முருகு என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள்படும். ஆகவே முருகன் என்றால் அழகன் என்பதாகும். முருகன் சைவக் கடவுளான சிவன் - பார்வதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர். சிவபெருமான் தனது ஆறு முகத்திலிருந்தும் நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதைத் தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாகக் கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒரு சேர அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று இந்துசமய நூல்கள் கூறுகின்றன. இந்த முருகனைத் தமிழ்க் கடவுள் என்று போற்றுவதுண்டு. எனவே, தமிழ்நாட்டில் முருகனைப் பற்றி பல்வேறு பழமொழிகள் வழக்கத்திலிருந்து வருகின்றன. அவை;
* சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை. சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை.
* வயலூர் இருக்க அயலூர் தேவையா?
* காசுக்குக் கம்பன்; கருணைக்கு அருணகிரி.
* அப்பனைப் பாடிய வாயால் ஆண்டிச் சுப்பனைப் பாடுவேனா?
* முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை. மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை.
* சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் (சஷ்டியில் விரதமிருந்தால் அகப்பையில் (கர்ப்பப்பையில்) வரும். அதாவது குழந்தைப்பேறு உண்டாகும்)
* கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை.
* கந்தன் களவுக்குக் கணபதி சாட்சியாம்.
* பழநி பழநின்னா பஞ்சாமிர்தம் வந்திடுமா?
* சென்னிமலை சிவன்மலை சேர்ந்ததோர் பழனிமலை.
* செந்தில் நமக்கிருக்கச் சொந்தம் நமக்கெதற்கு?
* திருத்தணி முருகன் வழித்துணை வருவான்.
* வேலனுக்கு ஆனை சாட்சி.
* வேலிருக்க வினையுமில்லை. மயிலிருக்கப் பயமுமில்லை.
* செட்டிக் கப்பலுக்குச் செந்தூரான் துணை.
* கந்தன் பாதம் கனவிலும் காக்கும்.