புதனின் அதி தேவதையாகவும், பிரத்யதி தேவதையாகவும் இருப்பவர் மஹாவிஷ்ணு. ஆகவே விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாகப் புரட்டாசி திகழ்கிறது. இந்த மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில், காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு. ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும் என்பர்.
மகாவிஷ்ணுவைச் சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது விஷ்ணுவை வழிபடுபவர்களின் மரபு வழி நம்பிக்கை. ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்றென்கின்றனர். புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் மிக, மிக சக்தி வாய்ந்தது. புண்ணியத்தை இரட்டிப்பாக்கித் தர வல்லது. எனவே, பெருமாள் பக்தர்கள், புரட்டாசி மாதம் முழுவதும் வழிபாடு செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
புரட்டாசியில் சனிக்கிழமை விரதம் தவிர மகா விஷ்ணுவுக்கான அனந்த விரதம், ஏகாதசி விரதம் உள்பட ஏராளமான விரதங்கள் உள்ளன. புரட்டாசியில் பெருமாளுக்கு இணையாக சிவபெருமானுக்கும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
அம்பாளுக்கு உகந்த நவராத்திரி 9 நாட்கள் வழிபாடும் புரட்டாசியில்தான் வருகிறது. அதோடு லலிதா சஷ்டி விரதம், உமாமகேஸ்வரி விரதம், கேதார கவுரி விரதம் ஆகியவையும் அம்பாளுக்கு உகந்த புண்ணிய தினங்களாகும்.
புரட்டாசியில் வரும் தூர்வாஷ்டமி விரதம், ஜேஷ்டா விரதம் ஆகிய இரு விரதங்களும் விநாயகப் பெருமானுக்கு உரியவையாகும். இந்த நாட்களில் விநாயகரை வழிபட்டால் அவரது அருளை முழுமையாகப் பெறலாம்.
இவை மட்டுமின்றி முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த மகாளய பட்சமும், புரட்டாசி மாதம்தான் வருகிறது. மகாளயபட்ச நாட்களில் முன்னோருக்கு உரிய தர்ப்பணம் கொடுத்தால் பித்ருக்களின் ஆசியை முழுமையாகப் பெற முடியும்.
இப்படி தெய்வங்களின் அருளாசியும், பித்ருக்களின் அருளாசியும் ஒருங்கிணைந்து புரட்டாசியில் கிடைப்பதால் இந்த மாதம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.