சைவ சமயக் கட்டுப்பாடுகளும் கோட்பாடுகளும்
பா. காருண்யா
இந்து (சைவ) சமயமானது இயமம், நியமம் எனும் இரு நன்னெறிக் கோட்பாடுகளைக் குறிப்பிடுகிறது. இயமங்கள் என்பது “செய்யத் தகாதவை”. செய்யத்தகாதவைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் நமது இச்சை மன இயல்பு (விலங்கு மனம்) கட்டுப்பாட்டில் வருகிறது. நியமங்கள் என்பது “செய்ய வேண்டியவை”. செய வேண்டியவைகளைப் பின்பற்றுவதன் மூலம் சமய ஈடுபடும் கலாச்சார ஈடுபாடும் மேலும் அதிகரித்து, நமது ஆன்மாவின் தூயத் தன்மையும் வெளிப்படுகிறது. இயமங்கள், நியமங்கள் நமது யோக வாழ்வை வலுப்படுத்த அடிப்படைகளை வழங்குவதுடன், சிவனை அடையும் பாதையில் அவை நம்மை ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஆண்டும் ஊன்றி நிலைபெறச் செய்கிறது.
இயமம் எனும் பத்து கட்டுப்பாடுகள்
1. அகிம்சை
துன்புறுத்தாமை. உமது செயலாலோ அல்லது வாக்காலோ அல்லது எண்ணத்தாலோ கனவிலும் கூட பிறருக்கு நாம் தீங்கிழைத்தல் கூடாது. யாரையும் பயமுறுத்தாமல், யாருக்கும் வலியோ, காயமோ ஏற்படுத்தாமல் ஓர் அன்பான வாழ்க்கை வாழுங்கள். ஒவ்வொருவரிடத்திலும் இறைவனைக் காணுங்கள். சைவ உணவை உண்ணுங்கள்.
2. சத்தியம்
உண்மை. உண்மையான, அன்பான, நன்மையான, அவசியமான விஷயத்தை மட்டுமே பேசுங்கள். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுங்கள். குடும்பம் அல்லது நண்பர்களிடம் ரகசியத்தை மறைக்காதீர்கள். கலந்துரையாடும் போது சரியாகவும் மனம் திறந்தும் பேசுங்கள். பிறரை ஏமாற்றாதீர்கள். உங்கள் தோல்விகளை ஒப்புக்கொள்ளுங்கள். ரகசியமாகக் கிசுகிசுப்பதோ, பின்னால் பேசுவதோ அல்லது பொய் சொல்லுவதோ கூடாது.
3. அஸ்தேயம்
திருடாமை. திருடக்கூடாது. ஆசைகளைக் கட்டுப்படுத்தி குடும்ப வருமானத்துக்கு ஏற்றபடி வாழுங்கள். மற்றவர் பொருள்மீது ஆசைப்படக்கூடாது. பிறரிடம் இரவல் வாங்கியப் பொருள்களை தவறாகப் பயன்படுத்தக்கூடாது. சூதாடக்கூடாது. பிறரிடம் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காமல் இருக்கக்கூடாது. அனுமதியின்றி, ஒப்புதலின்றி பிறரின் பெயரையோ, சொற்களையோ, வளத்தையோ அல்லது உரிமையையோ உபயோகிக்கக்கூடாது.
4. பிரம்மச்சரியம்
தெய்வீக நடத்தை. திருமணம் ஆவதற்கு முன் ஆசைகளை அடக்கி பாலியல் உறவைத் திருமணம் ஆகும் வரை பாதுகாக்க வேண்டும். திருமணத்துக்கு முன் பாலியல் சக்தியை கல்வி கற்பதற்கும், திருமணத்துக்குப்பின் குடும்ப வெற்றிக்கும் பயன்படுத்துங்கள். மிதமாக உடையுடுத்தி, மிதமாகப் பேசுங்கள். தூயவர்களின் நட்பை நாடுங்கள். காமப் படங்கள் மற்றும் வன்முறைப் படங்களை தொலைக்காட்சியில், திரைப்படங்களில், சஞ்சிகைகளில், கணினிகளில் பார்ப்பதைத் தவிர்க்கவும்.
5. க்ஷாமா
பொறுமை. மக்களின் சகிக்கமுடியா தன்மையைக் கட்டுப்படுத்தி சூழ்நிலையைப் பொறுக்க முடியாத தன்மையையும் கட்டுப்படுத்த வேண்டும். எதையும் ஏற்றுக் கொள்ளுங்கள். அவசரப்பட வேண்டாம். மற்றவர்கள் உங்களின் போக்குக்கு இணங்கி நடக்க வேண்டுமென்று வற்புறுத்தாமல், அவர்களின் இயல்புப்படி நடக்க விடுங்கள். பிறரிடம் பேசும்போது வாக்கு வாதம் செய்யாமல், குறுக்கே பேசாமல் அல்லது நீங்கள் ஒருவரேப் பேச்சை ஆக்கிரமிக்காமல் இருக்கவும். குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடம் மிக்க பொறுமையாக இருங்கள். கஷ்டமான நேரங்களிலும் நிதானம் தவறாமல் இருக்க வேண்டும்.
