இந்து சமய வழிபாட்டில் வேம்பு, ஆல், அரசு என பல மரங்கள் வழிபாட்டுக்குரியதாக இருக்கின்றன. இவற்றுள் அரச மர வழிபாடு மிகவும் சிறப்புக்குரியதாக இருக்கிறது. கருவுற்றிருப்பவர்களும், குழந்தைப்பேறு வேண்டுபவர்களும் அரசமரத்தைச் சுற்றி வந்தால் சிறந்த பலன் கிடைக்கும் என்பது தொன்ம நம்பிக்கை. அரசமரத்தைச் சுற்றி வழிபாடு செய்வதில் கிழமைகளுக்கேற்றக் கடவுளை வழிபடுவது மிகச் சிறந்த பலனைக் கொடுக்கும் என்கின்றனர்.
ஞாயிறு - அரசமரத்தை வலம் வந்து சூரியனை வேண்டிக் கொண்டால் அனைத்துத் துன்பங்களும் விலகும்.
திங்கள் - சிவபெருமானை மலர்களால் பூஜித்து அரசமரத்தை வலம் வந்தால் அனைத்து நலங்களும் கிட்டும்.
செவ்வாய் - பார்வதிதேவியைப் பூஜித்து அரசமரத்தை வலம் வந்தால் காரியசித்தி, உத்தியோக உயர்வு கிடைக்கும்.
புதன் - தேவகணங்களை நினைத்து அரசமரத்தை வலம் வருபவர்களுக்கு வணிகம் உயர்வடையும்.
வியாழன் - தட்சிணாமூர்த்தியை வணங்கி அரசமரத்தைப் பிரதட்சிணம் செய்தால் கல்வி ஞானமும், வெற்றியும் பெற முடியும்.
வெள்ளி - லட்சுமியை வேண்டி அரசமரத்தை வலம் வந்தால் அனைத்துச் செல்வங்களும் கிடைக்கப் பெற்று வளமான வாழ்வு அமையும்.
சனி - மகாவிஷ்ணுவைப் வேண்டி நைவேத்தியங்கள் படைத்து அரசமரத்தை வலம் வந்தால் அனைத்து துன்பங்களும் நீங்கி மகிழ்ச்சியான வாழ்வு அமையும்.
அரசமரத்தைச் சுற்றி வருவதற்கும் சில நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அவை;
* அரசமரத்தை வலம் வரும்போது வேகமாக நடக்கக் கூடாது. சரியான இடைவெளியில் மெதுவாக நடக்க வேண்டும்.
* கைகளை ஆட்டாமல் உடலோடு ஒட்ட வைத்துக் கொண்டோ அல்லது வணங்கிக் கொண்டோச் சுற்றி வர வேண்டும்.
* எவருடனும் பேசிக் கொண்டு வலம் வரக்கூடாது. கிழமைகளுக்கேற்ற இறைவனுக்கான துதிப்பாடலை பாடி வர வேண்டும். இல்லையெனில், கிழமைகளுக்கேற்ற இறைவனை நினைத்து வலம் வர வேண்டும்.
* அரசமரத்தைக் குறைந்தபட்சம் 7 முறை வலம் வர வேண்டும். அதிகபட்சமாக 108 முறை வலம் வரலாம்.
* சனிக்கிழமைகளில் அரசமரத்தைச் சுற்றுவது மிகவும் நல்லது.
* குழந்தைப்பேறு வேண்டுபவர்கள், அரசமரத்தைச் சுற்றி முடித்த பின், அம்மரத்தைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்பது தொன்ம நம்பிக்கை.
* அரசமரத்தைக் காலை வேளையில்தான் வலம் வர வேண்டும். மதிய வேளையில் நிச்சயமாக வலம் வரக்கூடாது.