உலகம் முழுவதும் இறைவனை நினைத்துத் தியானம் செய்து, மந்திரச் சொற்களை உச்சரித்து வழிபடுபவர்கள் தங்களது கைகளில் வேண்டுதல் மாலைகளை வைத்திருக்கின்றனர். இந்த வேண்டுதல் மாலைகள் (ஜெப மாலைகள்) இந்து சமய வழிபாட்டிலும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்து சமயத்தினர் பயன்பாட்டிலிருக்கும் வேண்டுதல் மாலைகள் புத்திரஜீவமணி மாலை, சங்குமணி மாலை, பவளமணி மாலை, வைஜந்தி மாலை, ஸ்படிக மாலை, ருத்ராட்ச மாலை, தாமரைமணி மாலை, முத்துமணி மாலை, நவரத்தின மற்றும் உபரத்தின மாலை, சந்தன மாலை, துளசிமணி மாலை, பொன்மணி மாலை, தர்ப்பை பவித்திர முடிச்சு மாலை என்று பல வகைகளாக இருக்கின்றன. வேண்டுதல் மாலையில் 27, 54 மற்றும் 108 என்ற எண்ணிக்கையில் மணிகள் கோர்த்து வைக்கப்பட்டிருக்கும். அவற்றில் தனித்து உயர்ந்திருக்கும் ஒரு மணியானது ‘மேரு’ என்று சொல்லப்படும். இந்த வேண்டுதல் மாலையினைப் பிறரது கண்களில் படுவது போன்று வைத்துக் கொண்டு வேண்டுவதைத் தவிர்க்க வேண்டும். கோவில், மலைப்பகுதி, கோசாலை, மரங்கள் சூழ்ந்த வனம், ஆற்றங்கரை மற்றும் கடற்கரை போன்ற இடங்களில் தனித்து வேண்டுதல் மிகுந்த பயனளிக்கும் என்கின்றனர். ருத்ராட்சம், துளசி போன்ற மணிகளிலான வேண்டுதல் மாலைகளே அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை தவிர, சில வேண்டுதல் மாலைகளை இங்கு காணலாம்.
புத்திரஜீவ மாலை
தமிழில் இருக்கொல்லி, கறிப்பாலை என்றும், சமஸ்கிருதத்தில் புத்திரஜீவ என்றும், ஆங்கிலத்தில் ‘லக்கி பீன்ஸ்’ என்றும் குறிப்பிடப்படும் மரத்தின் பழங்களில் இருந்து பெறப்படும் விதைகள், 108 எண்ணிக்கை கொண்ட மாலையாக கோர்க்கப்பட்டு வேண்டுதல் மாலையாகப் பயன்படுத்தப்படுகிறது. புத்திரஜீவ என்ற பெயருக்கு ஏற்றாற்போல் குழந்தைப்பேறு கிடைக்கச் செய்யும் சக்தி படைத்ததாக இது இருக்கிறது. சூரியன் மற்றும் குரு ஆகிய கிரகங்களின் மந்திரம் அல்லது சந்தான கோபால கிருஷ்ண மந்திரம் போன்றவற்றை இந்த மாலையைக்கொண்டு வேண்டி வழிபாடு செய்தால், புத்திர பாக்கியம் கிடைக்கும்.
சித்த வைத்தியத்தில் இந்த மரத்தின் இலைகளும், விதைகளும் பல்வேறு வைத்திய குணங்களை கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு ஏற்பட்ட குழந்தைப்பேறுக்கான தடைகளை அகற்ற இந்த மரத்தின் விதைகள் பயன்படுத்தப்படுகின்றன.
பஞ்சபூத மாலை
இவ்வகை மாலைகள் அதிகமான பயன்பாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிவப்பு சந்தனம், தாமரை மணி, ருத்ராட்சம், ஸ்படிகம் மற்றும் துளசி ஆகிய மணிகளின் தொகுப்பாக உள்ள பஞ்சபூத மாலை, பஞ்சபூதங்களின் துணையைப் பெற உதவி செய்கிறது. மேலும் எதிர்மறை சக்திகளை விலக்கப் பயன்படுகிறது. பொதுவாக, வேள்வி, யக்ஞம், பூஜை, கோவில் திருவிழா மற்றும் தெய்வ தரிசனம் போன்றவற்றில் ஈடுபடும் ஒரு சிலர் இவ்வகை மாலையை அணிவது வழக்கம்.
சிவப்பு சந்தனம், மன உறுதியையும், ஆன்மிக சக்தியையும் வழங்கும். ஸ்படிகம், மன ஒருமையோடு உடலுக்கு குளிர்ச்யைத் தந்து, மன இறுக்கத்தை விலக்கி உள்ளுணர்வை மேம்படுத்தும். தாமரை மணி, மகாலட்சுமியின் அருளை அள்ளித்தரும். பஞ்சமுக ருத்ராட்சம், இரத்த அழுத்தம் மற்றும் அகால மரணம் ஆகியவற்றைத் தவிர்க்க உதவும். இதே போன்று, துளசி உடலின் வெப்பத்தை சரியாகப் பராமரிப்பதோடு, மகாவிஷ்ணுவின் அருளையும் அள்ளித்தரும். இந்த ஐந்து மணிகளின் கலவையாக இருக்கும் பஞ்சபூத மாலை ஆன்மிக முன்னேற்றத்துக்குப் பயன்படுவதாக ஆன்மிக கோட்பாட்டளர்கள் தெரிவிக்கின்றனர்.
