நவராத்திரி விழா கொண்டாட்டத்தின் வழியாக பித்ரு பக்ஷத்தில் மனபாரத்தை (சுய மற்றும் வம்சாவழி பாபத்தை) ஆத்ம வழிபாடு மூலம் பாரத்தை இறக்கிவிட்டு உடல், மனம் சுத்தியாகி, பின் அம்பிகை வழிபாட்டின் மூலம் உடலுக்குச் சக்தி சேர்க்க ஒன்பது நாட்கள் ஒன்பது சக்திகளை வழிபடுகிறோம். அந்த ஒன்பது சக்திகள் எவை தெரியுமா?
1. பர்வத ராஜ புத்ரி - அம்பிகையின் பிறப்பு (குண்டலினி செயல்பட ஆரம்பிக்கிறது)
2. பிரம்மசாரிணி - சிவனை மணக்க அம்பிகை மேற்கொண்ட தவம் (சுவாதிஷ்டானம்) (இங்கு துவைதம் அத்வைதமாக மாறும். ஜீவாத்மா பரமாத்மாவுடன் சேர சக்தியாகத் தவம் இருப்பது)
3. சந்திரகண்டா - மணிபூரக சக்ராதான் செயல்புரியும். மனம் புனிதத்தன்மை அடையும்.
4. கூஷ்மாண்டா - அனாஹத சக்கரத்தைப் பிரதிபலிக்கச் செய்யும். தைரியம் மேலிடும். நோய் நொடிகளிலிருந்து தேகம் காக்கப்படும்.
5. ஸ்கந்த மாதா - விசுக்தி சக்கரத்தை தியானிக்கச் செய்யும். தெய்வத்தை, தெய்வ நிலையை அடைய வழி கிடைக்கும். ஒரு வித அமைதி பிறக்கும்.
6. காத்யாயணி - ஆக்ஞா சக்கிரத்தை எண்ணித் தவம் செய்ய வேண்டும். இறைவனை உணர, அடைய மேற்கொள்ளும் தியான முறை.
7. காலராத்ரி - சகஸ்ரார சக்ரத்தினை மனதில் இருத்தி செய்யும் தியான நிலை. இத்தடத்திலிருந்து செய்யும் வழிபாடு, தவத்தினால் எல்லா சித்திகளையும் அடையலாம். பற்றுதல்கள் விலகும்.
8. மகா கவுரி - நவராத்ரியில் அஷ்டமி அன்று மேற்கொள்ளப்படும் வழிபாட்டு தினம். காளி அவதார நாள். முன் ஜென்ம வாசனை அறுபடும் நாள்.
9. சித்திராத்ரி - நவராத்திரியின் ஒன்பதாவது நாளான நவமியன்று எட்டு சித்திகளையும் பெறுவதாக சித்திராத்ரி எனப் பெயர் பெற்ற இத்தேவியின் தினமாகக் கொண்டாடப்படுவது.
இவ்வாறாக உடலிலுள்ள சக்கரங்களை சித்தி செய்து பெறுவதற்கும், இறை வழிபாட்டில் அமைதி, மேன்மை அடையவும் உலகை வெல்லவும் அன்னையின் நவராத்திரி வழிபாடு கொண்டாடப்படுகிறது.