விரதங்களில் மிக முக்கியமான விரதம் அன்னபூரணி விரதமாகும். மகத்தான சக்தி கொண்ட விரதம் இது. சிவபெருமானே ஞானத்துக்காக அன்னபூரணியிடம் வேண்டி நின்றிருக்கிறார். இதிலிருந்தே அன்னபூரணியின் சிறப்பை நாம் அறிந்து கொள்ள முடியும்.
அன்னபூரணி விரதம் முக்கியமாகத் தீபாவளி சமயம் வரும் மூன்று தினங்களிலும், ஒவ்வொரு மாதத்திலும் வரும் வெள்ளிக்கிழமைகள், மகா சிவராத்திரிக்கு மறுநாள், ஸ்ரீ ராம நவமிக்கு முதல்நாள் வரும் அஷ்டமி தினம் போன்ற நாட்களில் விரதமிருந்து அன்னபூரணியை பூஜிப்பது நல்லது. வாழ்வில் மேலும் மேலும் கஷடங்கள் வந்து கொண்டிருக்கும் குடும்பத்தினர் 48 நாட்கள் தொடர்ந்து அன்னபூரணியை வேண்டி விரதமிருந்து பூஜித்து வந்தால் நிச்சயமாக துன்பங்கள் தீரும்.
அன்னபூரணி விரதம் இருப்பவர்கள் காலையில் நீராடி மனத்தூய்மையுடன் அன்னபூரணியை வேண்டி தங்களது துயரம் தீரப் பிராத்தனை செய்து கொள்ள வேண்டும். மாலை வரை பூரண விரதம் அனுஷ்டிக்க வேண்டும். பசி தாங்காதவர்கள், நோயாளிகள் மட்டும் சிறிது பால் அருந்தலாம். மாலை 6 மணியளவில் பூஜையை மேற்கொள்ள வேண்டும். இப்பூஜையில் அன்னபூரணி விக்கிரகம் வைப்பது முக்கியம். பூஜை செய்பவர்கள் வெண்பட்டு அல்லது கோதுமை நிற நூல்புடவை உடுத்திக் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.
பூஜை செய்யும் இடத்தைச் சுத்தம் செய்து, அங்கு பச்சரிசியினால் மாக்கோலமிட வேண்டும்.
மனைப்பலகையைக் கிழக்கு நோக்கி வைத்து, அதன்மேல் பித்தளைப்படியில் அரிசியை வைத்து, அதன் மேல் அன்னபூரணி விக்கிரகத்தை வைக்க வேண்டும். வடஇந்தியர்கள் அரிசி மீது கோதுமை வைத்துச் செய்வர். அன்னபூரணி சிலைக்கு ஆடை உடுத்தி, கருகமணியை மஞ்சள் சரடில் கோர்த்து அணிவிக்க வேண்டும். ஐந்து வகையான வாசனைமிகு மலர்களால் மாலை கட்டிப் போடவேண்டும். பூஜை செய்பவர் வடக்குப் பார்த்து பலகையில் அமர்ந்து செய்ய வேண்டும். பச்சரிசி மாவினால் பதினாறு விளக்குகள் செய்து சுற்றிலும் வைத்துத் தீபமேற்றவும்.
முதலில் விநாயகப் பெருமானை வணங்கி விட்டு, பிறகு அன்னபூரணியை வணங்க வேண்டும். அட்சதை, புஷ்பங்களைக் கையில் எடுத்து மனமுருகப் பிரார்த்தித்து சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். பிறகு 16 வகை
[ஷோடச] உபசாரம்செய்து, மலர்போட்டு அன்னபூரணிக்குரிய 108 நாமாவளியைச் சொல்லி வழிபட வேண்டும். இறுதியில் பஞ்சதீபம் காட்ட வேண்டும்.
ன்னபூரணிக்கு பிடித்த உணவு பாயாசம். எந்தவிதமான பாயாசத்தையும் அன்னப்பூரணிக்குப் படைத்து வழிபடலாம். உலர் பழவகை, வாழைப்பழம், கற்கண்டு வைத்து வழிபடலாம்.
அன்னபூரணி தாம்பூலத்தின் மீது அதிக விருப்பமுடையவள். எனவே, தாம்பூலம் வைத்து வழிபட வேண்டும்.
இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியா சக்தியாக அன்னபூரணி திகழ்கிறாள். அவளிடம் நம்முடைய சரீரத்தில் உள்ள முக்குணங்களின் தோஷங்களையும் நீக்க வேண்டி மூன்று தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும். கைநிறைய மலர்களை அள்ளி எடுத்து அம்பிகையின் பாதங்களில் சமர்ப்பித்து நான்கு முறை வணங்க வேண்டும்.
அன்னபூரணி அஷ்டகம், அன்னபூரணா பஞ்சரத்னம் சொல்லலாம். சொல்லத் தெரியாதவர்கள் மனதில் அன்னையை நினைத்து மனமுருகி வேண்டிக் கொள்ளலாம். நைவேத்தியம் வைத்துக் கற்பூரம் காட்டி, வழிபட்ட பிறகு உணவு உட்கொண்டு விரத்தை முடிக்கலாம். அன்னபூரணி விரதம் இருந்து அன்னையை வேண்டி, நாம் வேண்டிய வரத்தைப் பெறலாம்.