1. சுகப்பிரம்மரிடம் மனம் ஒன்றி கிருஷ்ணரின் லீலைகளைக் கேட்டார் பரீட்சித்து மன்னர். இறைவனின் சிறப்புகளைக் கேட்பதும் வழிபாடுதான்.
2. சுகப்பிரம்ம முனிவருக்கு, அவரது தந்தை வியாசர் வேதங்கள் குறித்துச் சொன்னார். அதைக் கேட்டே சுகப்பிரம்மர் உயர்வெய்தினார். கடவுளைப் பற்றிப் பிறருக்குச் சொல்வதும் வழிபாடுதான்.
3. பிரகலாதன் எந்நேரமும் இறைவன் நாராயணனையேச் சிந்தித்துக் கொண்டிருந்தான். நினைப்பதும் இறை வழிபாட்டில் ஒன்றுதான்.
4. பெருமாளின் பாதங்களுக்கு சேவை செய்தாள் லட்சுமி. இறைவனின் திருப்பாதங்களைப் பார்த்தாலே போதும். பாதசேவையும் இறைவழிபாடுதான்.
5. கோயில் அல்லது வீட்டில் வழிபடுவதும் வழிபாடுகளில் ஒன்றுதான்.
6. இருக்கும் இடத்திலிருந்து கொண்டே இறைவனை வேண்டுதலும் வழிபாடுதான்.
7. தமக்குக் கொடுக்கப்பட்ட பணியினைச் சிறப்பாகச் செய்து முடிப்பதும் வழிபாடுகளில் ஒன்றுதான். இராமனின் கட்டளையை ஏற்று அனுமன் செய்த பணியை இங்கு குறிப்பிடலாம்.
8. கடவுளை தன் தாயாக, தந்தையாக, நண்பனாக, உறவாக ஏற்பதும் ஒரு வழிபாடுதான். மகாபாரதத்தில் அர்ச்சுணன் கிருஷ்ணனை நண்பனாக ஏற்றதை இங்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
9. இந்த உடலால் செய்யும் ஒவ்வொரு நற்செயலையும் இறைவனுக்கு அர்ப்பணித்தல். திருமாலிடம் மகாபலி தன்னை ஒப்படைத்ததை இங்கு நினைவில் கொள்ளலாம்.
ஆக, கேட்டல், சொல்லுதல், நினைத்தல், பாதசேவை செய்தல், கோயிலில் வழிபடுதல், இருந்த இடத்திலேயே வேண்டுதல், பணிதல், நட்பு கொள்தல், சமர்ப்பணம் செய்தல் எனும் ஒன்பது வழிகளில் ஏதாவதொன்றைப் பின்பற்றி இறைவழிபாட்டைச் செய்யலாம்.