6. திரிதி
உறுதியாக இருத்தல். பயம், முடிவெடுக்க முடியாமை, அடிக்கடி மாறுந்தன்மை ஆகியவற்றை போக்கிவிடுங்கள். கவனத்தை சிதறவிடாமல் எதை செய்யவேண்டுமோ அந்தக் காரியத்தை செய்வதில் கண்ணுங் கருத்துமாக இருங்கள். உங்கள் முடிவுகளில் உறுதியாக இருங்கள். உங்கள் லட்சியத்தை அடைய பிரார்த்தனை செய்து நோக்கம், திட்டம், விடாமுயற்சி மற்றும் ஊக்கம் ஆகியவற்றுடன் அடையுங்கள். புகார் செய்யாமல் சாக்கு போக்கு சொல்லாமல் இருங்கள். மனோ உறுதியையும் தைரியத்தையும் உழைக்கும் திறனையும் வளர்த்துக் கொள்ளுங்கள். தடைகளை வெல்லுங்கள்.
7. தயை
இரக்கம். எல்லா உயிர்கள் மீதும் இருக்கும் கொடூரமான மனிதாபமற்ற உணர்வுகளை வெல்லுங்கள். எல்லா இடங்களிலும் இறைவனைக் காணுங்கள். மக்களிடமும், விலங்குகளிடமும், தாவரங்களிடமும், பூமாதேவியிடமும் கருணையோடு இருங்கள். உண்மையாக, தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்டவரை மன்னித்துவிடுங்கள். துன்பத்தால் துவண்டு போயிருப்போரின் தேவைக்கு கருணை காட்டுவதை ஊக்குவியுங்கள். பலவீனமாக இருப்பவர்கள், ஏழைகள், முதியோர்கள் மற்றும் வலியால் துன்பப்படுவோருக்கு உதவி செய்யுங்கள். குடும்பத்தில் நிலவும் சித்திரவதையையும், பிற இடத்தில் நடக்கும் கொடூரங்களையும் எதிர்த்து நில்லுங்கள்.
8. அர்ஜவா
நேர்மை, ஒளிவு மறைவின்றி இருத்தல். மோசடி செய்வதையும், தவறான செயல்களில் ஈடுபடுவதையும் விட்டுவிடுங்கள். உங்கள் நாட்டின் சட்டத்தையும், சமுதாய ஒழுக்கத்தையும் மதித்து நடந்து கொள்ளுங்கள். லஞ்சம் கொடுப்பதோ அல்லது வாங்கவோ கூடாது. யாரையும் ஏமாற்றவோ துரோகம் பண்ணவோக் கூடாது. உங்களுக்கு நீங்களே நேர்மையாக இருங்கள். பிறர் மீது குற்றம் சுமத்தாமல் உங்களின் குறைகளை எதிர்கொண்டு ஏற்றுக் கொள்ளுங்கள். எப்போதும் நேர்மையாக இருங்கள்.
9. மிதாகாரம்
நடுத்தரமாக உணவு உட்கொள்ளல். அதிகமாக சாப்பிடக்கூடாது. மாமிசம், மீன், நத்தை, கோழி அல்லது முட்டை சாப்பிடக்கூடாது. புதிதாக செய்த, உடம்புக்கு சத்தான முழுமையான சைவ உணவை உண்டு மகிழுங்கள். நொறுக்குத் தீனிகளையும், வெள்ளை சீனி, வெள்ளை அரிசி, வெள்ளை மாவு போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவுப் பொருள்களைத் தவிர்க்கவும். குறித்த நேரத்தில் பசியெடுக்கும்போது மட்டுமேச் சாப்பிட வேண்டும். தொந்தரவான சூழ்நிலையில் அல்லது மனம் குழம்பிய நிலையில் சாப்பிடக்கூடாது.
10. சௌச்சம்
தூய்மை. மனம், மெய், மொழியில் தூய்மையற்ற நிலையை தவிர்க்கவும். சுத்தமான ஆரோக்கியமான தேகத்தை வைத்திருங்கள். வீட்டையும் பணியிடத்தையும் குப்பைக்கூளமின்றி தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். அறவழியில் செல்லுங்கள். நல்லோர்களோடு உறவாடுங்கள். கடுமையான சொற்களையோ கீழ்த்தரமான சொற்களையோ சொல்லக்கூடாது.