சிவபெருமான் உலகத்தை அழித்து மீண்டும் புதிதாக உருவாக்கத் திட்டமிட்டார். அதனை அறிந்த பிரம்மன் அவரிடம் மீண்டும் உலகத்தை எப்படி உருவாக்குவது? எனக் கேட்டார். சிவபெருமான் ஒரு கும்பத்தில் அமிர்தத்தை நிரப்பி அதை மேரு மலையின் உச்சியில் வைக்கச் சொன்னார். பிரளயத்திற்கு பிறகு, உலகம் அழிந்த பின்பு, மீண்டும் அதனை உருவாக்க அந்த அமிர்தக் கலசத்தை வைத்த இடத்திலிருந்து பயன்படுத்தச் சொன்னார். பிரம்மனும் மாசி மாதத்தில் மக நட்சத்திரம் தோன்றிய நாளில் சிவபெருமான் சொன்னபடி மீண்டும் புதிய உலகை உருவாக்கினார். அந்த இடம் கும்பக்கோணம் எனப் பெயர் பெற்றது. இந்த நாளில் சிவபெருமானின் சக்தி முழுமையாக அண்டம் முழுவதும் நிறைந்திருக்கும் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன.
இதே போன்று, இன்னொரு கதையும் சொல்லப்படுகிறது. திருவண்ணாமலையில் வல்லாளர் என்பவர் அரசாண்டு வந்தார். அவருக்குக் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்தது. இந்நிலையில் சிவபெருமான் அவர் முன்பாக ஒரு பாலகனாகத் தோன்றி, அவர் இறக்கும் தருவாயில் அவரதும் இறுதிச் சடங்குகளைச் செய்வதாக வாக்களித்தார். அதன் பிறகு, அந்த அரசர் இறந்த நாளில் சிவபெருமான் அவரது இறுதிச் சடங்குகளைச் செய்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. தற்போதும் மாசி மகம் நாளில் சிவபெருமான் பூமிக்கு வந்து அந்த அரசருக்குரிய சடங்குகளைச் செய்வதாகக் கருதப்படுகிறது.
மாசி மக நாளில் தீர்த்தமாடுவது “கடலாடி” எனப்படுகிறது. மறைந்த முன்னோர்களுக்குப் பித்ரு கடன் செய்ய உகந்த நாளாகக் கருதப்படுகிறது. ஜாதகத்தில் பித்ரு தோஷம் நீங்க மாசி மகம் மிகச் சிறந்த நாளாகும். மாசி மகத்தன்று கோவிலில் தெய்வங்களை தெப்பக்குளம், நீர்நிலைகளில் நீராட்டுவார்கள். இது தீர்த்தவாரி என்று சொல்லப்படுகிறது. தேவர்களே இந்நாளில் தீர்த்தமாடுவது இதன் சிறப்பை நமக்கு எடுத்துரைக்கும். இந்த நாளில் சூரியன் கும்ப ராசியிலும், சந்திரன் சிம்ம ராசியிலும் சஞ்சாரம் செய்வார்கள். அன்று சந்திரன் மகம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். மகம் நட்சத்திரம் என்பது கேது பகவான் அதிபதியாக வரும் நட்சத்திரம். இதற்கு “பித்ருதேவ நட்சத்திரம்” என்றும் பெயர் உண்டு. இந்த நாளில் புனித நீர்நிலைகளில் நீராடுவது பிதுர் மஹாஸ்நானம் என்று கூறப்படுகிறது. சிம்ம ராசியில் குரு பகவான் மற்றும் சந்திரன் மக நட்சத்திரத்திலும் சஞ்சாரம் செய்யும் காலத்தில் வரும் பௌர்ணமி நாளே மகா மகம் ஆக கொண்டாடப்படுகிறது. இது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் நிகழ்வாகும். ஆண்டுதோறும் மாசி மகம் கும்பகோணத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கும்பகோணம் மகா மகம் குளத்தில் மக்கள் அதிகாலை முதல் புனித நீராடி இறைவனை வழிபடுவார்கள். நீர் நிலைகளில் நீராடுவதால் நம்முடைய பாவங்கள் நீங்கிப் புண்ணியம் பெருகும் என்பது நம்பிக்கை. அன்றைய நாளில் நீர் நிலைகளில் நீராட முடியாதவர்கள், சிவாலயங்களுக்குச் சென்று சிவபெருமான் - பார்வதியை வழிபடுதல் நன்று.
மேலும் சில சிறப்புகள்;
* மாசி மக நன்னாளில் தான் பார்வதி தேவி தாட்சாயணியாகத் தோன்றினார்.
* மாசி மக நாளில் மகாவிஷ்ணு தோற்றமெடுத்த திருநாளாகும்.
* பாதாளலோகத்தில் இருந்து பூலோகத்தைப் பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிக்கொணர்ந்த நாள்.
* மாசி மகத்தன்று காமதகன விழா நடைபெறும்.
* மாசி மகத் திருநாளில் நெல்லையப்பர் கோவிலில் திருநாவுக்கரசருக்கு “அப்பர்த்தெப்பம்” என்று தெப்ப விழா நடக்கிறது.
* முருகப்பெருமான் தன்னுடைய தந்தை சிவபெருமானுக்கு மந்திர உபதேசம் செய்வித்த நாள்.
* ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், இந்நாளில் முருகப் பெருமானை வழிபட வேண்டும்.
* மந்திர உபதேசம் வேண்டித் திருக்கோஷ்டியூர் நம்பி அவர்களிடம் ஸ்ரீ ராமானுஜர் 18 முறை தேடி வந்து உபதேசம் பெற்றத் திருக்கோஷ்டியூரில் ஸ்ரீ சௌமியநாராயண பெருமாள் கோவிலில் இருக்கும் மாசி மகக் கிணறு என்னும் சிம்மக் கிணற்றில் மக நாளில் நீராடுவது சிறப்பு. மாசி மகத்தன்று இங்கு நடைபெறும் தெப்பத் திரு விழாவில் மக்கள் தங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேறத் தெப்பக்குளத்தில் தீபமேற்றி வழிபடுவார்கள்.
* உயர் கல்வி பயில நினைப்பவர்களும், ஆராய்ச்சி தொடர்பான படிப்பினைப் படிக்க விரும்புபவர்களும் மாசி மக நாளில் அதனைத் தொடங்கினால், தடையின்றி முடியும் என்பது நம்பிக்கை.
* இந்நாளில் செய்யும் அன்னதானத்தின் மூலம் பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை.
* மாசி மக நாளில் பெறும் மந்திர உபதேசம் பன்மடங்கு பலனைத் தரும்.
* ராகுகேது தோஷம் மற்றும், கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இந்நாளில் புனித நீராடி சிவதரிசனம் செய்வதால் தடைகள் நீங்கும்.
* சதுரகிரி, திருவண்ணாமலை, பர்வதமலை, திருநீர்மலை, திருக்கழுகுன்றமலை போன்ற மலைத்தலங்களில் கிரிவலம் வருவது வாழ்வில் பல ஏற்றங்களைத் தரும்.