>வேத, ஆகம, சிற்ப சாஸ்திர முறைப்படி எழுப்பப்பட்ட ஆலயங்களில் யந்திரஸ்தாபனத்தில் தெய்வத் திருவுருவங்கள் நிறுவப்பட்ட பின்னர் ஆலயங்களுக்குக் குடமுழுக்கு தேவையாகின்றது. குடமுழுக்கு செய்யப்பட்ட பின்னரே அந்த ஆலயம் வழிபாட்டுத் தலமாகின்றது. குடமுழுக்கு அல்லது கும்பாபிஷேகத்திற்கான விதிகளை வாமதேவர் என்னும் வடமொழி நூலாசிரியர் தானெழுதிய வாமதேவ பத்தாதியில் சிவன் முருகனுக்கு சொன்னதாக விவரித்திருக்கிறார்.
குடமுழுக்கு செய்ய நான்கு வகைகள் உள்ளன. அவை;
ஆவர்த்தம் – புதிய கோவிலில் இறைவனின் திருவுருவத்தை அமைப்பது.
அனாவர்த்தம் – இயற்கை சீற்றங்களால் சேதமடைந்த கோவில்களை புதுப்பித்து, மீண்டும் நிறுவுவது.
புனராவர்த்தம் – காலத்தால் சிதிலமடைந்த கோவில்களை புதுப்பித்து புனர் நிர்மாணம் செய்வது.
அந்தரிதம் – மனிதர்களின் செயல்களால் ஏற்பட்ட குறைபாடுகளைச் சரி செய்து கோவிலை மீண்டும் புதுப்பிக்கும் பணியைச் செய்வது.
குறிப்பிட்ட இடத்தில் அமைக்கப்பட்ட கோவில்களில், தெய்வத் திருமேனிகளின் மீது தெய்வ சக்திகளை எழுந்தருளும்படி செய்வதற்கான வழிமுறைகளைச் செய்வதுதான் கும்பங்களுக்கு புனித தீர்த்தங்களினால் முழுக்காட்டப்படும் குடமுழுக்கு அல்லது கும்பங்களுக்கு அபிஷேகம் செய்யும் கும்பாபிஷேகம்.
ஆகம விதிப்படியும், சாஸ்திர முறைப்படியும் தெய்வ விக்கிரகங்களின் சக்தியையும் கோபுரக் கலசத்தில் உருவேற்றிய சக்தியையும், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிப்பித்து ஊக்கப்படுத்த நடைபெறுவதே மகா கும்பாபிஷேகம். இதனை சைவர்கள் ‘மகா கும்பாபிஷேகம்’ என்றும், வைணவர்கள் ‘மகா சம்ப்ரோக்ஷணம்’ என்றும் அழைக்கிறார்கள்.
சிதிலம் அடைந்திருந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டால் அதை புனருத்தாரணம் என்பார்கள்.
கல்லினாலும், மண்ணினாலும், சுதையினாலும், மரத்தினாலும் உலோகங்களாலும் உருவாக்கப்பட்டவை தெய்வ விக்ரகங்களாகும். இப்படி நிறுவப்படும் தெய்வ விக்ரகங்களுக்கு ஆறு வகையான வாசங்கள், அதாவது இருப்புக்கள் மேற்கொள்ளப்படுதாக தொன்ம நம்பிக்கை. இவற்றில் நீரிலும் தான்யங்களிலும் மூழ்க வைக்கும், ஜலவாசம், தானிய வாசம் என்பவை முதல் இரு நிலைகள். நவரத்தினங்கள் பயன்படுத்தப்படும் ரத்தின வாசம் மூன்றாவது நிலை. பொற்காசுகள் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் தன வாசம் நான்காவதாகும். பலவகையான பட்டாடைகள் சிலைக்கு அணிவிக்கப்படும் வஸ்திர வாசம் ஐந்தாவதாகும். கடைசியாக, ஹம்சதூளிகா மஞ்சம் என்ற அன்னத்தின் சிறகுகளால் உருவான படுக்கை மேல் மான் தோல் அல்லது புலித்தோல் விரிக்கப்பட்டு, அதன் மீது விக்ரகம் வைக்கப்படுவது ஆறாவதான சயன வாசமாகும்.
