இராமேஸ்வரத்தில் உள்ள இராமநாத சுவாமி கோயிலில் சீதையால் நிறுவப்பட்ட ‘மணல் லிங்கம்’, அனுமனால் நிறுவப்பட்ட ‘விஸ்வ லிங்கம்’, விபீஷணன் நிறுவிய ‘ஜோதிர்லிங்கம்’, ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட ‘ஸ்படிக லிங்கம்’ ஆகியவை உள்ளன. அதோடு அந்தக் கோயிலில் அதிசயிக்கத்தக்க வகையில் கல் உப்பால் செய்யப்பட்ட சிவலிங்கம் ஒன்றும் இருக்கிறது. இந்த லிங்கம் எப்படி வந்தது? என்பது குறித்து ஒரு தகவல் சொல்லப்படுகிறது.
ஒரு முறை, ‘லலிதாசகசரநாமம்’, ‘சவுந்தர்யலகரி’ ஆகியவற்றிக்கு உரை எழுதிய பாஸ்கரராய சுவாமிகள், இராமேஸ்வரம் இராமநாதரைத் தரிசிப்பதற்காக வந்தார். இவர் இராமநாதரை வழிபட்டு, அங்கிருந்து வெளியே வந்த போது, சிலர் அவரை வழி மறித்துச் சில கேள்விகளைக் கேட்டனர்.
“இந்தக் கோவிலில் உள்ள லிங்கம், மணலால் செய்யப்பட்டது என்றும், அதனைச் சீதாதேவி செய்து வைத்தார் என்றும் சொல்கிறார்கள். மணலால் செய்யப்பட்ட ஒரு பொருளுக்குக் குடம் குடமாகத் தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்படும் என்றால், அது எப்படிக் கரையாமல் இருக்கும். எனவே, அது மணலால் செய்யப்பட்டது என்பது கட்டுக்கதை” என்று வாதம் செய்தனர்.
அவர்கள் சொன்னதைப் பொறுமையாகக் கேட்ட பாஸ்கரராயர், வாதம் செய்தவர்களிடம் கடைக்குச் சென்று கல் உப்பு வாங்கி வரும்படி கூறினார். அவர்களும் ஐந்து கிலோ அளவுக்குக் கல் உப்பு வாங்கி வந்தனர். அந்தக் கல் உப்பைக் கொண்டு, ஒரு சிவலிங்கத்தையும், அம்பாள் உருவத்தையும் பாஸ்கரராயர் செய்தார். அதனை அங்கேயே நிறுவினார். பின்னர் தன்னிடம் வாதம் செய்தவர்களிடம், “நீங்கள் இந்தக் கல் உப்புச் சிலைகளுக்கு, எவ்வளவு வேண்டுமானாலும் தண்ணீர் ஊற்றுங்கள். இது கரையாது” என்றார்.
வாதம் செய்தவர்கள் குடம் குடமாக தண்ணீர் கொண்டு வந்து, சிவலிங்கத்திற்கும், அம்பாள் சிலைக்கும் ஊற்றினார்கள். ஒரு கட்டத்தில் இதற்கு மேல் தண்ணீர் ஊற்ற முடியாது என்ற நிலையில் துவண்டு போனார்கள்.
அப்போது அவர்களைப் பார்த்துப் பாஸ்கரராயர் சொன்னார்.
“சாதாரண ஒரு மனிதனான நான் செய்து வைத்த கல் உப்புச் சிலைகளையே இந்தத் தண்ணீர் கரைக்க முடியவில்லை. அப்படியிருக்கும் போது, இந்த அண்டசாரசரங்களையும் காக்கும் அந்த பரந்தாமனின் மனைவியான சீதை பிராட்டி பிடித்து வைத்த மணல் லிங்கம் எப்படிக் கரையும்?” என்று கேட்டார்.
அதுவரை அவரோடு வாதம் செய்தவர்கள், வந்த வழியேத் திரும்பிச் சென்றனர்.
பாஸ்கரராயர் சுவாமிகளால் நிறுவப்பட்ட சிவலிங்கம் ‘வஜ்ரேஸ்வரர்’ என்றும், அம்பாள் ‘மனோன்மணி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
இந்தக் கல் உப்புச் சிலைகளை இன்றும் நாம் தரிசனம் செய்ய முடியும்.