தட்சிணாயன புண்ணிய காலமான ஆடி மாதத்தில்தான் பூமாதேவி அவதரித்ததாகப் புராணங்கள் சொல்கின்றன. இந்த மாதத்தில் வரும் திதி, நட்சத்திரம் மற்றும் கிழமைகள் யாவும் மகிமை வாய்ந்தவை என்று ஞான நூல்கள் பலவும் சிறப்பிக்கின்றன. மேலும், கோ பத்ம விரதம், நாக தோஷ பூஜை, புதுமணத் தம்பதிக்கு ஆடிப்பால் அளித்தல் என்று ஆடி மாதத்திற்குப் பல்வேறு சிறப்புகள் உண்டு.
திருவிளக்கு ஏற்றுதல்
ஆடி மழைக்காலத்தின் தொடக்கமாகும். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வேப்பிலைக்கும் எலுமிச்சைக்கும் உண்டு. எனவே, ஆடி வழிபாடுகளில் இவை இரண்டும் முக்கியத்துவம் பெறுகின்றன. திருமணமாகாத பெண்கள், ஆடி வெள்ளியில் குத்துவிளக்கினை அலங்கரித்து தீபம் ஏற்றி, மானசீகமாக அதில் அம்மனை எழுந்தருளச் செய்து, லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபட நல்ல கணவன் அமைவார்கள். மேலும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் கன்யா பூஜை, ராகு கால பூஜை, நாக தோஷ பூஜை செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
ஆடி செவ்வாய் விரதம்
ஆடி மாதம், செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். இதேபோன்று, ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு. கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கவும், கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணப்பேறு கிடைக்கவும் இந்த விரத வழிபாட்டின் மூலம் வேண்டிக் கொள்வார்கள். வசதியுள்ளவர்கள், கடைசி செவ்வாய்க்கிழமை அன்று குழந்தைகளை வீட்டுக்கு வரவழைத்து அவர்களைத் தெய்வமாக வழிபட்டு விருந்தளிப்பார்கள். ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கல கெளரி விரதம் கடைப்பிடிப்பதாலும் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
வளையல் பிரசாதம்
ஆண்டாளின் அவதாரத் திருநாள் ஆடிப்பூரம். இந்தத் திருநாளில் சுமங்கலிப் பெண்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், தேங்காய் பழம், வெற்றிலை - பாக்கு, ரவிக்கை வைத்துக் கொடுத்தால் செல்வம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். ஸ்ரீவில்லிபுத்தூர், மன்னார்குடி ஸ்ரீராஜ கோபாலசாமி திருக்கோயில் மற்றும் திருவண்ணாமலை கோயில்களில் பத்து நாட்களும், கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் மூன்று நாட்களும் ஆடிப்பூரத் திருவிழா நடைபெறுகிறது. ஆடிப்பூரத்தன்று அனைத்து ஆலயங்களிலும் அம்பாள் சந்நிதிகளில் வளையல்கள் சாற்றி வழிபாடுகள் சிறப்புற நடைபெறும். இந்த வைபவத்தைத் தரிசிப்பதுடன், பிரசாதமாகத் தரப்படும் வளையலைப் பெற்றுச் சென்று வீட்டில் வைத்தால், அங்கு அனைத்து வளங்களும் பொங்கிப்பெருகுகும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும்.
ஆடி சுவாதி
பெரிய திருவடியான கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்றுதான். இந்தத் திருநாளில் கருட தரிசனம் செய்வதாலும், கருடனை வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும்; மாங்கல்யம் பலம் பெறும். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்களுக்கு நடைபெறும். நான்கு ஆடி வீதிகளிலும் அம்பாள் வீதியுலா வருவாள். அதேபோல், ஆடி சுவாதி தினத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு ஆராதனையும், புறப்பாடும் நடைபெறும்.
ஆடிக்கிருத்திகை
வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை, உத்தராயண காலத் தொடக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயனக் காலத் தொடக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. இந்த மூன்றும் கார்த்திகேயக் கடவுளுக்கு உகந்த நாட்கள். ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும். ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள். குறிப்பாக பழநியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தைப் பூர்த்தி செய்வார்கள்.
ஆடி அமாவாசை
தட்சிணாயண புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசை ஆடி அமாவாசை. சிறப்பான இந்த ஆடி அமாவாசை நாளில் சமுத்திர ஸ்நானம் செய்வதும், பித்ருக்களான நம் முன்னோர்களுக்கு தில தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமானது. ஆடி மாதம் பெளர்ணமி தினமும் விசேஷமானதுதான். அன்று அம்மன் ஆலயங்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கும். ஞானக் கடவுளாம் ஹயக்ரீவர் அவதரித்தது ஆடி பெளர்ணமி என்பதால், அன்று அவரை வழிபடுவதால் அஞ்ஞானம் நீங்கும்; பிள்ளைகள் கல்வியில் ஜொலிப்பார்கள்.
