ஸ்ரீவைஷ்ணவத்தை நிலை நாட்டிய வேதாந்த தேசிகர் ஸ்ரீஸ்துதி என்னும் ஸ்தோத்திரத்தில் ஸ்ரீமகாலட்சுமியை மங்களத்துக்கெல்லாம் மங்களமானவள் என்று புகழ்ந்து பாடுகிறார்.
குபேரனிடம் செல்வம் இருந்தாலும் அத்துடன் புகழ், ஆரோக்கியம், நல்வாழ்வு போன்ற பல செல்வங்களை உரியவர்களுக்கு வாரி வழங்குபவள் மகாலட்சுமியே. மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு. நித்திய சுமங்கலி என்றும் இவள் அழைக்கப்படுகிறாள். இவள் கணவரின் மார்பில் பொறுமையுடன் இருப்பவள். மகாவிஷ்ணுவுடன் இருக்கும் பொழுது மகாலட்சுமிக்கு இரண்டு கரங்கள். ஆனால் தனியாகச் சன்னதியிலோ அல்லது தனிக்கோவிவிலோ இருக்கும் போது, நான்கு கரங்கள் கொண்டவளாக இருப்பாள். இக்கரங்களில் முன் இரு கரங்கள் அபய வரத ஹஸ்தங்கள். பின் இரண்டு கரங்களில் தாமரை மலர் ஏந்தி இருப்பாள். இவள் தாமரைப் பூவில் வாசம் செய்பவளாக இருந்தாலும், இவளுக்குப் பிரியமான பூ செவ்வந்தி எனப்படும் சாமந்திப்பூதான். இவளுக்கு மஞ்சள் நிறப்பட்டு பிடித்தமானது. சித்தி, புத்தி, போகம், முக்தி தரும் இவளை வழிபாடு செய்வதால் பல்வேறு செல்வ வளங்களையும் பெற முடியும் என்பது தொன்ம நம்பிக்கை.
திருமழிசையாழ்வாருக்கு குழந்தைப் பருவத்தில் ஞானப்பால் ஊட்டிய மகாலட்சுமி பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். இதனால் கோவில்களில் காலையில் கோபூஜை செய்தபின் தரிசனம் ஆரம்பமாகிறது. யானையின் முகத்திலும் குதிரையின் முகத்திலும் லட்சுமி வாசம் செய்கிறாள். வாழை, மாவிலை, எலுமிச்சம்பழம் போன்ற பொருட்களிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால்தான் நற்காரியங்களில் இப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மகாவிஷ்ணுவிற்குப் பிடித்த துளசி லட்சுமியின் அம்சம் ஆகும். எனவே, வீட்டில் துளசி மாடம் வைத்துத் தினமும் அதைச் சுற்றி வந்து வழிபட்டு வந்தால் எல்லாச் செல்வங்களும் கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் இருக்கிறது.
பொதுவாக, மகாலட்சுமி வழிபாட்டின் மூலம் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும். வீடுகளில் லட்சுமி படம் வைத்து வெள்ளிக்கிழமைகளில் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய வேண்டும். உப்பு பாத்திரத்தில் உப்பு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எட்டுவித நல்லெண்ணை கலந்து காலையும் மாலையும் தீபம் ஏற்றினால் லட்சுமிக்கு மிகவும் பிடிக்கும்.
வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள் என்றும், வரலட்சுமி நோன்பைக் கடைபிடித்தவர்கள் பெரும் பயனை அடைவார்கள் என்றும் பத்ம புராணம் கூறுகிறது. வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களிடம் அஷ்டலட்சுமிகளும் மகிழ்ந்து அன்புடன் இருப்பார்கள். அஷ்டலட்சுமிகள் எட்டு விதச் செல்வங்கள் தருவதுடன் தாலிப்பாக்கியத்தையும் வழங்குவார்கள். எனவேதான் மணமான பெண்கள் மகாலட்சுமியைப் போற்ற வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ளுகின்றனர். வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் நீடிப்பதோடு செல்வம், தைரியம், வெற்றி, அரசு பதவி, குழந்தைப்பேறு, கல்வி உள்ளிட்ட எல்லா வளங்களும் வந்து சேரும். சித்ரநேமி என்ற கணதேவதை வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்து தன்னுடைய குஷ்டரோகம் நீங்கப் பெற்றிருக்கிறாள்.
ஆதிசங்கரருக்கு துவாதசியன்று நெல்லிக்கனி தானம் செய்த பெண்மணிக்கு அவர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி மகாலட்சுமி அருளால் பெருஞ்செல்வம் கிடைக்கச் செய்தார்.