பிருகு என்று ஒருவர் இருந்தார். பல ஆண்டுகள், ஒரு சிறந்த குருவிடம் கல்வி பயின்ற பின், அவர் தன் வீட்டுக்குத் திரும்பி வந்தார். வீட்டிற்கு வந்தவுடன் குதூகலம், விருந்து எல்லாம் முடிந்த பிறகு, அவரது தந்தை வருணன் அவரிடம், “உன்னிடம் உள்ள சாசுவதமான உண்மை எது?”எனக் கேட்டார்.
மகன் சற்று நேரம் யோசித்த பின், தனக்கு அந்தk கேள்விக்கு விடை தெரியாது என தந்தையிடம் மன்னிப்புக் கூறி, தனது குரு தனக்குக் கற்றுத் தரவில்லை என்று கூறினார். அதற்கு தந்தை, “என் கேள்விக்குப் பதில் கூற இயலாவிட்டால், உன் கல்வி பூரணமாக முடியவில்லை” என்றார். இதனால், கலக்கமடைந்த பிருகு தந்தையிடம், “அப்படி என்றால் நான் என்ன செய்ய வேண்டும்? என் கல்வி எவ்வாறு பூர்த்தியடையும்?”எனக் கேட்டார். அதற்கு வருணன் மிகவும் சாந்தமாக, “தவம் செய். அதுவே சிறந்த கல்வி. காட்டுக்குச் சென்று தவம் செய். என் கேள்விக்கு உனக்குக் கட்டாயம் விடை கிடைக்கும்” என்று கூறினார்.
சில நாட்களுக்குப் பிறகு, தனக்கு விடை கிடைத்து விட்டதாக எண்ணிய மகன், அதைத் தன் தந்தையிடம் பகிர்ந்து கொள்ள விரும்பினான். மகன் தந்தையிடம், “தந்தையே! என்னுடைய பௌதீக உடல், அதாவது ஸ்தூல சரீரமே சாசுவதமான உண்மை. அதுவே அன்னமயக் கோஷம். பௌதீக உடல்நிலை சரியாக இருந்தால் தான், நாம் எதுவும் செய்ய முடியும். உடல் நிலை சரியில்லை என்றால், எதுவும் செய்ய முடியாது” என்று கூறினான். இந்த விடை, தந்தைக்குத் திருப்தி கொடுக்காததால், மகனை மறுபடியும் சரியான விடையைக் கண்டுபிடிக்கக் காட்டுக்கு அனுப்பினார்.
சில வருடங்களுக்குப் பின் திரும்பிய மகன் தந்தையிடம், “நான் கூறியது தவறு. பௌதீக உடலால் மட்டுமே என்ன செய்ய முடியும்?அதற்கு உயிர் வேண்டும்; அதாவது, பிராணன் என்ற சக்தி உடலில் பரவ வேண்டும். இதுவே பிராணமயக் கோஷம். இதுவே மிகவும் முக்கியமானது” என்றான். தந்தை மீண்டும் அதிருப்திப்பட்டு மகனைக் காட்டுக்குச் சென்று விடை கண்டுபிடிக்கும்படி கூறினார்.
சில வருடங்கள் தீவிரமாகத் தவம் செய்த பிறகு, மகன் காட்டிலிருந்து திரும்பி வந்து தந்தையிடம், “நான் கூறிய விடை தவறு. பிராணன் அல்லது உயிர் மட்டுமே முக்கியம் அல்ல; சரியான மனநிலை எப்பொழுதும் இருக்க வேண்டும். மனதைப் பக்குவப்படுத்த வேண்டும். நான் தெளிவான சிந்தனை உள்ளவனாக இருக்க வேண்டும். இதுவே மனோமயக் கோஷம்” என்றான். “மகனே, நீ சரியான பதிலைக் கூறுவதற்கு நேரம் ஆகிவிட்டது அல்லவா?” என வருணர் கவலைப்பட்டுக் கேட்டார்.
மறுபடியும் தவம் செய்து, விடையைப் புரிந்து கொண்டு மகிழ்ச்சியாக பிருகு திரும்பினான். “தந்தையே, கடைசியில் நான் உங்கள் கேள்விக்குப் பதிலைக் கண்டுபிடித்து விட்டேன். என் மதியை உபயோகித்து எது சரி, எது தவறு என்று நான் புரிந்து கொள்ள வேண்டும். அதனால், விஞ்ஞானமயக் கோஷமே என் அடிப்படையான சத்தியம். சரியா?” எனக் கேட்டான்.
உடனே தந்தை “தவறு” என பதிலை நிராகரித்து விட்டார். “நான்கு சந்தர்ப்பங்கள் கொடுத்தும் உன்னால் சரியான பதிலைக் கொடுக்க முடியவில்லை என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம். விட்டு விடு; ஒரு நாள் இந்த கேள்விக்குப் பதில் உன்னைத் தேடி வரும்; அது வரைக் காத்திரு” என தந்தை கூறினார்.
“இல்லை தந்தையே; நான் இந்த கேள்விக்குப் பதிலை தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கின்றேன். எனக்கு கடைசியாக ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்” எனக் கெஞ்சினான்.