மேற்கண்ட ஆறு வாசமும் 48 நாட்கள் வைக்கப்படும் என்ற நிலையில், விக்ரகம் மொத்தம் 288 நாட்கள் பல நிலைகளைக் கடந்து நிறுவுவதற்குத் தயாராக இருக்கும். ஜல வாசம், தான்ய வாசத்தில் சிலைகளின் குறைகள் தெரிந்துவிடும். ரத்தின வாசத்தில் நவக்கிரகங்களின் அம்சமான நவரத்தினங்களின் குணங்களைச் சிலைகள் பெறும். தன, வஸ்திர, சயன வாசத்தில் இருக்கும் சிலைகள் தெய்வ அதிர்வினைப் பெறுகின்றன என்பது தொன்ம நம்பிக்கை.
ஒரு சில இடங்களில் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒரு வாரம் அல்லது 12 நாட்கள் வரையில் புஷ்பாதி வாசம், அதாவது, பல்வேறு விதமான நறுமண மலர்களில் சிலை மூழ்க வைக்கப்பட்டு இருக்கும் நிலையில், சிலைக்கு வாசனை ஏற்படுத்துவதும் உண்டு. புஷ்பாதி வாசத்துக்குப் பிறகு, கண்களைத் திறக்கும் நிகழ்வுக்கு முன்பாக சயனாதி வாசம் மூலம் விக்ரகத்தின் கிடைமட்ட வடிவம் சோதிக்கப்படும். அதன் பின்னர், கண் திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தகுந்த பூஜைகளுக்குப் பிறகு தலைமை ஸ்தபதி தங்க ஊசி மூலம் சிலையின் கண்ணில் மெல்லிய கீறல் வரைவார். அதன் மூலம் கருவிழி திறக்கப்பட்டு, விக்ரகத்துக்கு முழுமையான அழகு வருகிறது.
பின்னர் கும்பாபிஷேகம் நடக்கும். ஆறுகாலம் அல்லது எட்டு காலம் யாகசாலையில் மந்திர உச்சாரணம் செய்யப்பட்டு, அதை ஈர்த்துக் கொண்ட புனித கலச நீர், காப்பு கயிறு போன்ற பல்வேறு புனிதப் பொருட்கள் மூலம் விக்ரகத்துக்கு தெய்வீகத்தன்மை அளிக்கப்படுகிறது.
ஸ்பரிசவாதி என்னும் கடைசி வாசத்தில், கருவறையில் இருக்கும் பிரதான ஆச்சாரியார் மூலம் ஐதீக முறைப்படி விக்ரகத்தின் ஒன்பது துவாரங்களுக்கான மந்திரம் ஓதப்பட்டு, ஆன்மிக சக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அளிக்கப்பட்ட பின்னர், தொடர்ந்த இவ்வகையான ஆன்மீக வழிகளில், விகரகம் முழுமையான கடவுளாக மாறுகிறது.
இறைவன் தனது அகண்டாகாரமான சக்தியை ஒரு விக்ரகத்திற்குள் நிலைபெறச் செய்ய அடியவர்களுக்கு இவ்வாறு முறையான ஆன்மீக வழிகளைக் காட்டியதால்தான், பிரபஞ்சமெங்கிலும் பரந்து விரிந்திருக்கிற இறைவனுடைய சக்தியை ஈர்த்துச் வைத்துக் கொள்ளும் மூலஸ்தான மூர்த்தியை வடிவமைப்பது எளிய மக்களான நமக்கு கைகூடிய காரியமாயிருக்கிறது.
மூல விக்ரகத்திற்கு அஷ்டபந்தனம் சாற்றி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஆலயங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்வார்கள். கோவிலைக் கட்டி முடித்த பிறகு, தெய்வ விக்ரகங்கள் நிறுவப்படும். பீடத்தின் மீது வைத்து, அந்த இடத்தில் இருந்து சிறிதும் அசையாமல் இருப்பதற்காக, அஷ்டபந்தனம் என்ற எட்டு விதமான பொருட்கள் கலந்த மருந்தின் சாந்து சாற்றப்படும்.