தாமரைமணி மாலை
தாமரைமணியினைப் பொருளாதார முன்னேற்றத்தைத் தரவல்ல பிரபஞ்ச ரகசியங்களில் ஒன்றாக, நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். பணத்தைக் கவரும் பல வகை பொருட்களில் தாமரைமணிக்கு முதலிடம் என்பதான நம்பிக்கையும் இருக்கிறது. மகாலட்சுமியின் வடிவமாகக் கருதப்படும் தாமரைப் பூவிலிருந்து கிடைக்கும் மணியாக இருப்பதால், லட்சுமி அருள் பெற்றது என்றும் சொல்வதுண்டு. நல்ல எண்ணங்கள் உருவாகவும், அவற்றை செயல்முறைப்படுத்தும் சக்தியை அளிக்கும் சக்தி பெற்றதாகவும் தாமரைமணி கருதப்படுகிறது. இனம், மொழி, சமயம் என்ற வேறுபாடுகள் இல்லாமல், இந்த மாலை பயன்பாட்டில் உள்ளது.
பவள மாலை
செவ்வாய்க்குரிய ரத்தினம் என்ற நிலையிலிருக்கும் பவளம், ஜாதக ரீதியாகச் செவ்வாயின் பாதிப்புகளை தடுக்கும் விதத்தில் வேண்டுதல் மாலையாக பயன்படுகிறது. இவ்வகை மாலைகள் 54 என்ற எண்ணிக்கையில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், கணபதி, முருகன், துர்க்கை மற்றும் அனுமன் ஆகிய தெய்வங்களின் மீதான வேண்டுதல் அல்லது பூஜை ஆகியவற்றில் இவ்வகை மாலைகள் பெரிதும் பயன்படுகின்றன.
வைஜந்தி மாலை
வைஜந்தி என்ற செடி வகையில் இருந்து கிடைக்கும் வெள்ளை நிற விதைகளைக் கோர்த்து உருவாக்கப்படும் வேண்டுதல் மாலை இது. ஸ்ரீகிருஷ்ணரின் தொடர்புடைய இடங்களான மதுரா, பிருந்தாவனம், கோகுலம் மற்றும் ஆக்ரா போன்ற இடங்களிலிருந்து கிடைக்கப்பெறும் வைஜந்தி மலர்களின் விதைகள் இம்மாலை உருவாக்கத்திற்கு அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. வசீகர சக்தி மற்றும் விருப்பத் தேவதைகளின் தரிசனம் போன்ற ஆன்மிகச் செயல்பாடுகளுக்காக இந்த மாலையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இம்மாலை, கிருஷ்ணரால் ராதைக்கும், ராமரால் சீதைக்கும் தரப்பட்டதால், பெயருக்கு ஏற்றாற்போல வெற்றிகளை தரும் மாலையாக இந்த வைஜந்தி மாலை இருக்கிறது. மகாவிஷ்ணு மற்றும் ராஜராஜேஸ்வரி ஆகிய தெய்வங்கள் இம்மாலையை அணிந்திருப்பதாக பல புராணக் குறிப்புகள் இருக்கின்றன. ருத்ராட்சத்திற்கு அடுத்தபடியாக இயற்கையாகவே மத்தியில் துளைகள் கொண்டவை இந்தச் செடியின் விதைகள். கருப்பு நிறமுள்ள வைஜந்தி விதை மாலைகள் சனிக்கிரக பாதிப்புகளை தடுக்க உதவும் என்பவர்களும் உள்ளனர். எளிதாக உடையக்கூடிய தன்மை கொண்டவையாக இவை இருப்பதால், கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.
மஞ்சள் விதை மாலை
மஞ்சள் என்பது ஆயுர்வேதத்தில் சிறந்த கிருமி நாசினியாகவும், மருத்துவக் குணமுடையப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆன்மிக வழியாக மஞ்சள் கொண்டு உருவாக்கப்பட்ட ஜெப மாலைகள், தசமகா வித்யைகளில் ஒன்றான ‘பகளாமுகி சாதனா’ முறையில் பயன்படுத்தப்படுகின்றன. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தகுந்த ஆயுர்வேத அல்லது சித்த மருத்துவ ஆலோசனைகளுக்கு பிறகு மஞ்சளால் தயாரிக்கப்பட்ட மாலையை அணிந்து கொள்ளும் முறையும் இருந்து வருகிது. மன அமைதியை ஏற்படுத்துவதோடு, மனதின் அழுத்தத்தையும் பெருமளவில் குறைக்கும் சக்தி பெற்றவையாக மஞ்சள் விதை மாலைகள் இருக்கின்றன.
எதிரிகள் தொல்லை மற்றும் கடன்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களது வழிபாட்டு முறைகளின்போது மஞ்சள் மாலையை அணிந்து கொண்டால் வெற்றி கிட்டும். ஜாதக வழியாக, குரு கிரகத்தின் நன்மைகளைப் பெறவும், போட்டிகள், வழக்குகள் போன்றவற்றில் வெற்றி பெறவும் விரும்புபவர்கள், இந்த மாலையை அணிந்து சிறந்த பலனைப் பெற முடியும்.
வேண்டுதல் மாலைகளில் நிறைய வகைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்ற போதும், மேற்கண்ட வேண்டுதல் மாலைகள் புதுமையும், பயன்களும் கொண்டவை.