மனிதர்களுடைய மனம் மூன்று விதமான நிலைகளில் செயல்படுகிறது. இம்மூன்று நிலைகளையேப் பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூன்று விதத் தெய்வங்களாக நம் முன்னோர்கள் உருவாக்கியுள்ளனர்.
பிரம்மா
இது கட்டுபாடற்ற மனநிலையைக் (Uncontrolled Mind) குறிக்கும். எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டே இருக்கும். இதனால் அறிவு பெருகிக் கொண்டே இருப்பதனால் “சரஸ்வதி”யை பிரம்மாவின் மனைவியாகவும், கல்விக்கான கடவுளாகவும் உருவகப்படுத்தியுள்ளனர். பிரம்மாவின் வாகனம் அன்னபட்சி. அன்னபட்சி என்பது ஒர் கற்பனைப் படைப்பு. இல்லாத ஒன்றை இருப்பதாகக் கற்பனை செய்வதுதான் சாதாரண மனிதர்களின் நிலை. எனவேதான் பிரம்மாவிற்குக் கோயில் கிடையாது.
விஷ்ணு
இது ஒருமுகப்பட்ட(concentrated Mind) மனநிலையைக் குறிக்கும். இந்த மனநிலையில் நாம் செயல்களைச் செய்யும் பொழுது பெயர், புகழ், சொத்துக்கள் அதிகமாகச் சேரும். அதனால்தான் செல்வத்தின் அதிபதியான ஸ்ரீதேவி, பூதேவியை விஷ்ணுவின் மனைவியாகக் குறிப்பிடுகின்றனர். அதுபோல விஷ்ணுவின் வாகனமாகக் கருடனைக் குறிக்கின்றனர். கருடன் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், பூமியில் உள்ள சிறு பூச்சிகளைக் கூடக் கொத்திச் சென்று விடும். இந்த நிலையை அடைய வேண்டுமானால் ஏதாவது ஒர் குறிப்பிட்டப் புள்ளியில் மனதை வைத்துப் பயிற்சி செய்ய வேண்டும்.
சிவன்
இது மனமற்ற (Destroyed Mind) நிலையைக் குறிக்கும். இத்தகைய நிலையில் மகா மாயசக்திகள் உங்கள் வசப்படும். அதனால்தான் ஆதிபராசக்தியைச் சிவனின் மனைவியாக உருவகப்படுத்தி உள்ளனர். அதுபோல் காளைமாடு சிவனின் வாகனமாகக் கூறுகின்றனர். காளை மாட்டின் இயல்பு என்னவென்றால், அதை வண்டியில் பூட்டினாலும் சரி, செக்கில் மாட்டினாலும் சரி அதை இழுத்துச் சென்று கொண்டே இருக்கும். எந்த விதப் பலனையும் எதிர்பார்க்காது. அது போல் நீங்கள் எச்செயல் செய்தாலும் எந்தவிதப் பிரதிபலனையும் எதிர்பாராமல் செய்து வருவீர்களானால் சிவனாகவே மாறி ஆனந்தமாக வாழ்ந்திடுவீர்.