விக்கிரகம் நிறுவுவதற்கு முன்பு அஷ்டபந்தன சாந்தைப் பீடத்தில் சாற்றுதல்
அஷ்டபந்தன மருந்து கலவை தயாரிப்பதற்கு, ‘கொம்பரக்கு’, ‘சுக்கான் தூள்’, ‘குங்கிலியம்’, ‘கற்காவி’, ‘செம்பஞ்சு’, ‘சாதிலிங்கம்’, ‘தேன்மெழுகு’, ‘எருமை வெண்ணெய்’ ஆகிய எட்டுப் பொருட்கள் தேவைப்படுகின்றன. இந்த எட்டுப் பொருட்களையும் குறிப்பிட்ட வரிசை முறைப்படி ஒவ்வொன்றாக சேர்த்து, உரலில் இட்டு தக்கபடி இடித்து, குறிப்பிட்ட பதம் கொண்டதாகத் தயாரிக்கப்படும். இந்த அஷ்ட பந்தன மருந்து, தெய்வ மூர்த்தத்தைப் பீடத்துடன் அழுந்தப் பிடித்துக் கொள்ளும்.
அஷ்டபந்தன சாந்து இடித்தல்
இதன் பின்னர் முக்கியப் பீடத்தையும் துணைப் பீடத்தையும் இணைக்க திரிபந்தனம் என்னும் சுக்கான் தூள், கருப்பட்டிக் கசிவு, முற்றிக் கனிந்த பேயன்பழம் ஆகியவை கலந்த சாந்தைச் சேர்ப்பார்கள். இந்த அஷ்டபந்தன சாந்து 12 வருடங்களில், தன் சக்தியை இழந்துவிடும். எனவே, அதனை எடுத்துவிட்டுப் புதிதாக அஷ்டபந்தனம் சாற்றிக் கும்பாபிஷேகம் செய்வார்கள். இதற்கு ஜீர்ணோத்தாரணம் என்று பெயர்.
பெரிய ஆலயங்களில் வெள்ளியை உருக்கிப் பந்தனம் செய்து நிறுவியிருப்பார்கள். இதற்கு ரஜிதபந்தனம் என்று பெயர். இந்த ஆலயங்களில் 25 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடக்கும்.
மிகப்பிரமாண்டமான ஆலயங்களில் தங்கத்தை உருக்கி பந்தனம் செய்து நிறுவியிருப்பார்கள். இதற்கு ஸ்வர்ணபந்தனம் என்று பெயர். இந்தஆலயங்களில் 50 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறும்.
கும்பாபிஷேகத்தில், கும்பம் – கடவுளின் உடலையும், கும்பத்தின் மீது சுற்றப்பட்ட நூல் – 72,000 நாடி, நரம்புகளையும், கும்பத்தில் ஊற்றப்படும் நீர் ரத்தத்தையும், அதனுள் போடப்படும் தங்கம் ஜீவனையும், மேல் வைக்கப்படும் தேங்காய், தலையையும், பரப்பட்ட தானியங்கள் ஆசனத்தையும் குறிக்கின்றது.
இது மட்டும் இல்லாமல் யாக மேடையில் சந்தனம், மலர்கள் மற்றும் வஸ்திரம் ஆகியவையும் அமைக்கப்படுகின்றன.
கும்பாபிஷேக வழிமுறைகளும் கிரியைகளும்
ஆவாஹனம்
ஆவாஹனம் என்றால் கும்பத்தில் உள்ள நீருக்குள் மூர்த்திகளை எழுந்தருளச் செய்தல் என்பது பொருள். கும்பத்தை முதலில் கோயிலில் உள்ள தெய்வத்திருவின் அருகில் வைத்து தர்ப்பை, மாவிலை ஆகியவற்றைக் கொண்டு மந்திரங்கள் ஓதி, பிம்பத்தில் விளங்கும் மூர்த்தியை கும்பத்தில் எழுந்தருளச் செய்வார்கள். பிறகு அந்த கும்பத்தை யாகசாலைக்கு எழுந்தருளச் செய்வார்கள். தர்ப்பையின் மூலம் கும்பத்தில் உள்ள தெய்வீக சக்தியை பிம்பத்திற்கு மீண்டும் செலுத்துவார்கள்.
கும்பம்
யாகசாலையில் மந்திரம், கிரியை, தியானம் ஆகியவற்றுடன் வளர்க்கப்பட்டு எழும் புகையுடன் வேத ஒலி, சிவாகம ஒலி, மறை ஒலி ஆகியவற்றுடன் பக்தர்களின் நல்ல எண்ணங்களும், எங்கும் நிறைந்திருக்கின்ற திருவருள் சக்தியைத் தூண்டிவிட்டு கும்பத்தில் விளங்கச் செய்யும். அப்போது கும்பம் தெய்வீக சக்தி பெறும். இந்தக் கும்பத்தை சிவனின் வடிவமாக ஆகமங்கள் கூறுகின்றன.
