மகாபாரதத்தில் வரும் அர்ச்சுணனுக்குப் பல பெயர்கள் இருக்கின்றன. அந்தப் பெயர்களையும், பெயர்களுக்கான பொருளையும் அர்ச்சுணனே சொல்வது போன்று இங்கு தரப்பட்டிருக்கிறது.
தனஞ்சயன்
“செல்வத்தின் மத்தியில் நான் வாழ்ந்ததாலும், அனைத்து நாடுகளையும் அடக்கி, அவர்களது செல்வங்களைக் கொள்ளை கொண்டதாலும், என்னை “தனஞ்சயன்” என்று அழைக்கிறார்கள்.
விஜயன்
ஒப்பற்ற மன்னர்களுடன் போர் புரியச் சென்று, அவர்களை வீழ்த்தாமல் (களத்தை விட்டு) நான் திரும்பியதில்லை என்பதால், என்னை “விஜயன்” என்று அழைக்கிறார்கள்.
ஸ்வேதவாஹனன்
எதிரிகளுடன் போரிடும் போது, எனது தேரில், தங்கக் கவசம் பூண்ட வெள்ளைக் குதிரைகளையே நான் பூட்டுவதால், என்னை “ஸ்வேதவாஹனன்” என்று அழைக்கிறார்கள்.
பல்குனன்
அடிவானில் உத்திர நட்சத்திரக் கூட்டம் (உத்தரப் பல்குனி) தோன்றிய நாளில் (உத்திரம் நட்சத்திரம் கொண்ட நாளில்) இமயத்தின் மார்பில் நான் பிறந்ததால், என்னை “பல்குனன்” என்று அழைக்கிறார்கள்.
கிரீடி
வலிமை மிகுந்தவர்களுடன் நான் மோதும் போது, சூரியப்பிரகாசம் கொண்ட ஒரு மணிமுடியை இந்திரன் எனது தலையில் சூட்டியதால், எனக்கு “கிரீடி” என்று பெயர் கிடைத்தது.
பீபத்சு
போர்க்களத்தில் இது வரை வெறுக்கத்தக்க எந்தச் செயலையும் நான் செய்யாததால், தேவர்கள் மற்றும் மனிதர்கள் மத்தியில் எனக்கு “பீபத்சு” என்ற பெயர் இருக்கிறது.
சவ்யசச்சின் (சவ்யசாசி)
காண்டீபத்தை எனது இரு கரங்களாலும் இழுக்க வல்லவனாக நான் இருப்பதால், தேவர்கள் மற்றும் மனிதர்கள் என்னை சவ்யசச்சின் (சவ்யசாசி) என்றும் சொல்கிறார்கள்.
அர்ச்சுணன்
பூமியின் நான்கு எல்லைகளுக்குள் எனது நிறம் மிக அரிதானதாலும், எனது செயல்கள் எப்போதும் களங்கமற்றவையாக இருப்பதாலும் என்னை “அர்ச்சுணனன்” என்கிறார்கள்.
ஜிஷ்ணு
அணுக முடியாதவனாகவும், அடக்க முடியாதவனாகவும், எதிரிகளை அடக்குபவனாகவும், பகனைக் கொன்றவனின் (இந்திரனின்) மகனாகவும் இருப்பதால், மனிதர்கள் மற்றும் தேவர்களுக்கு மத்தியில், “ஜிஷ்ணு” என்றும் அழைக்கப்படுகிறேன்.
கிருஷ்ணன்
கரிய நிறமும், பெரும் தூய்மையும் கொண்ட சிறுவனான என் மீது பாசம் கொண்ட, எனது தந்தை (பாண்டு) என்னை “கிருஷ்ணன்” எனும் பட்டப் பெயரால் அழைத்ததால், அப்பெயரும் எனக்குண்டு.
பாண்டவன்
பாண்டுவின் மகன் என்பதால், என்னை “பாண்டவன்” என்றும் அழைக்கின்றனர்.
கபித்வஜன்
குரங்குக் கொடியை கொண்டவன் என்பதால் “கபித்வஜன்” என்றும் சொல்கின்றனர்.
அனகன்
பாவமற்றவன் என்பதால் என்னை, “அனகன்” என்றும் சொல்வர்.
கௌந்தேயன்
குந்தியின் மகன் என்பதால் என்னை “கௌந்தேயன்” என்றும் சொல்கின்றனர்.
குருநந்தனன்
குரு வம்சத்தில் பிறந்தவன் என்பதால் என்னை “குருநந்தனன்” என்பர்.
குடாகேசன்
தூக்கத்தை வென்றவன். போரில் எதிரிகளை வெல்லும் வரை உறக்கத்தை உதறித் தள்ளியவன் என்பதால் என்னை “குடாகேசன்” என்று சொல்வதுண்டு.
வாரணக் கொடியோன்
அனுமானின் உருவம் தாங்கிய கொடியை உடையவன் என்பதால் என்னை “வாரணக் கொடியோன்” என்றும் அழைப்பர்.
பராந்தகன்
எதிரிகளை வெல்வதில் மனத்திடம் உள்ளவன் என்பதால் என்னை, “பராந்தகன்” என்றும் சொல்கின்றனர்.
காண்டீபன்
காண்டீபம் எனும் பெயர் கொண்ட வில்லை உடையவன் என்பதால் என்னை “காண்டீபன்” என்றும் அழைக்கின்றனர்.
பார்த்தன்
குந்தியின் இயற்பெயர் பிருதை என்பதால், எனக்கு “பார்த்தன்” என்று பெயரும் உண்டு.