மனிதர்கள் செய்யும் ஒவ்வொரு நற்செயலுக்கும் அதற்கேற்ற நற்பலன்கள் கிடைக்கும் என்று கருட புராணம் குறிப்பிடுகிறது. அவை;
1. அன்னதானம் செய்தால் விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் சுகித்திருப்பார்.
2. கோ தானம் செய்தால் கோலோகத்தில் வாழ்வர்.
3. பசு கன்றீனும் சமயம் தானம் கொடுத்தவருக்குக் கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு.
4. குடை தானம் செய்தவர் ஆயிரம் ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பார்.
5. தாமிரம் நெய், கட்டில், மெத்தை, ஜமுக்காளம், பாய், தலையனை இதில் எதைத் தானம் செய்தாலும் சந்திலலோகத்து சுகங்களை அனுபவிப்பார்.
6. வஸ்திர தானம் கொடுத்தவருக்கு பத்தாயிரம் ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார்.
7. இரத்தம், கண், உடல் தானம் கொடுத்தவருக்கு அக்கினி லோகத்தில் ஆனந்தமாயிருப்பார்.
8. ஆலயத்துக்கு யானை தானம் கொடுத்தவருக்கு இந்திரனுக்குச் சமமான ஆசனத்தில் அமர்ந்திருப்பார்.
9. குதிரையும், பல்லக்கும் தானம் கொடுத்தவருக்கு பதினான்கு இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார்.
10. நந்தவனங்களை ஆலயத்துக்கு அளிப்பவர் ஒரு மன்வந்தர காலம் வாயுலோகத்தில் வாழ்வார்.
11. தானியங்களையும், நவரத்தினங்களையும் தானம் கொடுத்தவர், மறுஜென்மத்தில் அறிவாளியாகவும் தீர்க்காயுள் கொண்டவராயும் வாழ்வர்.
12. பயன் கருதாது தானம் செய்பவரின் மரணம் உன்னதமாயிப்பதோடு மீண்டும் பிறவி வாய்ப்பதில்லை.
13. நற்செயலை விரும்பிச் செய்கிறவர்கள் சூரியலோகத்திற்குச் செல்கிறார்கள்.
14. தீர்த்த யாத்திரை புரிகின்றவர்களுக்குச் சத்தியலோக வாசம் கிட்டுகிறது.
15. ஒரு கன்னிகையை ஒழுக்கமாக வளர்த்து விவாகம் செய்து கொடுப்பவருக்கு பதினான்கு இந்திர ஆயுட்காலம் வரை அமராவதியில் சுகித்திருப்பர்.
16. பொன், வெள்ளி ஆபரணங்களைத் தானம் கொடுத்தவர்கள் குபேர லோகத்தில் ஒரு மன்வந்தர காலம் வாழ்வார்.
17. பண உதவி செய்பவர்கள் ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் வாழ்வார்கள்.
18. நீர் நிலைகளைச் சீர்திருத்துபவரும், உண்டாக்குபவரும் ஜனலோகத்தில் நீண்டகாலம் வாழ்வார்கள்.
19. பயனுள்ள மரங்களை நட்டுப் பாதுகாப்பவர் தபோலோகத்தை அடைகிறார்.
20. புராண நிகழ்ச்சிகளைக் குறிக்கும் சிற்பங்களையுடைய கோபுரம் கட்டும் செலவினை ஏற்றால் அறுபத்து நான்கு ஆண்டுகள் பரமபதத்திலிருப்பான்.
21. தெய்வம் பவனி வரும் வீதிகளைச் செம்மைப்படுத்துபவர் பத்தாயிரம் வருடங்கள் இந்திரலோகத்தில் சுகித்திருப்பார்.
22. பௌர்ணமியில் டோலோற்சவம் செய்பவர் இம்மையிலும் மறுமையிலும் இன்பமடைவார்.
23. தாமிரப்பாத்திரத்தில் எள்ளைத் தானம் கொடுத்தவருக்கு நற்குலத்தில் உதித்து திடகாத்திரமாக கீர்த்தியோடு பிரகாசிப்பார்.
24. சுவையான பழங்களைத் தானம் கொடுத்தவருக்கு, ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வலோகத்தில் சுகித்திருப்பார்.
25. ஒரு சொம்பு நல்ல தண்ணீரை நல்லவர்களுக்குத் தானம் கொடுத்தவருக்கு கைலாய வாசம் கிட்டும்.
26. அருணோதயத்தில் கங்கையில் நீராடுபவர் அறுபதாயிரம் ஆண்டுகள் பரமபதத்திலிருப்பர்.
27. விரத நோன்புகளைப் பக்தியுடன் கடைபிடிப்பவர் பதினான்கு இந்திர ஆயுட்காலம் வரை சொர்க்கபுரியில் வாசம் செய்வர்.
28. சுதர்சன ஹோமமும், தன்வந்திரி ஹோமமும் செய்பவர் ஆரோக்கியவானாக சத்ருக்களில்லாதவராக தீர்க்காயுளுடன் வாழ்வர்.
29. ஷோடச மகாலெட்சுமி பூஜையை முறையோடு செய்பவர் குலம் பதினாறு பேறுகளையும் பெற்றுப் பெருமையுடன் விளங்கும்.
30. புண்ணிய காலங்களில் தானம் கொடுப்பவர், தனது அந்திம காலத்தில் நல்ல உலகத்தை அடைந்து இன்புறுவார்கள். அவர்களின் பெற்றோரும் மிதுர்களும் முக்தி பெறுகின்றனர்.