பாலாலயம்
கும்பத்தை கோயிலில் உள்ள தெய்வச்சிலை அருகில் வைப்பார்கள். தர்ப்பை, மாவிலை கொண்டு மந்திரங்கள் ஓதி, தெய்வ வடிவில் விளங்கும் மூர்த்தியை கும்பத்திற்கு மாற்றுவார்கள். பின்பு அதை வேறிடத்திற்கு எழுந்தருளச் செய்வார்கள். இதை பாலாலய பிரவேசம் என்பர்.
கிரியைகள்
கும்பாபிஷேகம் நடக்கும்போது ஒரு காலத்தில் 64 கிரியைகள் செய்யப்பட்டன. காலப்போக்கில் 55 கிரியைகள் செய்யப்பட்டன. ஆனால் தற்போது எல்லா கிரியைகளும் செய்யப்படுவதில்லை. 64ல் பின்வரும் முக்கியமான கிரியைகளை மட்டும் தேர்ந்தெடுத்து, இப்போது கும்பாபிஷேகத்தை நடத்துகின்றனர்.
* ஆற்றல் மிக்க ஓர் ஆசாரியனைத் தேர்ந்தெடுத்து இறைவனின் அனுமதி பெற்று நியமனம் செய்யும் அனுக்ஞை .
* இறைவனிடம் நமது தேவைகளைக் கோரிக்கையாக வைக்கும் சங்கல்பம்.
* பூஜை பாத்திரங்களுக்குரிய தேவதைகளுக்குப் பூஜை செய்யும் பாத்திர பூஜை.
* கணபதியை வழிபடும் கணபதி பூஜை.
* வருண பகவானையும், சப்த நதி தேவதைகளையும் வழிபடும் வருண பூஜை.
* பசு மூலமாகக் கிடைக்கும் பால், தயிர், நெய், பசு நீர், பசு சாணம் ஆகியவற்றை வைத்துச் செய்யப்படும் கிரியையான பஞ்ச கவ்யம்.
* தேவர்களை வழிபடும் வாஸ்து சாந்தி.
* திக்பாலர்களை வணங்கும் பிரவேச பலி .
* ஆலயம் நிர்மாணம் செய்கையில் கஷ்டப்படுத்திய பூமாதேவியை மகிழ்விக்கச் செய்யப்படும் பரிகாரம். மண் எடுத்து வழிபடும் மிருத்சங்கிரஹணம்.
* எடுத்த மண்ணில் விதைகளைப் பயிரிட்டு முளைப்பாரி வளரச் செய்து, அதில் 12 சூர்யர்களான வைகர்த்தன், விவஸ்வதன், மார்த்தாண்டன், பாஸ்கரன், ரவி, லோகபிரகாசன், லோகசாட்சி, திரிவிக்ரமன், ஆதித்யன், சூரியன், அம்சுமாலி, திவாகரன் போன்றவர்களையும் ,சந்திரனையும் வழிபடும் அங்குரார்ப்பணம்
* ஆச்சாரியனுக்கும் மற்ற உதவி ஆசாரியர்களுக்கும் கையில் காப்புக் கட்டும் ரக்ஷாபந்தனம்.
* கும்பங்களை இறைவன் உடலாக நினைத்து அலங்காரம் செய்யும் கும்ப அலங்காரம்.
* விக்கிரகத்தில் இருக்கும் சக்தியை கும்பத்துக்கு மந்திரப் பூர்வமாக அழைக்கும் கலா கர்ஷ்ணம்.
* கலசங்களை யாகசாலைக்கு அழைத்து வரும் யாகசாலை பிரவேசம்.
* யாகசாலையில் உள்ள சூரிய சந்திரனை வழிபடும் சூர்ய, சோம பூஜை.
* யாகசாலையை பூஜை செய்யும் மண்டப பூஜை.
* விக்கிரகங்களை மந்திரத்தின் மூலமாக சுத்தம் செய்யும் பிம்ப சுத்தி .
* மிக முக்கியமானதான இறைவனின் சக்தியில் ஒரு பகுதியை ஒரு இணைப்பு மூலமாக விக்கிரகங்களுக்குக் கொண்டு சேர்க்கும் நாடி சந்தானம்.
* 36 தத்துவத் தேவதைகளுக்கும், உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மா பித்ருக்களுக்கும் சாந்தி செய்யும் விசேஷ சந்தி.
