* இந்துக்கள் மட்டுமின்றி சமணர், பெளத்தர், சீக்கியர் சமயத்தினரும் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.
* ஒவ்வொரு வருடமும் தமிழ் மாத, ஐப்பசி மாதம், கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) சதுர்த்தி நாளன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது.
* வட மாநிலங்களில் தீபாவளிப் பண்டிகையை மூன்று நாட்கள் கொண்டாடுகின்றனர். முதல் நாளைச் சிறிய தீபாவளி (சோட்டா தீபாவளி) என்றும், இரண்டாம் நாளைப் பெரிய தீபாவளி (படா தீபாவளி) என்றும் அழைக்கின்றனர். மூன்றாவது நாளில் 'கோவர்த்தன பூசை' செய்து கண்ணபிரானையும் வணங்கிக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
* தீபாவளித் தினத்தன்று எண்ணெய் தேய்த்துக் குளித்தால் துன்பங்கள் நீங்கி புண்ணியங்கள் உண்டாகும். எண்ணெய்யில் திருமகளும், வெந்நீரில் கங்கையும் அன்று ஒன்று சேர்வதால் அன்று எண்ணெய்க் குளியல் செய்பவருக்குக் கங்கையில் மூழ்கிக் குளித்த புனிதப் பயன் கிடைக்கும் என்கிற நம்பிக்கை உண்டாகிறது.
* தீபாவளி நாளில் வழக்கமாகக் குடும்பத்தில் வழிபடும் தெய்வத்தின் முன்பு கோலமிடுவர். தாம்பூலம், பழம், தேங்காய், மலர்கள், புதிய துணிமணி கள் பட்டாசுகள், காய்ச்சிய எண்ணெய், சிகைக்காய்ப் பொடி, மஞ்சள் பொடி, இலேகியம் பட்சணங்கள், வெந்நீர் ஆகியவற்றை வைப்பர். பின்பு தேங்காய் உடைத்துக் கற்பூரம் ஏற்றி வணங்கி வழிபாடு செய்வர்.
* புதிதாக மணமுடித்த இணையர்கள் தீபாவளி நாளில் கொண்டாடும் தலைத் தீபாவளியன்று, மாப்பிள்ளையையும் மகளையும் கோலமிட்ட மனையில் உட்கார வைத்துக் குங்குமமிட்டு ஆரத்தி எடுக்த்து, பிறகு, நலங்கு இட்டு எண்ணெய் தேய்த்துக் குளித்துச் சுவாமியை வணங்கச் செய்கின்றனர். அதன் பிறகு, பெரியவர்களின் கையால் மஞ்சள் தடவிய புதுத்துணியைக் கொடுத்து உடுத்திக் கொள்ளச் சொல்லும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.
* மகாலட்சுமி செல்வத்தின் அதிபதி. அதனால் தீபாவளியன்று லட்சுமி பூஜை செய்வதால் ‘செல்வம் வளரும்’ எனும் நம்பிக்கை இருக்கிறது.
* வடமாநிலங்களில் தீபாவளி நாளில் மகாலட்சுமியைப் பூஜித்துப் புதுக்கணக்குகளைத் தொடங்கும் வழக்கமிருக்கிறது.
* தீபாவளிப் பண்டிகையை முதலில் கொண்டாடியவன் நரகாசுரன் மகனான பகதத்தன் என்பவனே.
* தீபாவளி நாளன்று வரும் அமாவாசையில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வது மிகவும் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது.