ரத சப்தமி - வழிபடும் முறை
பாலா கணேசன்

ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் உலகைச் சுற்றி வருவதால் திதிகளில் ஏழாவது நாள் சப்தமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
ரத சப்தமி அன்று ஏழு எருக்கம் இலைகளைத் தலையில் ஒன்று, கண்களில் இரண்டு, தோள்பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டை வைத்துக் குளிக்கச் செய்வது வழக்கம். காலை 6.00 மணியிலிருந்து 7.30 மணிக்குள் குளிக்க வேண்டும்.
தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்வது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தரும்.
குளித்தபின் வீட்டில் சூரிய ஒளிபடும் சுத்தமான இடத்தில் செம்மண்ணால் மெழுகி சூரிய ரதக் கோலமிட்டு, அதில் சூரிய - சந்திரர்களை வரைய வேண்டும். பின் வண்ண மலர்களால் அலங்கரித்துப் பூஜை செய்ய வேண்டும். இதற்கு முன் கிண்ணங்களில் அரிசி, பருப்பு, வெல்லம் வைத்து, நைவேத்தியத்திற்கு சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடையும் வைக்க வேண்டும்.
அதன் பின்பு, முதலில் கணபதி பூஜை, பின் சூரிய நாராயண பூஜை செய்ய வேண்டும்.
ஷோடச உபசாரத்துடன் இப்பூஜையைச் செய்தால் சூரியன் சாந்தியடைந்து உலகிற்கு நன்மை செய்வதுடன், பூஜிப்பவர்களுக்கும் வளமும் நலமும் தந்து சிறப்பாக வாழ வைப்பான்.
ரதசப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்குப் பலமடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில் பெருகும். பெண்கள் உயர்நிலையை அடைவர். கணவனை இழந்தவர்கள் இந்த விரதம் அனுஷ்டித்தால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்கின்றன புராணங்கள்.
இந்த நாள் தியானம், யோகா செய்ய சிறந்தது. சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆக உயர்வார்கள் என்கின்றது புராணம்.
சூரிய வழிபாட்டிற்கு மந்திரம் தெரியாவிடில் பரவாயில்லை, எளிமையாக, "ஓம் நமோ ஆதித்யாய புத்திர் பலம் தேஹிமே சதா' என்று காலையில் சூரியனைப் பார்த்துக் கூறி, மூன்று முறை வணங்க வேண்டும்
*****
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|