கிராமதேவதை வழிபாடு என்பது ஒவ்வொரு கிராமத்துக்கும் முக்கியமானது. அந்தந்தக் கிராமங்களை இயற்கைச் சீற்றங்களிலிருந்து பாதுகாத்து இயற்கை வளத்தைப் பெருக்குவது, இந்தக் கிராம தேவதைகளின் வழிபாட்டால்தான். அவற்றுக்கு நடைபெறும் திருவிழாவின் ஓர் அங்கமாக, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சுமங்கலிப் பெண்களால் செய்யப்படுவதுதான் முளைப்பாரி வழிபாடு. கிராம தேவதைகளின் திருவிழா தொடங்கும் நாளன்று திருமணமான சுமங்கலிப் பெண்கள் ஒரு புதிய பானை அல்லது வாயகன்ற மண் பாத்திரத்தில் சத்தமான மண்ணை நிரப்பி, அதில் தட்டைப் பயிறு, சிறுபயிறு, பாசிப்பயறு, மொச்சைப்பயிறு, சோளம், கம்பு, பருத்தி போன்ற விதைகளை நெருக்கமாகத் தூவி, அதை வெயில் அதிகம் படாத ஒரு இடத்தில் வைத்து, பானையில் இருக்கும் செடிகளுக்கு தினசரி நீர் ஊற்றி வளர்த்து வருவார்கள். இதனால் தூவப்பட்ட பயறு போன்ற விதைகள், மண்பானையில் நெருக்கமாக முளைத்து நீண்டு வளர்ந்து நிற்கும்.
இந்த முளைப்பாரி வளரும் போது ஒவ்வொரு நாளும் அது வளரும் வீட்டின் முன்னால், பெண்கள் வட்டமாக நின்று கும்மி பாட்டுப் பாடி வழிபடுவார்கள். இதனால் பயிர்கள் நன்கு வளரும். கும்மிப் பாடல்களில் மழை வளத்தையும், குழந்தை மற்றும் வளமான வாழ்க்கையும் தங்களுக்கு தர வேண்டும் என்பதாக இருக்கும். கீழ்க்காணும் பாடலை இதற்கு எடுத்துக்காட்டாய்க் கொள்ளலாம்.
”பூக்காத மரம் பூக்காதோ – நல்ல
பூவுல வண்டு விழாதோ
பூக்க வைக்கும் காளியம்மனுக்கு
பூவால சப்பரம் சோடனையாம்
காய்க்காத மரம் காய்க்காதோ
காயில வண்டு விழாதோ
காய் காய்க்க வைக்கும் காளியம்மனுக்கு
காயால சப்பரம் சோடனையாம்”
இவ்வாறு கிராமதேவதையின் திருவிழா கொடியேற்றம் நடக்கும் முதல் நாள் முதல், கொடி இறக்கும் பத்தாம் நாள் திருவிழா முடியும்வரை வளர்த்துவிட்டு, திருவிழா முடியும் நாளன்றோ அல்லது அதற்கு முன் நாளன்றோ, செடிகள் நிறைந்துள்ள அந்தப் பானையை ஊர்வலமாக, கிராம தேவதை ஆலயத்துக்கு எடுத்துச் சென்று, கிராம தேவதைக்கு முன்னர் ஊர் நலத்தையும் தங்கள் குடும்ப நலத்தையும் வேண்டிக்கொண்டு, அந்த முளைப்பாரியை நீர்நிலைகளில் பாட்டுப்பாடி கரைத்து விடுவார்கள்.
அப்போது பெண்கள்
”வாயக் கட்டி வயித்தக்கட்டி
வளர்த்தேன்ம்மா முளைய – இப்ப
வைகாசி தண்ணியில
போரேயம்மா முளைய”
என்று பாடிக் கொண்டு முளைப்பாரியை போடுகின்றனர்.
இதனால் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படாமல், தகுந்த காலத்தில் மழை பெய்து விவசாயம் நன்கு பெருகி, கிராமம் சுபிட்சமாக இருக்கும். இதைச் செய்யும் பெண்கள் குடும்பத்திலும் அம்மன் அருளால் தக்க காலத்தில் குழந்தைகள் பிறந்து, வம்சம் வளர்ச்சியடையும்.
பொதுவாகவே, நாம் முக்கியமாகச் செய்யும் பல விதமான சடங்குகளிலும் பயிரிடுதல், செடி வளர்த்தல், மரம் வளர்த்தல் போன்றவை தவறாது இடம்பெறும். குறிப்பாக திருமணம், உபநயனம், ஆலய கும்பாபிஷேகம் போன்ற முக்கியமான நிகழ்ச்சிகளில், இந்த முளைப்பாரியைப் போன்றே, மண்ணாலான ஐந்து கிண்ணங்களில் மண்ணைப் பரப்பி, அந்த மண்ணில் விதைகளை விதைத்து, திருமணமான சுமங்கலிப் பெண்கள் மூலம் நீர் விட்டு வளர்க்கச் செய்து, அந்த மண் பாலிகைகளை, செடிகளை மங்கள நிகழ்ச்சிகள் முடியும் நாளன்று, நீர் நிலைகளில் பாட்டுப்பாடி கரைத்துவிட வேண்டும். இதனால் நிகழ்ச்சி தடங்கலின்றி நிறைவேறுவதுடன், மங்களமும் ஏற்படும் என்கிறது சாஸ்திரம். இதுவே முளைப்பாரி எனும் வேண்டுதல் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.