பெருமாளை வழிபடும் பக்தர்களால் தவறாமல் கடைப்பிடிக்கப்படும் விரதங்களில் ஒன்று ‘ஏகாதசி.’ வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வரும். இதில் ஆனி மாதத்தின் வளர்பிறையில் வரும் ‘நிர்ஜலா’ என்ற பெயருடைய ஏகாதசிக்கு, ‘பீம ஏகாதசி’ என்று பெயர். அதற்கு ‘பீம ஏகாதசி’ என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? .
ஒரு முறை வியாச முனிவரைச் சந்தித்தார், பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரர். அவரைத் தன்னுடைய இல்லத்திற்கு அழைத்து வந்து சகல மரியாதையையும் செய்து, சில சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டார்.
அப்போது “முனிவரே... மனிதர்களுக்கு ஏராளமான துன்பங்கள் ஏற்படுகின்றன. இனி வரும் கலியுகத்தில் அது அதிகரிக்கவேச் செய்யும். அது போன்ற நேரங்களில் துன்பங்களில் இருந்து சுலபமாக விடுபடுவதற்கான வழியைச் சொல்லுங்கள்” என்று கேட்டார் யுதிஷ்டிரர்.
அதற்கு வியாசர், “எல்லாத் துன்பங்களையும் நீக்கக்கூடிய மகிமை, ஏகாதசி விரதத்திற்கு மட்டுமே உண்டு. அந்தத் தினத்தில் உபவாசம் இருந்து பெருமாளைப் பூஜித்து வருவதைத் தவிர, இதற்கு வேறு வழி எதுவும் இல்லை” என்றார்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த பீமன், “முனிவர்களில் சிறந்தவரே... நீங்கள் சொன்ன விரதத்தை இங்கிருக்கும் அனைவருமேக் கடைப்பிடித்து விடுவார்கள். அவர்களால் ஒவ்வொரு ஏகாதசி அன்றும் உணவருந்தாமல் இருந்து விட முடியும். ஆனால் என்னால் உணவருந்தாமல் ஒரு வேளை கூட இருக்க முடியாது. அதிலும் வருடம் முழுவதும் பல ஏகாதசிகள், அப்படி இருப்பதென்றால் இயலாத காரியம். ஏனெனில், என்னுடைய வயிற்றில் ‘விருகம்’ என்னும் தீ எரிந்து கொண்டே இருக்கிறது. அது என் பசியைத் தூண்டிக் கொண்டே இருக்கிறது. எனவே வருடத்திற்கு ஒரு முறை மட்டும் விரதம் இருந்து, நீங்கள் சொன்ன பலனை அடைய வழி இருக்கிறதா?” என்று கேட்டான்.
அப்போது வியாசர் சொன்ன பதில், பீமனுக்கு நிம்மதியைக் கொடுத்தது.
“பீமா... கவலைப் படாதே... ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி அன்று, தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருந்து வா. நீர் கூட அருந்தாமல் இருக்கும் விரதம் என்பதாலேயே அது ‘நிர்ஜலா’ என்று அழைக்கப்படுகிறது. அந்த ஒரு ஏகாதசியைக் கடைப்பிடித்தாலே, அனைத்து ஏகாதசியையும் கடைப்பிடித்தப் பலன் கிடைத்துவிடும்” என்று கூறினார்.
இதையடுத்து பீமன், நிர்ஜலா ஏகாதசி அன்று மட்டும் உணவு, நீர் ஆகியவற்றைத் துறந்து, மறுநாள் துவாதியில் உணவை உட்கொண்டான். பீமனால் கடைப்பிடிக்கப்பட்ட விரதம் என்பதால் இது ‘பீம ஏகாதசி’ என்று பெயர் பெற்றது.