காலை நேரத்தில் தாமரை, புரசம்பூ, துளசி, நவமல்லிகை, நந்தியாவட்டை, மந்தாரை, முல்லை, சண்பகம், புன்னாகம், (தாழை – இம்மலர் சிவவழிபாட்டில் பயன்படுத்தலாகாதது) ஆகிய பத்துவித மலர்களால் வழிபட வேண்டும். நடுப்பகலில் வெண்தாமரை, அரளி, புரசு, துளசி, நெய்தல், வில்வம், சங்குபுஷ்பம், மருதாணி, கோவிதாரம், ஓரிதழ் ஆகியன நன்மை தரும். மாலையில் செந்தாமரை, அல்லி, மல்லிகை, ஜாதிமுல்லை, மருக்கொழுந்து, வெட்டிவேர், கஜகர்ணிகை, துளசி, வில்வம் ஆகியன உகந்தன.
அஷ்ட புஷ்பங்கள்
அறுகு, சண்பகம், புன்னாகம், நந்தியாவட்டை, பாதிரி, பிருகதி, அரளி, தும்பை ஆகிய எட்டும் அஷ்ட புஷ்பங்கள் எனப்படுகின்றன.
பயன்படுத்தக் கூடிய நாட்கள்
தாமரை ஐந்து நாட்களுக்குள்ளும், அரளி மூன்று நாட்களுக்குள்ளும், வில்வம் ஆறு மாதத்திற்குள்ளும், துளசி மூன்று மாதத்திற்குள்ளும், தாழம்பூ ஐந்து நாட்களுக்குள்ளும், நெய்தல் மூன்று நாட்களுக்குள்ளும், சண்பகம் ஒரே நாளுக்குள்ளும், விஷ்ணுகிரந்தி மூன்று நாட்களுக்குள்ளும், விளாமிச்சை எப்போதும் பயன்படுத்தலாம்.
கையிற்கொண்டு வந்தது, தானாக விழுந்தது, காய்ந்தது, நுகர்ந்து பார்க்கப்பட்டது, அசுத்தமான இடம், பொருள்களில் வைக்கப்பட்டது ஆகியன பூஜைக்கு ஆகாதவை. முழு மலராகவேச் சாத்த வேண்டும். மலர்களைக் கிள்ளிச் சாத்தக்கூடாது. இலைகளைக் கிள்ளிச் சாத்தலாம். வில்வம், துளசி முதலியவற்றைத் தளமாகச் சாத்த வேண்டும்.
பூஜைக்குரிய இலைகள் (பத்திரங்கள்)
துளசி, முகிழ், சண்பகம், தாமரை, வில்வம், கல்ஹாரம், மருக்கொழுந்து, மருதாணி, தர்ப்பம், அறுகு, அசிவல்லி, நாயுறுவி, விஷ்ணுகிரந்தி, நெல்லி முதலியவற்றின் இலைகள் பூஜைக்குரியன.
தேவர்களுக்கு ஆகாத மலர்கள்
அட்சதை, வெள்ளெருக்கு, ஊமத்தை ஆகியன விஷ்ணுவுக்கு ஆகாதாம். செம்பரத்தை, தாழம்பூ, குந்தம், கேசரம், குடஜம், ஜபாபுஷ்பம் இவை சிவனுக்கு ஆகாதன. அறுகு, வெள்ளெருக்கு, மந்தாரம் இவை அம்மைக்கு ஆகாதன. வில்வம் சூரியனுக்கு கூடாது. துளசி விநாயகருக்குக் கூடாது.
மூன்று தளங்களை உடைய வில்வம் சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்கள், சோம, சூரிய, அக்னி ஆகிய முக்கண்கள் மும்மூர்த்திகள் ஆகிய தன்மைகள் பெற்றன. மூன்று தளங்களும் இச்சை, ஞானம், கிரியை என்ற மூன்று சக்திகளின் வடிவம் என்றும் சொல்வர். மூன்று பிறப்புக்களில் செய்த பாவத்தைப் போக்கும்.