ஆஞ்சநேயருக்கு துளசிமாலை, வெற்றிலை மாலை, வடை மாலை சாத்தி வழிபடுவர்.
இதில் வெற்றிலை மாலை சாத்தினால் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளுங்கள்.
ராவணனோடு போரிட்ட ராமர் முடிவில் வெற்றி பெற்றார்.
அச்செய்தியை அசோகவனத்தில் இருக்கும் சீதையிடம் சென்று சொன்னார் ஆஞ்சநேயர்.
அந்தச் செய்தியை கேட்ட சீதை மகிழ்ந்தாள். மகிழ்ச்சியுடன் நற்செய்தி சொன்ன ஆஞ்சநேயருக்கு ஏதாவது பரிசளிக்க வேண்டுமென்று விரும்பினாள் சீதை.
அவள் அமர்ந்திருந்த இடத்தில் வெற்றிலைக் கொடி படர்ந்திருப்பதைக் கண்டாள்.
அந்தக் கொடியைப் பறித்து மாலையாக்கி, “நல்ல செய்தி சொல்ல வந்த உனக்கு இந்த வெற்றிலை மாலையைப் பரிசாக அளிக்கிறேன், ஏற்றுக் கொள்” என்றாள்.
அன்னையின் கையால் கிடைத்த வெற்றிலை மாலையை ஏற்றுக்கொண்ட ஆஞ்சநேயர் மகிழ்ந்தார்.
அதன் அடிப்படையில் பக்தர்கள், தங்கள் செயல்களில் வெற்றி பெற, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தும் வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.