ஈசனின் மகிமைகளைக் காணக் காண தேவர்கள் அவர் அருள்கடாக்ஷம் தங்களுக்கு என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்பினர். அவரை ஆராதித்துத் தினமும் பூஜிக்கத் தங்களுக்குச் சிவலிங்கங்கள் கிடைக்கச் செய்யுமாறு விஷ்ணுவை வேண்டினர். அவர்கள் கோரிக்கையை ஏற்ற விஷ்ணு, தேவதச்சனாகிய விசுவகர்மாவிடம் அவர்கள் விரும்பும்படி சிவலிங்கங்களை உருவாக்கித் தரச் சொன்னார்.
விசுவகர்மா, தேவர்களது அந்தஸ்துக்கேற்ப ஒவ்வொருவருக்கும் சிவலிங்கங்கள் செய்து அளித்தான்.
இந்திரனுக்குப் பத்மராகத்தால் செய்யப்பட்ட லிங்கம் கிடைத்தது. குபேரனுக்கு ஸ்வர்ண லிங்கமும், யமனுக்கு கோமேதக லிங்கமும் கொடுக்கப்பட்டன. வருணன் நீல லிங்கத்தைப் பெற்றான். விஷ்ணு இந்திர நீலத்தால் செய்யப்பட்ட அழகிய லிங்கத்தைப் பெற்றார். பிரம்மனும் ஸ்வர்ணத்தால் செய்யப்பட்ட லிங்கத்தைப் பெற்றார். அஷ்ட வசுக்களும் விசுவ தேவர்களும் வெள்ளியாலான லிங்கத்தைப் பெற்றார்கள். வாயுவுக்குப் பித்தளை லிங்கம் கிடைத்தது. பார்த்திவ லிங்கத்தை (பார்த்திவ லிங்கம் மணியால் செய்யப்பட்டது) அசுவினி தேவர்கள் பெற்றார்கள்.
பிராமணர்கள் ஸ்படிக லிங்கத்தைப் பெற்றார்கள். துவாதசாதித்தர்களுக்கும், சோமனுக்கும் முத்து லிங்கத்தை வழங்கினான். இலக்குமி தேவிக்கு தாமிர லிங்கத்தையும், வஜ்ர லிங்கத்தை அக்னிக்கும் வழங்கினான். மயன் சந்தன லிங்கம் பெற்றான். அனந்தன் முதலிய நாகராஜர்கள் பவள லிங்கத்தையும், தைத்தியர்களும், அரக்கர்களும் கோமய லிங்கம் எனப்படும் சாணத்தால் செய்யப்பட்ட லிங்கத்தையும் பெற்றார்கள். பிசாசங்களுக்கு இரும்பு லிங்கம் கிடைத்தது. பார்வதி தேவிக்கு நவநீத லிங்கத்தைக் கொடுத்தான் விசுவகர்மா. நிருதி, மரத்தால் செய்யப்பட்ட தாரு லிங்கத்தை அடைந்தான். யோகிகள் பஸ்ம லிங்கத்தைப் பெற்றார்கள். சாயாதேவி மாவினால் செய்யப்பட்ட லிங்கத்தையும், சரசுவதி இரத்தின லிங்கத்தையும், யக்ஷர்கள் தயிரால் செய்யப்பட்ட லிங்கத்தையும் பெற்றனர்.