* பூத (மனித) உடலை தெய்வத்தின் உடலாக மந்திரப் பூர்வமாக மாற்றி அமைக்கும் பூத சுத்தி.
* 36 தத்துவங்களை யாகத்திலிருந்து மூல விக்கிரகங்களுக்குக் கொண்டு சேர்க்கும் ஸ்பர்ஷாஹுதி.
* எட்டு பொருள்களால் மருந்தினால் மூர்த்தியையும், பீடத்தையும் ஒன்று சேர்க்கும் அஷ்டபந்தனம்.
* யாகத்தைப் பூர்த்தி செய்யும் பூர்ணாஹுதி.
* யாக சாலையில் மூர்த்திகளுக்குரியதாக வைத்துப் பூஜிக்கப்பட்ட கும்ப நீரை அந்தந்த மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்யும் கும்பாபிஷேகம்.
* கும்பாபிஷேகம் முடிந்த பிறகு மூல விக்கிரகத்துக்கு முறைப்படி அபிஷேகம், அலங்காரம் செய்யும் மஹாபிஷேகம்.
* இறைவனை 48 நாட்கள் விசேஷ அபிஷேக பூஜைகள் செய்து முழு சக்தியுடன் இருக்கச் செய்யும் மண்டலாபிஷேகம்.
இவற்றோடு யாக குண்டங்களை அமைக்கவும் நெறிகள் உள்ளன.
ஏக குண்டம் – ஒரு குண்டம் அமைத்தல்.
பஞ்சாக்னி – ஐந்து குண்டம் அமைத்தல்.
நவாக்னி – ஒன்பது குண்டம் அமைத்தல்.
உத்தம பக்ஷம் – 33 குண்டம் அமைத்தல்.
யாக குண்டத்திற்கான மணல் பெரும்பாலும் புனித நதிப் படுகையிலிருந்தே பெறப்படும். கிடைக்காத பட்சத்தில் கிடைக்கின்ற மணலை நன்கு சுத்தப்படுத்தி கங்கை, காவிரி போன்ற புனித நீரைத் தெளித்து, மிருத்திகா பூஜை செய்த பிறகே, அதனை ஹோம குண்டத்தின் அடித்தளமாகப் பயன்படுத்துதல் வேண்டும்.
ஹோமத்திற்காக சுத்தமான பசு நெய்தான் ஆஹுதி அளிக்கப்பட வேண்டும். உலோகப் பாத்திரங்களைத் தவிர்த்து, மரக்கிண்ணம், மரப்பாத்திரம் அல்லது வெள்ளி, தங்க கிண்ணங்களையோ, தென்னை, பனை ஓலையினால் ஆன தொன்னைகளையோப் பயன்படுத்தலாம்.
யாகத்தில் ஆஹுதியை இடும் பொழுது, மரக்கரண்டியை அல்லது மாவிலையை மட்டும் பயன்படுத்துதல் வேண்டும். யாக மரக்கரண்டியும். மா, பலா, தேக்கு, சந்தனம், வேங்கை போன்ற மரங்களில் செய்யபட்டிருக்க வேண்டும். யாகத்தில் இடப்படும் ஆஹுதிகள், அரசு, ஆல், வேம்பு போன்ற மூலிகை மரப் பொருட்களாக இருக்க வேண்டும். ஆண்டாண்டு காலமாக மனதில் நெஞ்சிலும் உள்ள தீயவினைப் படிவுகளை யாக புகை நீர் வடிவில் வெளியேற்றுகின்றது.
யாக குண்டங்களும் தெய்வங்களைப் பொறுத்து மாறுபடுகின்றன. அவை;
விநாயகர் – பஞ்சகோணம்
முருகர் – ஷட்கோணம்
சிவன் – விருத்தம்
அம்மன் – யோணி
பரிவாரம் – சதுரம்.
கும்பாபிஷேகத்திற்கு செய்யப்படும் யாகங்களை எத்தனை முறை செய்ய வேண்டும் என்றும் விதிமுறை உள்ளது. அது 2 காலம், 4 காலம், 8 காலம், 12 காலம் வரை செய்யும் முறை வழக்கத்தில் உள்ளது.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை (ஒரு மாமாங்கம் = 12 வருடங்கள்) கும்பாபிஷேகம் செய்வது என்பதே மிகவும் விசேஷமானது. அஷ்டபந்தனங்களின் சக்தியை மீண்டும் பெறுவதற்காக மட்டுமன்றி இவ்வாறு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்வதற்கான வேறு சில அறிவியல் ரீதியான காரணங்களையும் பார்க்கலாம்.
