"ஆல்போல் தழைத்து
அறுகுபோல் வேரூன்றி
மூங்கில் போல் சுற்றம் சூழப்
பதினாறும் பெற்று
பெரு வாழ்வு வாழ்க!"
என்று திருமணங்களில் மணமக்களை வாழ்த்தும் கவிதையைக் கேட்டிருக்கிறோம்
இக்கவிதையில் குறிப்பிடப்படும் “பதினாறு பேறு” என்பதைச் சிலர் மக்கட்பேறு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பதினாறு பேறு என்பது பதினாறு வகையான செல்வங்களைக் குறிக்கிறது.
அபிராமி அந்தாதி பதிகப்பாடல் ஒன்று இந்தப் பதினாறு வகையான செல்வங்கள் எவை? எனக் கூறுகிறது. அதில் அபிராமி பட்டர்,
“கலையாத கல்வியும்
குறையாத வயதுமோர்
கபடு வராத நட்பும்
கன்றாத வளமையும்
குன்றாத இளமையும்
கழுபிணி யிலாத உடலும்
சலியாத மனமும்
அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும்
மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும்
கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும்
உதவிப் பெரிய தொண்டரொடு
கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே
ஆதி கடவூரின் வாழ்வே...”
எனப் பதினாறு பேறு பற்றித் தெளிவாகப் பாடியுள்ளார்.
அவர் குறிப்பிடும் பதினாறு வகையான பேறுகள் இவைதான்;
1. கலையாத கல்வி - வெற்றிக்கு வழிகாட்டக்கூடிய கல்வி
2 . குறையாத வயது - நீண்ட ஆயுள்
3 . கபடு வராத நட்பு - நம்பிக்கையான நல்ல நண்பர்கள்
4. கன்றாத வளமை - வாழ்க்கைக்குத் தேவையான குறைவில்லாச் செல்வம்
5. குன்றாத இளமை - உழைப்புக்குத் தளராத உடல் வலிமை
6. கழு பிணி இல்லா உடல் - எந்தவித நோய்நொடியும் இல்லாத உடல் நலம்
7. சலியாத மனம் - எதற்கும் கலங்காத மனத்திடம்
8. அன்பகலாத மனைவி - எக்காலத்திலும் மாறாத அன்பைத் தரும் இனிய மனைவி
9. தவறாத சந்தானம் - அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் இவற்றில் எதுவும் குறைவில்லாக் குழந்தைகள்
10. தாழாத கீர்த்தி - மென்மேலும் பெருகி வரும் புகழ்
11. மாறாத வார்த்தை - சொல் பிறழாமை
12. தடைகள் வாராத கொடை - இல்லை என்று சொல்லாது எல்லோருக்கும் வழங்கும் நற்பண்பு
13. தொலையாத நிதியம் - பணத்தைச் சிக்கனமாகக் கையாளும் நிதி மேலாண்மை
14. கோணாத கோல் - நேர்மையும் திறமையும் கொண்ட குடும்ப நிர்வாகப் பண்பு
15. துன்பம் இல்லா வாழ்வு - வாழ்வில் துன்பமே வராத நற்பேறு
16. துய்ய நின் பாதத்தில் அன்பு - இறை நம்பிக்கை.