கேரள மாநிலத்தில் மலையாள நாட்காட்டியின்படி கற்கட (ஆடி) மாதத்தை இராமாயண மாதம் என்று கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இம்மாதம் முழுவதும் கோயில்களிலும், வீடுகளிலும் இராமாயண பாராயணம் செய்து விஷ்ணுவை வழிபடும் வழக்கமிருக்கிறது.
கேரள மாநிலத்தினர் கற்கட (ஆடி) மாதத்தில், பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த துஞ்சத்து எழுத்தச்சன் என்பவர் வான்மீகி இராமாயணத்தை மலையாள மொழியில் மொழிபெயர்த்து எழுதிய ‘ஆத்யாத்ம இராமாயணம்’ எனும் பெயரிலான இராமாயணத்தை 30 நாட்களும் பக்தியுடன் வாசிக்கின்றனர். இம்மாதம் முழுவதும் தங்களது உணவு முறையினை மாற்றிக் கொள்வர். பெரும்பான்மையினர் விரதம் மேற்கொள்வர். இக்காலத்தில் மழை பெய்து குளிர்ச்சியான தட்பவெப்பநிலை இருப்பதால், ஆயுர்வேத சிகிச்சைகளைத் தொடங்குவதற்கு ஏற்றதாக இம்மாதம் இருக்கிறது. நோயில்லாவிடினும், இம்மாதத்தில் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்குச் சென்றுவருவர்.
இம்மாதத்தில், தமிழகத்தில் ஆடிக்கூழ் தயாரித்து அருந்துவது போல், கேரளாவில் ‘கற்கடக் கஞ்சி’ எனப்படும் கஞ்சியை அருந்துகின்றனர். தசபுஷ்பம், தழுதாமை, கைதோநி, முயல் செவியன், முக்கூட்டு, விஷ்ணுகாந்தி, கீழாநெல்லி உள்ளிட்ட 30 மூலிகைப் பொருட்களுடன் வெல்லம், தேங்காய்ப்பால், ஏலக்காய், சுக்கு, சீரகம், கிராம்பு ஆகியவைகளைக் கலந்து தயாரிக்கப்படும் இக்கஞ்சியை மாதம் முழுவதும் அருந்துவதால், உடலைத் தூய்மைப்படுத்திக் கொள்ள முடியும் என்கின்றனர். சர்க்கரை நோயாளிகளுக்குச் சில பொருட்களைத் தவிர்த்து, கற்கடக் கஞ்சி தயாரிக்கப்படுகின்றது.
இம்மாதத்தில் கேரளாவில், கோட்டயம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் அமைந்திருக்கும் ராமன், லட்சுமணன், பரதன், சத்ருகன் ஆகியோருக்கான நான்கு கோயில்களுக்கும் சென்று மக்கள் வழிபாடு செய்கின்றனர். இதனை அங்கிருப்பவர்கள் ‘நாலம்பல தரிசனம்’ என்கின்றனர்.
இதே போன்று, யானைகளுக்கு உணவு வழங்கும் ‘ஆனை ஊட்டு’ நிகழ்ச்சிகள் இந்த மாதத்தில் சிறப்பாக நடத்தப்பெறுகின்றன. இந்த நிகழ்ச்சி திருச்சூரில் உள்ள வடக்கும்நாதன் கோயிலில் மிகச் சிறப்பாக நடத்தப்பெறுகிறது. இந்த ஆணை ஊட்டு நிகழ்வில், யானைகளை வரிசையாக நிற்கவைத்து சந்தனம், குங்குமம் பூசி அவற்றுக்கு கரும்பு, அரிசி, நெய், தேங்காய், வெல்லம் மற்றும் மூலிகை மருந்துகள் சேர்க்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகின்றன.