மகாலட்சுமிக்கு பிறப்பு, இருப்பு மற்றும் இயல்பு எனும் மூன்று பெருமைகள் உண்டு. அவை;
1. பிறப்பின் பெருமை
பாற்கடலில் அவதாரம் செய்தார் மகாலட்சுமி. அமிர்தத்தைப் பெறுவதற்காகப் பெருமாள் பாற்கடலைக் கடைந்தார் என்று சொல்வதை விட, மகாலட்சுமியைப் பெறவே அவர் பாற்கடலைக் கடைந்தார் என்று சொல்வதுதான் சரி. அமிர்தம் சக்கை மாதிரி. தாயார் தான் சாரம். தாயார் தோன்றினார், எல்லாரும் பார்த்துக் கொண்டே இருக்கும் போது, அவர் பெருமாளின் திருமார்பில் போய் நிலையாகத் தங்கிவிட்டார். தாயாரின் பிறப்பின் பெருமை அத்தகையது. ஜனகர் யாகத்துக்காக நிலத்தை உழும்போது, நிலத்தில் கிடைத்தவள் தாயார் சீதாப்பிராட்டி. பெருமாளுடைய அவதாரத்தைக் காட்டிலும் தாயாருடைய அவதாரம் மிகச் சிறந்ததாகும். பெருமாளாவது சில சமயம் தேவகி, கௌசல்யா இவர்களின் பிரார்த்தனைக்கு இணங்க அவர்களின் கர்ப்பத்தில் வாசம் செய்தார். ஆனால் தாயார் அப்படி இல்லை. அயோனிஜையாகப் பிறந்தாள். அது தான் தாயாரின் மிகப் பெரிய ஏற்றம். பிருகு மகரிஷி பிரார்த்தித்தார் என்று குடந்தையில் பொற்றாமரை குளத்தில் அவதரித்தார். அதே மாதிரி பிருகு மகரிஷி பிரார்த்தனைக்கு இணங்க காஞ்சியில் பொற்றாமரை குளத்தில் பெருந்தேவி தாயாராக அவதரித்தார். திருத்தங்கா என்ற தூப்பிலிலும் லக்ஷ்மி சரஸ் என்ற குளத்தில்தான் அவதாரம் செய்தார். பாற்கடலில் இருந்தும், குளங்களிலும் இருந்தும், யாக பூமியில் இருந்தும் தான் தாயார் அவதாரம் செய்துள்ளார்.
2. இருப்பினால்_பெருமை
ராவணன் மாரரீசனிடம் சீதையைக் களவாட உதவி புரிய வேண்டும் என்று கேட்கிறான். அப்பொழுது மாரீசன் சொல்கிறான். நீ ராமனைக் குறைவாக எடை போடாதே, அவனுடன் சீதை இருக்கிறாள். அவளின் சக்தி கணக்கில் அடங்காது. அவர்களுக்கு நடுவில் வந்தால் நீ பொசுங்கிப் போய் விடுவாய் என்று கூறுகிறான். அவ்வளவு பெருமை தாயாருக்கு. எந்த இடத்தில் துளசி காடுகள், தாமரை காடுகள் , வைஷ்ணவர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் பெருமாள் வசிக்கிறார். தாயாரோ பெருமாளின் திருமார்பில் வசிக்கிறார். தன்னுடைய நிரந்தர வாசஸ்தலமாக எம்பெருமானின் திருமார்பை ஏற்றுக் கொண்டார் மகாலட்சுமி. தாயாரின் மனத்தில் பெருமாள் என்றும் இருந்து கொண்டிருக்கிறார். அதனால் இருவரும் என்றும் பிரியாமல் இருக்கிறார்கள்.
3. இயல்பினால்_பெருமை
மூன்று லோகங்களுக்கும் அதிபதி தாயார். ஸ்ரீவைகுண்டமும் தாயாரின் ஐஸ்வர்யம் தான். அத்தனை கல்யாண குணங்களும் கொண்டு திகழ்பவர் மகாலக்ஷ்மி தாயார். அவளின் கண்கள் கருணையே உருவெனக் கொண்டவை. அவளின் திருமுகம், எப்போதும் சாந்தமாகவே இருக்கிறது. அகில உலகத்துக்கும் அன்னையான அவள் நல்லுள்ளம் கொண்டவர்களின் இல்லங்களுக்குச் செல்வதையே விரும்புகின்றாள். எந்த வீட்டில், கெட்ட வார்த்தைகள் பேசப்படுகிறதோ, அங்கே மகாலக்ஷ்மி வருவதே இல்லை என்கிறது சாஸ்திரம். ‘பொண்ணு மகாலக்ஷ்மி மாதிரி இருக்காள்’ என்று சொல்லுவார்கள். அதன் பொருள், மகாலக்ஷ்மி போல் அழகுற அமைந்திருக்கிறாள் என்பது மட்டுமல்ல, மகாலக்ஷ்மியிடம் இருக்கிற நற்குணங்கள் யாவும் அப்பெண்ணிடம் பொதிந்திருக்கின்றன என்று பொருள். மகாலட்சுமி தாயார் பத்மாசனத்தில் அமர்ந்து சங்கு, சக்கரம், கதை இவற்றைத் திருக்கரங்களில் தாங்கியிருப்பவர். கருட வாகனத்தில் ஆரோகணித்து பரப்ரம்மத்தின் வடிவாகத் திகழ்பவர். பெரும் பாவங்களைத் தொலைப்பவர். யோக நிலையில் தோன்றி யோக வடிவாகத் திகழ்பவர். அறிவும் சிந்தனையும் தேர்ந்து எய்தும், தெய்வீக வெற்றியினை அருள்பவர். பெருமாளை அடைய நமக்காக புருஷகாரம் செய்பவர், மந்திரங்களின் வடிவாகத் திகழ்ந்து உயர்ந்த ஞானத்தின் இருப்பிடமாக விளங்குபவர். அனைத்து வரங்களையும் அளிப்பவர். எல்லா தீமைகளுக்கும் பயங்கரியாக விளங்கி எல்லா துக்கங்களையும் தீர்ப்பவர்.