அமாவாசையை அடுத்து வரும் மூன்றாம் நாளில் தெரியும் நிலவுதான் மூன்றாம் பிறை என அழைக்கப்படுகிறது. இந்த நாளில் சந்திர தரிசனம் செய்தால் மனநிறைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும். மேலும் நாம் செய்த பாவங்கள் நீங்கி செல்வம் பெருகும் என்கின்றனர்.
மூன்றாம் பிறை தரிசனம், முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீகச் சின்னமாகும். காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் முக்தி அடையலாம் என்பதை நினைவுபடுத்துவதற்கேப் பெரியவர்கள் இதைக் காணவேண்டும் என்று கூறினார்கள்.
சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள், தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனம் கண்டால் சந்திரனின் பரிபூரண அருளைப் பெறலாம்.
சந்திரனுக்கும் ஆயுளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் கெட்டிருந்தால் அவர்களுக்கு நீண்ட ஆயுள் அமையாது. அவர்கள் மூன்றாம் பிறையில் சந்திர தரிசனம் செய்து வணங்குவது ஆயுள் தோஷம் போக்கி ஆயுளை விருத்தியாக்கும்.
மேலும் சந்திரனைத் தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையைத் தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் கிடைக்கும்.
மூன்றாம் பிறைக்குப் புராணகதை ஒன்றும் இருக்கிறது. அது,
ஒரு முறை தட்சனின் சாபத்தால், தனது பதினாறு கலைகளையும் இழந்தான் சந்திரன். தனது கலைகளை மீண்டும் பெறுவதற்காக சந்திரன் சிவபெருமானை நினைத்துத் தியானம் செய்தார். தட்சனின் சாபத்தால் உருகும் சந்திர பகவானின் தேக நிலை குறித்து மிகவும் வருத்தம் அடைந்தனர், அவரின் இருபத்தேழு நட்சத்திர மனைவியர். உடனே தங்களின் தந்தையான தட்சனிடம் சென்று சாப விமோசனம் அளிக்கும்படி வேண்டினர். தட்சனோ தனது அறியாமையால், அளித்த சாபத்தால் தனது புண்ணியம் அனைத்தும் குறைந்துவிட்டது என்றும், தன்னால் சாப விமோசனம் அளிக்க முடியாது என்றும் கூறினார். இறுதியில் 27 நட்சத்திர மனைவியரும் சந்திரனும் சிவபெருமானை நினைத்துத் தவம் புரிந்தனர். சந்திரனின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் தன் தலைமுடியில், ‘மூன்றாம் பிறையாக’ அமரும் பேறு பெற்றார்.
சுறுசுறுப்போடு அதேநேரம் சிறுகச் சிறுக வளர்ந்தால் முழுப்பலனையும் அடையமுடியும் என்னும் கருத்தை வலியுறுத்துகின்றது இந்த பிறை. இதை வைத்துத்தான் எண்பது வயது நிறைவுற்றவர்களை 'ஆயிரம் பிறை கண்டவர்' என்று அவருக்குச் சதாபிஷேகம் செய்து கொண்டாடுகின்றனர்.
அமாவசையை அடுத்து வரும் மூன்றாம் நாளில் சந்திர தரிசனம், அதாவது மூன்றாம் பிறை காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும். செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வரும் மூன்றாம் பிறை மிகவும் விசேஷமான ஒன்றாகும். குறிப்பாக, சித்திரை, வைகாசி மாதங்களில் வரும் இப்பிறையைக் கண்டால் ஓர் ஆண்டு சந்திர தரிசனம் செய்த பலன் கிடைக்கும். கார்த்திகை, மார்கழி மாதங்களில் வரும் மூன்றாம் பிறையைக் கண்டால் சகல பாவங்களும் தொலையும்.
திங்கட்கிழமையை அந்த சோமவாரத்தில் வரும் மூன்றாம் பிறையை நீங்கள் பார்த்து விட்டால், வருடம் முழுக்க நீங்கள் சந்திரனை வணங்கிய பலன்கள் அனைத்தும் கிடைக்கும்.