சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் திருதியை திதி "அட்சய திருதியை" எனப் போற்றப்படுகிறது. 'அட்சயம்' என்றால் வளர்வது, குறையாதது என்று பொருள். அன்றைய தினத்தில் செய்கின்ற அனைத்துக் காரியங்களும் வெற்றிகரமாக நடக்கும். பல நல்ல பலனை தரக்கூடியது.
அட்சய திருதியை நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் பலரும் தங்கம் வாங்க விரும்புகின்றனர். இந்நாளில் விலை உயர்ந்த பொருளை வாங்க இயலாதவர்கள், வாழ்க்கைக்கு உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாம். உப்பை வாங்கினாலே, தங்கம் வாங்கியதற்கு நிகரான பலனைப் பெறமுடியும். மேலும் அட்சய திருதியை நாளில்,
* குழந்தைகளுக்கு எழுத கற்றுக் கொடுத்தால் அவர்களது கல்விச் செல்வம் பெருகும்.
* புண்ணிய நதிகளில் நீராடினால் பாவம் போகும்.
* அன்னதானம் செய்வதும் சிறப்பான பலனைத் தரும். இந்த நாளில் அன்னதானம் செய்தால் இறைவனுக்கே அன்னமிட்ட பலன் கிடைக்கும்.
• ஏழைகள், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோர் ஆகியோருக்குச் செய்யும் தான தர்ம உதவிகள், பல பிறவிகளுக்குப் புண்ணிய பலன் தரும்.
• புத்தாடைகள் தானம் செய்தால் நோய்கள் நீங்கும். கற்பூரம் தானம் செய்தால் சக்கரவர்த்தியாகும் பிறப்பு கிடைக்கும்.
• தாமரை, மல்லிகைப்பூ தானம் செய்தால் மன்னர் குலத்தில் பிறப்பு கிடைக்கும். தாழம்பூ தானம் செய்தால் மகாவிஷ்ணுவின் அருள் கிடைக்கும்.
• பாக்கு, வாசனைத் திரவியங்கள், பழங்கள் தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும்.
• தானியங்கள் தானம் செய்தால் அகால மரணத்தில் இருந்து தப்பிக்கலாம்.
• மோர், பானகம், குடிநீர் ஆகியவற்றைத் தானம் செய்தால் முற்பிறவி பாவம் தீர்ந்து வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.
• தன் சக்திக்கு ஏற்ப தானம் செய்யலாம். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் வறுமை நீங்கும்.
• வெள்ளி வாங்கினால் சரும நோய்கள், மனக்குழப்பம், நிம்மதியின்மை ஆகியவை தீரும்.
• தங்கம் வாங்கினால் தீராத கடன்களையும், ஏழ்மையையும் மிகக் குறுகிய காலத்தில் தீர்க்கும்.
• தயிர் சாதம் ஏழைகளுக்குத் தருவது 11 தலைமுறைக்குக் குறைவில்லா அன்னம் கிடைக்க வழிவகுக்கும்.