* பழங்காலக் கோயில்களில் இடிதாங்கிகள் என்று தனியாக ஒன்றும் கிடையாது. இடிதாங்கியை பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் 18 ஆம் நூற்றாண்டில்தான் கண்டுபிடித்தார். இடி மின்னல்கள் கோபுரத்தைத் தாக்கும் போது கோபுரங்கள் இடிந்து விழ வாய்ப்புகள் ஏராளமாக இருந்தும் நம் கோயில் கோபுரங்கள் பாதிக்கப்படாமல் இருந்திருக்கின்றன. ஏனெனில், இடி மின்னல்களில் இருந்து கோபுரத்தையும் கோயிலையும் காக்க, கும்பங்களில் காற்றுப்புகாதபடி நவதானியங்களை நிரப்பி வைத்து விடுவார்களாம். அப்படி வைக்கப்படும் கும்பமும் அதில் உள்ள தானியங்களும் இடி தாங்கியாக செயல்பட்டு இடி மின்னலை நீர்த்துப் போக வைத்து விடும் தன்மையை பன்னிரண்டு ஆண்டுகள் மட்டுமே கொண்டிருக்கும்.. மீண்டும் கோயில் புனரமைப்பின் போது கும்பமும் உள்ளிக்கும் தானியங்களும் புதிதாக மாற்றப்படுவதால் இடி தாங்கியாக மீண்டும் அது செயல்பட ஆரம்பித்து விடும்.
* உறைபனியினடியில் உலகின் மிக முக்கிய தாவரங்களின் விதைகளை சேமித்து வைத்திருக்கும் விதைவங்கிகள் உலகின் முக்கியமான இடங்களில் இருக்கின்றன. பேரழிவு எற்பட்டு உலகத்தின் மொத்த தாவரங்களும் அழிந்து போனாலும் மீண்டும் அனைத்தையும் பயிரிட்டு உருவாக்கிக் கொள்வதற்காகத்தான் இப்படி விதைகள் சேமித்து வைக்கப்படுகின்ற்ன. பழங்காலத்தில் இத்தைய விதை சேமிப்பு வங்கிகளாக இந்த கலச கும்பங்களே இருந்திருக்கின்றன. கும்பங்களின் உள்ளிருக்கும் (மூன்று முதல் ஐந்து கிலோ அளவுள்ள நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள் அல்லது சில பகுதிகளில் ராகி,கம்பு,சோளம்,நெல், சாமை, திணை, தட்டைப்பயிறு, பாசிபயறு, துவரை) தானிய விதைகள், 12 வருடங்களுக்கு முளைக்கும் திறனுடன் இருக்கும் பின்னர் அவை மீண்டும் புதிதாக மாற்றப்படும். இயற்கைப்பேரழிவுகள் ஏற்பட்டு கோவில் இருக்கும் இடத்தின் தாவரங்கள் அனைத்தும் அழிந்தாலும், அந்ந்ததக் கோவில்கள் இருக்குமிடங்களில் மீண்டும் அவற்றை சாகுபடி செய்து மனித குலத்தை காக்கும் இறைவழியிலான ஏற்பாடே இந்த கும்பங்களில் தானியங்களை சேர்த்துவைக்கும் வழக்கமென்கிறது மற்றுமொரு அறிவியல் காரணம்.
இப்படி ஆன்மிகக் காரணங்களோடு பல அறிவியல் காரணமும் கும்பாபிஷேகத்தின் பின்னணியில் உண்டு.
கும்பாபிஷேகத் தினத்தன்று ஆலயத்துக்குச் சென்று வழிபட்டால், முப்பது முக்கோடித் தேவர்களின் ஆசியும் அருளும் கிடைக்கும். கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள இயலாதவர்கள், 48 நாட்கள் நடக்கும் மண்டல பூஜையில் கலந்து கொண்டும் அதே நன்மைகளைப் பெறலாம். ஒரு கும்பாபிஷேகத்தைக் காண்பது மூன்று ஜென்மங்களில் நாம் செய்த பாவத்தைப் போக்கக் கூடியது என்கிற தொன்ம நம்பிக்கையுமுண்டு.