வைணவத்தைப் பின்பற்றுபவர்கள், பஞ்ச ஸம்ஸ்காரம் எனும் செயல்பாடுகளை அறிந்து அதன்படி வாழ வேண்டும் என்று வைணவ நெறிமுறைகள் சொல்கின்றன.
பஞ்ச ஸம்ஸ்காரம் என்பது ஐந்து ஸம்ஸ்காரங்களை உள்ளடக்கியது. தாபம், புண்ட்ரம், நாமம், மந்த்ரம் மற்றும் யாகம்.
தாப ஸம்ஸ்காரம்
ஞானம் பெற விரும்பும் ஆத்மா எந்த உடலில் உள்ளதோ, அவ்வுடல் முதலில் தூய்மை பெற வேண்டும். அது வெறும் நீரால் மட்டுமே அமையக்கூடியது அல்ல. ஸ்வாமியான விஷ்ணுவின் அடையாளங்கள் ஆகிற சங்கசக்ரங்கள் முதலானவற்றை தரிக்க வேண்டும். திருவாழி மற்றும் திருச்சக்கரங்களின் அடையாளங்களை அதற்கென வளர்த்த பவித்ரமான ஹோம அக்னியில் காய்ச்சி சக்கரத்தினால் வலது தோளிலும், சங்கத்தினால் இடது தோளிலும் அடையாளம் இடுவார் ஆசார்யன் ஸ்வாமி. பெண்கள் விவாஹம் ஆனவுடனும், ஆண்கள் உபநயனம் ஆனவுடனும் சமாஸ்ரயணம் செய்து கொள்ள வேண்டும்.
புண்ட்ர ஸம்ஸ்காரம்
ஸ்ரீவைஷ்ணவக் குடும்பங்களில் பிறந்த குழந்தைகள் சிறு வயதில் இருந்தே நெற்றியில் திருமண்காப்பு இட்டுக்கொள்ள வேண்டும். ஸமாச்ரயண காலத்தில் ஆசார்யன் நாம் பகவானின் அடிமை என்பதற்கு அடையாளமாக நமது உடலில் உசிதமான இடங்களில் கேசவன் முதலான பன்னிரண்டு நாமங்களையும், இலக்குமியின் திருநாமங்களையும் கூறி ஆசார்யன் இடுவது புண்ட்ர ஸம்ஸ்காரம் ஆகும். தினந்தோறும் முக்காலங்களிலும் அனுஷ்டிக்க வேண்டிய ஸந்த்யாவந்தனத்தின் போதும், பித்ருதர்ப்பணம் மற்றும் ஸ்ரார்த்தம் முதலான நித்ய நைமித்திக கர்மங்களைச் செய்யும் போதும் ஊர்த்வபுண்டரம் அணிந்த பின்பே அனுஷ்டிக்க வேண்டும்.
நாம ஸம்ஸ்காரம்
பஞ்ச ஸம்ஸ்காரங்களில் மூன்றாவது ஸம்ஸ்காரம் நாம ஸம்ஸ்காரம். நாம ஸம்ஸ்காரம் என்றால் பெயரிடுவது. தாஸ்ய நாமம் தரித்தல். நம் பெற்றோர்களால் இடப்படும் பெயர்கள் சரீரத்தை மனதில் கொண்டே இடப்படுகின்றன. ஆனால் இந்த சரீரமானது ஒவ்வொரு பிறவியிலும் மாறிக்கொண்டே இருக்கும். எப்போதுமே மாறாதிருக்கும் இந்த ஆத்மாவுக்கு அழியாத பெயரான தாஸன் என்ற சொல்லுடன் கூடிய ஒரு திருநாமத்தை சத்சிஷ்யனுக்கு சதாசார்யன் சூட்டுவார். முதலில் பகவந்நாமத்தையும் கடைசியில் தாஸ பதத்தையும் சேர்த்து அமைந்திருக்கக் கூடிய திருநாமம். பகவத் சம்பந்தம் பெற்று ஸ்ரீவைஷ்ணவன் ஆவதற்கு இந்த ஸம்ஸ்காரம் முக்கியமான ஸம்ஸ்காரம் ஆகும் (உதாரணம்: ராமானுஜ தாஸன் / மதுரகவி தாஸன்)
மந்த்ர ஸம்ஸ்காரம்
தாப ஸம்ஸ்காரம், புண்ட்ர ஸம்ஸ்காரம் மற்றும் நாம ஸம்ஸ்காரம் ஆகியவை ஆன பிறகுதான் சத்சிஷ்யனுக்கு இரகசிய மந்த்ரங்களை உபதேசம் பெறக்கூடிய தகுதி ஏற்படுகிறது. முதலிலே திருமந்திரம், அதன் விவரணமான த்வயம் மற்றும் சரம ஸ்லோகம் ஆகிய மந்திரங்களை ஆசார்யன் ஸ்வாமி சத்சிஷ்யனின் திருச்செவியிலே உபதேசிப்பார். இந்த மூன்று மந்திரங்களையும் அவரவர்களுடைய ஆச்சார்யனிடமிருந்து உபதேசமாகப் பெற்று அதன்படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டியது மிகவும் அவசியம். த்வய மந்திரத்திற்கு ஒத்ததும் மிக்கதும் எதுவும் இல்லாமையால் மந்த்ரரத்னம் எனப்படுகிறது. சத்சிஷ்யன் மந்திரத்தை நியமனத்துடன் கற்ற பின்பு ஆசார்யனை பக்தியுடன் ஆராதிக்கக் கடவன். தமது ஆயுள் உள்ளவரை ஆச்சார்யனுக்கு பரதந்த்ரனாகவே இருக்கக்கடவன். அதாவது ஆசார்யன் இட்ட வழக்காக இருக்க வேண்டும்.
யாக ஸம்ஸ்காரம்
பஞ்ச சம்ஸ்காரத்தில் ஐந்தாவது ஸம்ஸ்காரம் யாக ஸம்ஸ்காரம். ஆசார்யன் சத்சிஷ்யனை எம்பெருமானிடத்திலே அழைத்துச் சென்று “இவன் இராமாநுஜனடியான்” இவனை மங்களாசாசன பரனாக ஏற்று இவன் திருக்கைகளால் திருவாராதனம் கண்டருளவேணும் என்று ப்ரார்தித்து ஏற்றுக்கொள்ளப் பண்ணுகிறார் ஸதாசார்யன். ஆச்சார்ய திருவடி சம்பந்தம் பெற்றவன் ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணங்களோடு தினமும் அவரவர் அகத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு திருவாராதனம் சமர்ப்பிக்கவேண்டும். கைங்கர்யத்தில் ஊற்றமே மிகவும் அவசியமானது, ஆகையால் நமக்குள்ள அவகாசத்திற்குச் சேர திருவாராதனத்தை அமைத்துக்கொள்ளலாம். திருவாராதன சமயத்தில் எம்பெருமானுக்கு கண்டருளப்பட்ட ப்ரஸாதத்தையே நாமும் உட்கொள்ளவேண்டும். எம்பெருமானுக்கு கண்டருளப்பண்ணப்படாத அன்னத்தை உண்பது பெரும்பாபமாகும். திருவாராதனமும் நித்யமும் பண்ணுவோம், எம்பெருமானுக்கு கண்டருளப் பண்ணப்பட்ட ப்ரஸாதத்தையே உட்கொண்டு ஆச்சார்ய அனுகிருஹத்துடன் வாழ்வோம்.