மாலை அணிவிக்கும் நாள்
கார்த்திகை மாதம் முதல் தேதியன்று மாலை அணிய வேண்டும். அன்று நாள் கிழமை பார்க்க வேண்டியதில்லை. அல்லது சபரிமலைக்கு செல்லும் தினத்திற்கு முன் 41 நாட்கள் விரதம் கடைப்பிடிக்கும் படியாக நல்ல நாள் பார்த்து மாலை அணிய வேண்டும்.
மாலை அணியும் முறை
54 அல்லது 108 மணிகள் உள்ள துளசி மணிமாலை அல்லது ருத்திராட்ச மாலையை பல முறை சபரிமலை சென்று வந்த சாமியார் ஒருவரைக் குருவாகக் கொண்டு கோவிலிலோ, விளக்கின் முன்போ அல்லது குருநாதரை வணங்கி அணிய வேண்டும்.
கடை பிடிக்க வேண்டிய விரதங்கள்
* நாள் தோறும் ஆலய வழிபாடு செய்ய வேண்டும். காலை மாலை இரு வேளைகளிலும் நீராடி பஜனை வழிபாடு செய்ய வேண்டும்.
* பிரம்மச்சரிய விரதத்தை கட்டுப்பாடாக கடை பிடிக்க வேண்டும்.
* காலை மாலை 108 சரணங்கள் துளசி, நாட்டுச் சக்கரை, பால் இவற்றுள் ஒன்றைச் சிறிது வைத்து நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும்.
தவிர்க்க வேண்டிய பொருட்கள், செயல்கள்
* குடைப்பிடிப்பது, காலணிகள் உபயோகிப்பது, சவரம் செய்து கொள்வது, புலால் உண்பது, பொய்களவு, சூதாடுதல், போதைப் பொருட்கள் கூடாது.
* பகல் நேரத்தில் தூங்கக் கூடாது. இரவில் படுக்கை விரிக்காமல், தலையணை இல்லாமல் சிறு துண்டை மட்டும் விரித்து உறங்க வேண்டும்.
* துக்ககாரியங்களில் ஜயப்பன்மாரும், அவர் குடும்பத்தவரும் கலந்து கொள்ளக் கூடாது அப்படி கலந்த கொள்ள வேண்டிய நிலையில், அணிந்த மாலையை குருநாதர் மூலம் கழற்றி ஐயப்பன் படத்தில் மாட்டிய பின்னர்தான் கலந்து கொள்ள வேண்டும்.
* குழந்தை பிறந்த வீட்டிற்கு அல்லது மஞ்சள் நீராட்டு விழா வீட்டிற்குச் செல்லக் கூடாது.
இரு முடி கட்டும் முறைகள்
* இரு முடிக்கட்டும் பூஜையை வீட்டிலேயோ அல்லது கோவிலிலோ நடத்த வேண்டும்.
* இரண்டு அறை கொண்ட நீளமான பை ஒன்று செய்த அதில் பூஜை சாமான்கள், கற்பூரம் அபிஷேக, நைவேத்திய சாமான்கள், காணிக்கைப் பணம் இவைகளை முன் கட்டிலும் யாத்திரையின் போது தேவையான உணவுப் பண்டங்கள் பின் கட்டிலும் வைத்துக் கொண்டு பையைத் தலையில் எடுத்துச் செல்ல வேண்டும். இதுதான் இரு முடி எனப்படும்.
* நைவேதியத்திற்கு பசுவின் நெய்யை உருக்கி ஒரு தேங்காயின் கண்ணைத் திறந்து இளநீரை எடுத்து விட்டு அதற்குள் காய்ச்சிய நெய்யை நிரப்பி அதனை இறுக மூட வேண்டும்.
யாத்திரை செல்லும் முறை
* சாஸ்தா பூஜை அன்னதானம் செய்து யாத்திரை புறப்பட வேண்டும்.
* இரு முடிச் சுமந்து வீட்டை விட்டுப் புறப்படும் போது எவரிடமும் விடை பெறக் கூடாது, திரும்பிக் கூடப் பார்ப்பது கூடாது.
* கன்னி ஐயப்பன்மார்கள் யாத்திரை புறப்பட்டதிலிருந்து சன்னிதானம் அடையும் வரை தானே தலையிலிருந்து இரு முடியை இறக்கி வைக்கவோ ஏற்றி கொள்ளவோ கூடாது. குருநாதர் மூலமே இறக்க வேண்டும். ஏற்ற வேண்டும்.