இந்து சமயத் திருத்தலங்களில் சைவத்திருத்தலங்களில் “வில்வ தீர்த்தம்” எனும் தீர்த்தமும், வைணவத் திருத்தலங்களில் “துளசி தீர்த்தம்” எனும் தீர்த்தமும் பக்தர்களுக்குப் புனிதத் தீர்த்தங்களாக வழங்கப்படுகின்றன. இந்தப் புனிதத் தீர்த்தங்கள் மருத்துவ குணங்களைக் கொண்டதாகவும் இருக்கின்றன.
புனிதத் தீர்த்தம் எப்படித் தயாரிக்கப்படுகிறது?
ஏலம், இலவங்கம், வால்மிளகு, ஜாதிப்பத்திரி, பச்சைக்கற்பூரம் போன்றவைகளில் முதல் நான்கும் வகைக்கு ஒரு பங்கு எடுத்து சூரிய ஒளியில் உலர்த்தி அதனை இடித்துப் பொடித்துக் கொள்ள வேண்டும். பிறகு, பச்சைக் கற்பூரத்தைப் பொடித்து அதனுடன் கலந்து காற்று புகாத பாட்டிலில் அடைத்து வைக்கப்படுகிறது. இப்பொடியினை மூன்று விரல் அளவில் எடுத்து தாமிரச்செம்பு அல்லது பாத்திரத்தில் போட்டு, அதனுடன் நீர் கலந்து வைக்கப்படுகிறது. மறுநாள் காலையில் சைவத் திருத்தலங்களில் இந்தப் புனிதத் தீர்த்தத்துடன் வில்வமும், வைணவத் திருத்தலங்களில் துளசியும் கலந்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்தப் புனிதத் தீர்த்தத்தை அருந்துவதால், இருதயம், இரைப்பை பலம் பெறும். கண்கள் தொடர்பான நோய்கள் அனைத்தும் நீங்கும், நரம்புத்தளர்ச்சி, சளி, சுவாசகாசம் நீங்கும். இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு பெருகும். பித்த ரோகங்கள், வாந்தி, தலைசுற்றல், மயக்கம், வாய்க்கசப்பு, மூச்சடைப்பு, வயிற்று வலி, கழிச்சல், மார்புவலி, மாரடைப்பு போன்றவைகளும் நீங்கும். மேலும், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
வில்வத் தீர்த்தம் தொடர்ந்து அருந்துபவர்களுக்கு வயிற்றுக் கடுப்பு, மேகநோய் நீங்குவதுடன் குடற்புண் (அல்சர்) வராமல் தடுக்கப்படுகிறது. துளசித் தீர்த்தம் தொடந்து அருந்துவதால் புற்றுநோய் வராது.