"அரியும் சிவனும் ஒன்று, இதை அறியாதவன் வாயில் மண்ணு' என்று ஒரு சொலவடை உண்டு.
ஸ்ரீஹரியாகிய விஷ்ணுவும், சிவபெருமானும் ஒன்று தான். இதில் பேதம் காண்பதற்கு எதுவுமில்லை என்பதற்காக இந்தச் சொலவடை பிறந்ததாகச் சொல்வதுண்டு.
இதில் இன்னொரு கருத்தும் உண்டு.
அரியையும், சிவனிலுள்ள முதலெழுத்தான "சி'யையும் இணைத்தால் "அரிசி' ஆகும். அரிசி இருந்தால் தான் சோறாகும். சோறு உண்பவனே உயிர் வாழ முடியும். நாம் உயிர் வாழ்வதற்கும் இந்த இருபெரும் தெய்வங்களும் உதவுவதாகக் கொள்ளலாம். சிவபெருமான் விண்ணுக்கும் மண்ணுக்குமாக நெருப்பு வடிவில் உருவெடுத்தார். எனவே, அவர் விண்ணுக்கும் மண்ணுக்கும் அதிபதியாக விளங்குகிறார். விஷ்ணுவும் அப்படியே! அவர் கிருஷ்ணாவதாரத்தில் குழந்தையாக இருந்த போது வாயைத் திறந்து காட்டினார். உள்ளே மண்ணுலகம் உட்பட எல்லா உலகங்களும் இருந்தது.
"அறியாதவன்' என்பதை "அறி+யாதவன்' என்று பிரிப்பர். அறிதுயில் கொள்ளும் (உலகத்தில் என்ன நடக்கிறது என்பதை முழுமையாக அறிந்த வண்ணம் கண் மூடியிருப்பார் திருமால். இதையே "அறி துயில்' என்பர்) யாதவ குலத்தைச் சேர்ந்த கண்ணனின் வாயில் மண்ணில் இருந்தது என்றும் இந்தச் சொலவடைக்குப் பொருள் சொல்வார்கள்.