சக்திதேவியின் ஆயிரம் திருநாமங்களைச் சொல்லி, அந்தப் பெயர்களால் அவரை அர்ச்சிக்கும் மந்திரங்கள் கொண்ட நூல் லலிதா சகஸ்ரநாமம். இந்நூலில் அம்பிகைக்குப் பிடித்த நைவேத்திய வகைகள் சில சொல்லப்பட்டிருக்கின்றன. அவை;
* 480வது சுலோகமான, “பாயஸான்ன ப்ரியாயை’ என்பதற்கு, “பால் பாயசத்தை விரும்புபவள்’ எனப் பொருள்.
* 501வது ஸ்லோகமான, “குடான்ன ப்ரீத மானஸாயை’ என்பதற்கு, “சர்க்கரைப் பொங்கலை விரும்புபவள்’ என்று பொருள்.
* 526வது ஸ்லோகமான, “ஹரித் ரான்னைக ரஸியை’ என்பதற்கு, “மஞ்சள் பொடி கலந்த எலுமிச்சைச் சாதத்தை ரசித்து உண்பவள்’ எனப் பொருள்.
* அம்பிகை குறித்த இன்னொரு சுலோகமான, “தத்யான்ன ஸக்த ஹ்ருதயாயை’ என்பதற்கு, “தயிர் சாதம் என்றால் இதயத்தையேக் கொடுப்பவள்!’ என்று பொருள்.
* “முத் கௌத நாஸக்த…’ என்ற சுலோகத்திற்கு, “பாசிப்பருப்பு, அரிசியில் சமைத்த வெண்பொங்கலை விரும்புபவள்!’ என்று பொருள்.
* “ஸர்வெளதன ப்ரீதசித்தா’ என்ற சுலோகத்திற்கு, “அம்பிகை கதம்பச் சாதம், தேங்காய்ச் சாதம், புளியோதரை ஆகியவற்றை உண்ணும் மனதைக் கொண்டவள்!” எனப் பொருள்.
* 559வது ஸ்லோகத்தில், “தாம்பூல பூரிதமுகிச்யை’ என்ற சுலோகம் வருகிறது. இதற்கு, “தாம்பூலம் தரித்ததால் லட்சணமாக இருக்கும் முகத்தைக் கொண்டவள்!’ எனப் பொருள்.(தாம்பூலம் என்பது வெற்றிலை, பாக்கைக் குறிக்கும். எனவே தான் கடவுளுக்கு நாம் நிவேதனம் படைத்து வழிபடுகிறோம்)
அம்பிகைக்குப் பிடித்ததாகச் சொல்லப்படும் மேற்காணும் நைவேத்தியங்களை மட்டுமேக் கொண்டு அம்பிகையை வழிபட வேண்டுமென்கிறதில்லை. நம் வசதிக்கேற்ற நைவேத்யத்தைப் படைத்து வழிபடலாம். அம்பிகை பக்தனிடம் எதிர்பார்ப்பது உண்மையான பக்தி மட்டுமே.