தவ்வை, ஜேஷ்டா தேவி, காக்கை கொடியோள், மஹா நித்திரை, ஏக வேணி, தூம்ர காளி இப்படிப் பல தமிழ் பெயர்களால் அழைக்கப்பட்டவள் மூதேவி. மூத்த தெய்வம் என்று அழைக்கப்பட்டு வந்த இந்தப் பெயர் காலப்போக்கில் மருவி மூதேவி என்ற பெயரை அடைந்துவிட்டது. ஸ்ரீதேவிக்கு மூத்தவள் மூதேவி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த பல்லவர்கள் இந்த மூத்த தேவியைக் குல தெய்வமாகக் கொண்டு வழிபாடு செய்து வந்துள்ளனர். பல்லவர்களுக்கு அடுத்து தமிழ்நாட்டை ஆண்ட சேர, சோழ அரசர்களும் இந்த மூத்த தேவிக்கு முன்னுரிமை கொடுத்து வழிபாடு செய்து வந்துள்ளனர் என்பதைக் சில கல்வெட்டு குறிப்புகளின் வழியாக அறிய முடிகிறது. மூத்ததேவி எனும் மூதேவியை தவ்வை என்ற பெயரில் ஔவையாரும், திருவள்ளுவரும் தங்களுடைய பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதையும் இந்த இடத்தில் நினைவுகூற வேண்டும். ஸ்ரீதேவி மக்களுக்கு தேவையான செல்வத்தைக் கொடுப்பதற்குப் படைக்கப்பட்டதாகவும், மூதேவி வீட்டிலிருக்கும் வறுமையை அடித்து விரட்டுவதற்கு படைக்கப்பட்டதாகவும் நம் முன்னோர்களால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்டுள்ளது.
உதாரணமாக, ஒரு வீட்டில் இருப்பவர்கள் சோம்பேறித்தனமாக உள்ளார்கள். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. இந்த வீட்டில் மூதேவி குடி இருப்பார்கள் என்பது நம் அனைவரது கருத்தாகவும் இருக்கிறது. இப்படிச் சோம்பேறித்தனமாகக் கெட்ட எண்ணத்தோடு வாழ்பவர்களுடைய வீட்டில் மூதேவி குடியேறி, அவர்களுக்கு வாழ்க்கையில் கஷ்டங்களைக் கொடுத்து, வாழ்க்கையில் எது நல்லது? எது கெட்டது? என்பதைப் புரிய வைத்து, அந்த வீட்டிலிருக்கும் தரித்திரத்தை மூதேவி தன்னுடனே வெளியே எடுத்துச் சென்று விடுவாள். இந்த மூதேவி வெளியே சென்ற பிறகு, மூதேவியின் தங்கை ஸ்ரீதேவி அந்த வீட்டுக்குள் நுழைவாள். பீடை பிடித்த தரித்திரம் பிடித்த வீட்டில் மூதேவி குடி கொள்வாள். அந்த வீட்டில் இருக்கும் தரித்திரத்தை விரட்டி அடிக்கக்கூடிய வேலையைத்தான் மூதேவி பார்த்துக் கொள்வாள்.
இதேபோன்று, தற்போதும் வீடுகளின் முன்பு, “என்னைப்பார் யோகம் வரும்” எனும் வாசகங்களுடன் கழுதை படத்தை மாட்டி வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறோம். எத்தனையோ விலங்குகள் இருக்க, கழுதை படத்தை ஏன் மாட்டி வைக்க வேண்டும்? மூதேவியின் வாகனம் கழுதைதான். அவர் கழுதையின் மேல் அமர்ந்து தான் வருவார்கள். இதனால்தான் கழுதை படத்தை எல்லோர் வீட்டிலும் மாட்டி வைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். பொதி சுமப்பதுதான் கழுதை. குறிப்பாக, சலவை செய்பவர்கள்தான் கழுதையை, துணி பொதி சுமப்பதற்காகப் பயன்படுத்தி வருகின்றனர். அழுக்கை நீக்கி, துணியை வெள்ளையாக்குவதுதான் சலவை செய்பவர்களின் வேலை. இதேபோல்தான், மனிதர்களின் மனதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்யக்கூடிய வேலையை மூதேவி செய்கின்றார்.
காலப்போக்கில், மூதேவி என்ற பெயரைக் கேட்டாலே வீட்டில் தரித்திரம் பிடிக்கும், வறுமை வரும் என்ற எண்ணம் நமக்கு வந்ததற்கு காரணம் என்ன? நெற்கதிர்கள் ஸ்ரீதேவி என்றும், நெற்கதிர்கள் விளைவதற்கு கருப்பு நிறத்தில் உரமாக இருக்கக் கூடியதை மூதேவி என்றும், அந்தக் காலத்தில் நம்முடைய முன்னோர்கள் சொல்லுவார்கள். அதாவது அழுக்கு படிந்த கருப்பான உரத்தை மூதேவிக்கு இணையாகச் சொன்னதால், மூதேவி அழுக்குப் படிந்த சுத்தம் இல்லாத ஒரு தெய்வம் என்று மக்களுடைய மனதில் தவறாகப் பதியத் தொடங்கி, மூத்ததேவி, மூதேவியாக மாறிப் போய்விட்டார். உண்மையில். மூத்த தேவி என்பவள் நமக்குக் கஷ்டங்களைக் கொடுப்பவள் அல்ல. நம்மிடத்தில் இருக்கும் தீயவைகளை, நம்மிடத்தில் இருந்து வெளியே விரட்டி அடிப்பவள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.