. இது உயரத்தில் இருந்து ஒளி வீசியதால் ஒளி எங்கும் பரவியது. மக்களைப் பெரிதும் கவர்ந்தது. பிற்காலத்தில் இதை பித்தளை, வெண்கலம், ஐம்பொன் போன்ற உலோகங்களில் செய்யும் போது நான்கு பாகங்களாகப் பாதம், தண்டு, அகல், உச்சி எனப் பிரித்தனர். விளக்கின் அடிப்பகுதி பிரம்மா, நடுத்தண்டு விஷ்ணு, உச்சிப்பகுதி சிவன் என்றும், விளக்கின் சுடர் மகாலக்ஷ்மி என்றும், ஒளி சரஸ்வதி என்றும், வெப்பம் பார்வதி என்றும் சமய சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கிளை விளக்கு
குத்துவிளக்கில் பல கிளைகள் கொண்டதாய் அமைக்கப்பட்டிருக்கும். அந்தக் கிளைகளில் சங்கிலி இணைக்கப்பட்டு அதில் குத்துவிளக்கின் உச்சிப்பகுதி (எண்ணெய் விடும் பகுதிக்கு மேல்) இணைக்கப்பட்டிருக்கும். இதன் உச்சியில் கலை அம்சம் நிறைந்த அன்னம், மயில், கிளி, தெய்வ உருவங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். இவை கோயில்களிலேயே ஏற்றப்படுகிறது.
தூண் விளக்கு
இந்த வகை விளக்கு, கேரளக் கோயிகளில் அதிகம் காணப்படும். கொடிமரம் போல இருக்கும் இந்த தூண் விளக்கில் தீபம் ஏற்றப்பட்டதும், அதன் வெளிச்சத்தைப் பார்த்து சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மக்கள் கோயிலுக்கு வர வசதியாக இருக்கும்.
தீபச்சட்ட விளக்கு
கேரளக் கோயில்களில் அதிகம் காணப்படும் இவ்விளக்கு, கோயிலைச் சுற்றி மரச் சட்டம் அடிக்கப்பட்டு அதில் இரும்பு, பித்தளை, வெண்கலம் போன்ற உலோகத்தினாலான அகல் விளக்குகளை வரிசையாகப் பொருத்தியிருப்பர். இதில் ஆயிரக்கணக்கான தீபங்களை ஏற்ற முடியும். விசேஷத் தினங்களில் எல்லா விளக்குகளும் ஏற்றப்பட்டு கோயிலில் ஒளி பரவியிருக்கும்.
மாவிளக்கு
விஷ்ணுவுக்கு மிகவும் ஏற்றாதாக கருதப்படுகிறது. புரட்டாசி மாதம் - திருவோணம் நட்சத்திரத்தில் போடப்படும் மாவிளக்கு சிறப்புக்குரியது. புரட்டாசி மாதம் வரும் அனைத்துச் சனிக்கிழமைகளிலும் மாவிளக்குப் போட்டு வழிபட்டால் நன்மை கிடைக்கும். பச்சரிசியை ஊறவைத்து மாவாக்கி, வெல்லம் கலந்து அகல் விளக்கு போல் செய்து சுத்தமான நெய், பஞ்சுத் திரி இட்டு விளக்கு ஏற்றப்படும். அம்பாளுக்கும் மாவிளக்கு வழிபாடு செய்வதுண்டு.
எலுமிச்சை விளக்கு
எலுமிச்சை விளக்கு, ராகு காலத்தில் துர்க்கா பூஜையில் முக்கிய இடம் பெறுகிறது. ராகு காலத்தில் எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி அன்னையை வழிபட்டால் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கிச் சாறைப் பிழிந்துவிட்டு மூடியைத் திருப்பி பஞ்சு திரி போட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றலாம். கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் அம்பாளை நினைத்து வீட்டிலும் ஏற்றலாம்.
திருக்கார்த்திகை தீபம்
கார்த்திகைத் திங்களில் கொண்டாடப்படும் தீபத்திருநாளே திருவிளக்கின் சமயத்தொடர்பை விளக்கும். அக்னித்தலமான திருவண்ணாமலையில் மலை தீபம் ஏற்றப்படுவதும் திருக்கார்த்திகை தினத்தில்தான். கார்த்திகைப் பெண்கள் குழந்தை முருகனை எடுத்து வளர்த்ததால் கிருத்திகை முருகனுக்கு உரிய நடசத்திரமாகக் கொண்டாடப்படுகிறது. கிருத்திகை தினத்தில் எல்லா ஆலயங்களிலும் தீபத்திருநாள் நடைபெறும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.