ஆ -ஆன்மா, கமம் - பாசங்களை நீக்கம் செய்து முக்திப் பேற்றை அருளுவது.
இறைவனது ஐந்து முகங்களிலிருந்து இருபத்தெட்டு ஆகமங்கள் தோன்றினவென்று காரணாகமத்தால் அறிகிறோம்.
சத்யோஜாத முகத்திலிருந்து காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அஜிதம் என்ற ஆகமங்கள் தோன்றின.
வாமதேவ முகத்திலிருந்து தீப்தம், குஷ்மம், ஸஹஸ்ரம், அம்சுமான், சுப்ரபேதம் என்ற ஆகமங்கள் தோன்றின.
அகோர முகத்திலிருந்து விஜயம்,பிச்வாசம். சுவாயம்புவம், அநலம், வீரம் என்ற ஆகமங்கள் தோன்றின.
தத்புருஷ முகத்திலிருந்து ரௌரவம், மகுடம், விமலா, சந்திரஞானம், பிம்பம் என்ற ஆகமங்கள் தோன்றின.
ஈசான முகத்திலிருந்து ப்ரொத்கீதம், இலளிதம், சித்தம், சந்தனம், சர்வோக்தம், பரமேச்வரம், கிரணம், வாதூலன் என்ற ஆகமங்கள் தோன்றின.
இந்த இருபத்தியெட்டு ஆகமங்களுள் பத்து ஆகமங்கள் சிவா பேதங்களாகும். ஏனைய பதினெட்டு ஆகமங்களும் ருத்ர பேதங்களாகும். சிவாகமங்களில் சரியாபாதத்தில் பூஜைக்குரிய பொருள்களைச் சேகரித்தல், பூஜை முறைகளும் கூறப்பட்டுள்ளன. கிரியபாதத்தில் கர்ஷணம் (உழுதல்) முதல் ப்ரதிஷ்டைவரையில் உள்ள கிரியைகளும், நித்ய நைமித்திக பூஜைகளும் திருவிழா முறைகளும், சமய, விஷேச, நிர்வாண தீட்சை விதிகளும் கூறப்பட்டுள்ளன. யோகபாதத்தில் ஆன்ம சுத்தி, அந்தர் யாகம் முதலியனவும், ஞானபாதத்தில் பதி, பசு, பாச இலக்கணங்களும் கூறப்பட்டு இருக்கின்றன. மேலும், ஆகமங்களில் தத்துவ ரூபம், தத்துவ தரிசனம். தத்துவ சுத்தி, ஆத்ம ரூபம், ஆத்ம தரிசனம், ஆத்ம சுத்தி, சிவரூபம், சிவதரிசனம், சிவா யோகம், சிவா போகம் எனும் தசகாரியங்களது இலக்கணங்களும் உரைக்கப்பட்டிருக்கின்றன.
வைணவாகமங்கள்
விஷ்ணுவை பரதேவதையாகக் கூறும் ஆகமங்கள் வைணவாகமங்களாகும். வைணவாகமங்கள் பாஞ்சராத்ரகமம் எனவும், வைகானஸாகமம் எனவும் இருவகைப்படும்.
பாஞ்சராத்ரகமம் பல ரிஷிகளின் மூலமாகவும், வைகானஸாகமம் விகனஸர் என்ற மகரிஷியின் மூலமாகவும் உபதேசிக்கப்பட்டன. இவ்விரு ஆகமங்களுக்கும் பேதமில்லை. ஆனால், ஆலய பூஜாவிதிகளிலும், தினசரியைகளிலும் சிறிது பேதமுண்டு. பாஞ்சராத்ரஸம் ஹிதைகளின்படி மேலக்கோட்டை என்கிற திருநாராயணபுரம், ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம் என்ற மூன்று ஆலயங்களிலும் பூஜை முதலியன நடைபெற்று வருகின்றன. திருப்பதி கோவில் வைகானஸ ஆகமத்தை ஒட்டி நடந்து வருகிறது.
ஒரு யாகத்தின் இடையில் ஐந்து இரவுகளில் பகவானால் உபதேசிக்கப்பட்டதால் பாஞ்சராத்ம் எனப் பெயர் பெற்றது எனவும் கூறுவர். இந்த பாஞ்சராத்ரகமங்களில் தேவாலயங்களுக்கென்று ஏற்பட்ட தலங்கள், தேவாலய நிர்மாணங்கள், விக்கிரகப் பிரததிஷ்டாக்ரமங்கள், பூஜா காலங்கள், பூஜா திரவியங்கள், உத்ஸவாதிகள், ஸம்ப்ரோட்சணாதிகள், பூஜை செய்பவர்களின் யோக்கிய தாம்சங்கள், அவர்களுக்கு ஏற்பட்ட தீக்ஷை முதலியவைகள் விளக்கப்பட்டுள்ளன.
இவ்வாகமங்களால் சொல்லப்படும் பொருள்களில் மிகவும் முக்கியமானவை மந்திரங்களும், முத்திரைகளும் ஆகும். அவை ஆலய நித்ய, நைமித்திக பூஜைகளுக்கு முக்கியமான சாதனங்களாகும்.