இம்முறை தந்தை வெகு நாட்கள், மகனுக்காகக் காத்திருந்தார். தந்தை எதிர்பார்த்ததை விட அதிகமான நாட்கள் கடந்துவிட்டன. பிருகு பலப் பல தசாப்தங்கள் கடந்தும் திரும்பி வரவில்லை. விபரீதமாக ஏதேனும் நடந்திருக்குமோ என எண்ணி, தந்தைக்கும் சற்றுக் கவலையாக இருந்தது. தந்தை மகனைத் தேடிக் காட்டுக்குச் சென்றார். மகனைத் தேடும் போது, காட்டின் ஒரு பகுதியிலிருந்து பிரகாசமான ஒளி, எல்லாத் திசைகளிலும் ஒளிர்ந்தது. அங்கு சென்ற தந்தை பல உணர்வுகளுக்கு ஆளானார். தந்தைக்கு மகிழ்ச்சி, ஆச்சரியம், துக்கம், ஆனந்தம், பெருமை, எனப் பல உணர்வுகள் ஒரே சமயத்தில் ஏற்பட்டன.
அங்கு, பத்மாஸனத்தில் (தாமரை மலரைப் போல்) தியான முத்திரையுடன், ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்த மனிதனின் உடலிலிருந்துதான் ஒளி வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த ஒளியானது ஆயிரம் சூரியன்களுக்குச் சமமானதாக இருந்தது. உலகத்திலேயே, அந்த மனிதரே மிகவும் மன நிறைவு கொண்டவராகத் தென்பட்டார். அம்மனிதரைக் கண்ட ஒரு காட்சியிலேயே, ஒருவரது மனம், மகிழ்ச்சி, சந்தோஷம் மற்றும் ஆனந்தத்தால் நிறைந்து விடும். அது வேறு எவரோ அல்ல; தந்தையின் கேள்விக்கு விடை கண்டு பிடிப்பதற்காக, தவம் செய்யக் காட்டிற்குச் சென்ற பிருகுவே!
வருணர் ஆனந்தக் கண்ணீருடன், தன் மகன் கால்களில் விழுந்து வணங்கி, பய பக்தியுடன் வீடு திரும்பினார்.
தன் மகன் விடையைக் கண்டுபிடித்து விட்டான் எனத் தந்தைக்குத் தெரிந்தது.
பிருகு, விடையின் ஆனந்தத்தில் மூழ்கி இருந்ததால், வீடு திரும்பியவுடன் தன்னிடம் பதிலைக் கூற மறந்து விட்டான் என அறிந்தார்; அவன் ஆனந்தமயக் கோஷத்தைப் பூரணமாக உணர்ந்திருந்தான். மற்ற நான்கு கோஷங்களும் சாஸ்வதம் அல்ல என்றும், ஆனந்தமயக் கோஷத்தின் உண்மையையும் உணர்ந்து, பிருகு சமாதி நிலையை அடைந்து, பரமானந்தத்தில் ஐக்கியம் ஆகி இருந்தார்.
இதிலிருந்து அறிவதென்ன?
அன்னமயக் கோஷம்
ஐந்து உறைகளில் முதலில் இருக்கும் இந்த உறை, பெரும்பாலாக ஸ்தூல சரீரத்தை சார்ந்து உள்ளது. ஒருவன் உண்ணும் உணவு, இந்தக் கோஷத்திற்கு ஆதாரமாக அமைகிறது. ஆரோக்கியமான, வியாதியற்ற பௌதீக உடலை, இயற்கையான உணவு வகைகளாலும், யோகாப்பியாசத்தினால் மட்டுமே அளிக்க முடியும்.
பிராணமயக் கோஷம்
இந்த இரண்டாவது உறை, அன்னமயக் கோஷத்தை விட பெரியதாகவும், சூட்சுமமாகவும் இருக்கின்றது. சுவாசிக்கும் காற்றே இதற்கு சக்தி அளிக்கிறது. ஆரோக்கியமான உடலுக்கு இந்தக் கவச உறையின் ஆரோக்கியம் முக்கியமானது. பிராணமயக் கோஷம் மேம்பட்ட நிலையில் இருந்தால்தான் உடம்பில் ஊக்கமளிக்கின்ற சக்தியும் பரவும்.
மனோமயக் கோஷம்
உணர்ச்சிகளும், மன நிலைகளும் இந்தக் கோஷத்தில் அடங்கியுள்ளன. ஒருவரது எண்ணங்களே இந்தக் கோஷத்திற்கு ஊக்கம் அளிக்கின்றன. நல்ல எண்ணணங்கள் மனதின் மேம்பாட்டுக்கு அறிகுறி.
விஞ்ஞானமயக் கோஷம்
ஒருவரின் புத்தியை இந்தக் கோஷம் வெளிப்படுத்துகிறது. சரி, தவறு; நிலையற்றது, நிலையானது; இன்பம், துன்பம்; இவற்றை பகுத்தறிந்து, முடிவுகளை எடுக்கும் திறன் இந்த கோஷத்திற்கு உட்பட்டது.
ஆனந்தமயக் கோஷம்
இது எல்லாவற்றிலும் பெரிது மற்றும் கடைசியான உறை. இது மற்ற கோஷங்களை விட சூட்சுமமான கோஷம். இதைப் புரிந்து கொள்வது, மற்றும் புரிய வைப்பதும் மிகவும் கடினம். இது இயற்கையாக ஆனந்தமான நிலை. இந்த கோஷத்தைத்தான் காரண தேஹம் என்கிறோம். ஆனந்தம் பிரம்மனின் அவதாரம். அவர் பரமானந்தத்தை அளிப்பவர்.