முருகப்பெருமான் தோன்றிய விசாக நட்சத்திரத்தைக் காட்டிலும் கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திர நாளே முருகப்பெருமானுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யக் கூடிய நாளாக இருக்கிறது. மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திர நாளில் முருகப்பெருமானுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டாலும், ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திர நாளில், உலகம் முழுவதுமிருக்கும் முருகன் கோயில்களில் ‘ஆடிக்கிருத்திகை’ விழா மிகச் சிறப்பாகக் கொண்டடப்பட்டு வருகிறது.
சிவபெருமானின் அருளால் தோன்றியவர் முருகப்பெருமானை ஆறு கார்த்திகைப் பெண்களால் சீராட்டி வளர்த்தனர். அந்தக் கார்த்திகைப் பெண்களைச் சிறப்பிக்கும் வகையில் அவர்கள் ஆறு பேரும் “கார்த்திகை” நட்சத்திரங்களாக மாற்றம் பெற்றனர். அவர்கள் கார்த்திகை நட்சத்திரமாக மாற்றம் பெற்ற நாளான ஆடிக்கிருத்திகை நாள் முருகப்பெருமானின் சிறப்புக்குரிய நாளாகக் கொண்டாடும் வழக்கம் ஏற்பட்டது. வருடத்தில் “தை கிருத்திகை” மற்றும் “ஆடி கிருத்திகை” என்ற இரு கிருத்திகைகள் நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த ஆடி கிருத்திகை தினத்தன்று அதிகாலை வேளையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு, பூஜை அறையை சுத்தம் செய்து முருகனின் படத்திற்கு முன்பு அரிசி மாவில் அறுகோண கோலம் இட்டு, முருகனின் படத்திற்கு இருபுறமும் நெய் தீபமேற்றி, பூக்கள் மற்றும் பழங்களைப் படைத்து உணவு மற்றும் நீரேதும் அருந்தாமல், கந்த சஷ்டி கவசத்தை மனமொன்றி படிக்க வேண்டும். நீரிழிவு உள்ளிட்ட நோயில்லாதவர்கள் இந்த நாளில் உணவேதும் உண்ணாமல் வெறும் நீரை மட்டும் அருந்தி விரதம் இருக்க வேண்டும். நீரிழிவு உள்ளிட்ட நோயாளிகள், இந்நாளில் உப்பு சேர்க்கப்படாத உணவை உண்ணலாம். மாலையில் அருகிலுள்ள முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு இந்த விரதத்தை நிறைவு செய்யலாம்.
இந்த ஆடி கிருத்திகை விரதமிருப்பவர்களுக்கு, அவர்களின் கர்ம வினைகள் நீங்கும். செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். ஜாதகத்தில் செவ்வாய் பகவானின் கெடுதலான திசை நடப்பவர்களுக்கு தீமையான பலன்கள் ஏற்படாமல் காக்கும். திருமணத் தடைகள் நீங்கும். சொந்த வீடு உள்ளிட்ட வசதிகள் கிடைக்கும். முருகனின் முழுமையான அருள் கிடைப்பதுடன், வாழ்வில் தேவையான அனைத்து வளங்களும் கிடைக்கும் என்கின்றனர்.