ஆடிக்குருவி
காவிரி தீரத்தில் வாழும் ஒருவகை பறவைகளை அக்கோ குருவிகள் என்று அழைப்பார்கள். இந்தப் பெயருக்குப் பின்னணியாக சுவாரஸ்ய கதையொன்று உண்டு. காவிரிக்கரையோரம் சகோதரிகளான இரண்டு குருவிகள் வசித்தன. காவிரி வறண்டு காணப்பட்ட ஒருநாள், மணற்பரப்பில் உலர்த்தி இருந்த பொருட்களை தின்று கொண்டு இருந்த போது, காவிரியில் வெள்ளம் திடீரென வந்தது. தங்கைக்குருவி உடனடியாக பறந்து மரத்தில் அமர்ந்துவிட்டது. அக்காள் குருவி கவனிக்காததால், வெள்ளத்தோடு அடித்துச் சென்று விட்டது. அதைக் கண்ட தங்கைக் குருவி, ‘அக்கோ, அக்கோ’ என கதறி அழுதது. அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுக்கும்போதெல்லாம் அக்காள் குருவி திரும்ப வந்து விடும் என்ற நம்பிக்கையில் காவிரிக்கரை ஓரத்தில் மறத்தில் அமர்ந்து கொண்டு, ‘அக்கோ… அக்கோ…’ என்று குரல் எழுப்பி, அக்காள் குருவியைத் தேடுமாம். இப்போதும் காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடும் தருணங்களில் அந்தக் குருவியின் குரலைக் கேட்கலாம் என்கிறார்கள்.
ஆடி வேல்
இலங்கையில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் விழா ஆடிவேல் திருவிழா. ஆடி மாதத்தில் வேல் எடுத்து கொண்டாடப்படுவதால் ஆடிவேல் என்று அழைக்கிறார்கள். கதிர்காமத்தில் இவ்விழாவை கண்டுகளிக்கப் பக்தர்கள் பெருந்திரளாக வருவார்கள். இந்த ஆடிவேல் திருவிழா நான்கு தினங்கள் நடைபெறும்.
ஆடித்தபசு
சங்கரன்கோவில் ஆடித்தபசு பிரசித்தி பெற்ற திருவிழா. ’ஹரியும் அரனும் ஒன்றே’ என உலகுக்கு உணர்த்த விரும்பிய கோமதியம்மன், அதன் பொருட்டு இறைவனை வேண்டி ஒற்றைக் காலில் தவமிருந்தாள். அவளது தவத்தில் மகிழ்ந்த சிவனார், சங்கர நாராயணராகக் காட்சி அளித்தார். இந்த வைபவமே ஆடித்தபசு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. திருமணம், மகப்பேறு வேண்டும் பெண்கள், ஆடித்தபசு திருநாளுக்கு முதல்நாள் நீராடி, ஈரப் புடவையுடன் கோயில் பிராகாரத்தில் படுத்துவிடுவார்கள். இரவு கனவில் அம்மன் அருள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஆடிக் கூழ்
பசிப்பிணி போக்கி, எளியவர் அடையும் மகிழ்ச்சியில் இறைவனைக் காண்போம் என்ற கோட்பாடே கஞ்சி வார்த்தல் வழிபாட்டின் முக்கியத்துவம். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் இவ்விழா சிறப்பாக நடத்தப்பெற்றாலும், சமயபுரம், புதுக்கோட்டை – நார்த்தாமலை முதலிய அம்மன் தலங்களில் கஞ்சி வார்க்கும் வழிபாடு மிகச்சிறப்புடையது.
வரலட்சுமி விரதம்
ஆடி மாதம் வளர்பிறையில் கடைசி வெள்ளிக்கிழமை அனுசரிக்க வேண்டிய விரதம் இது. விரத நாளன்று திருமகளைக் கலசத்தில் எழுந்தருளச் செய்து, தேங்காய், பழம், வெற்றிலை-பாக்கு, கொழுக்கட்டை முதலானவற்றைச் சமர்ப்பித்து, திருமகளுக்கு உரிய துதிப்பாடல்களைப் பாடி, தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட வேண்டும். இந்த வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும் நோன்பு கயிற்றை வயதில் மூத்த சுமங்கலிகளிடம் ஆசி பெற்று, அவர்கள் மூலம் கையில் கட்டிக்கொள்ள வேண்டும். இதனால் கன்னிப்பெண்களுக்கு விரைவில் நல்ல வரன் அமையும். சுமங்கலிப் பெண்களுக்கு மாங்கல்ய பலம் பெருகும்.
ஆடி கோபத்ம விரதம்
ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசியில் கடைப் பிடிக்கப்படுவது, ஆடி கோபத்ம விரதம். இந்த தினத்தில் பசுவை வழிபடுவதால், லட்சுமி கடாட்சம் கிட்டும். அதேபோல், ஆடி வெள்ளிக்கிழமைகளில் புற்றுக்குப் பால் தெளித்து, பூஜை செய்வதால், நாகதோஷம் நிவர்த்தியாகும். குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்.
ஆடி மாதத் துளசி வழிபாடு
ஆடி மாதம் துளசி வழிபாடு அரிதான பல பலன்களைத் தரும். ஆடி மாதம் வளர்பிறை நாட்களில் (துவாதசி வரையில்) துளசியை வழிபட்டு வந்தால், ஐஸ்வர்யம் பெருகும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.
ஆடிப்பெருக்கு
நதியைப் பெண்ணாக வணங்கும் நாள். மழை பெய்து காவிரி முதலான நதிகளில் வெள்ளம் பெருகியோடும் ஆடி மாதத்தின், 18 ஆம் நாள் ஆடிப் பெருக்காகக் கொண்டாடப்படுகிறது. அன்று புத்தாடை அணிந்து, சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை, தயிர் சாதம், வடகம் முதலான பதார்த்தங்களை எடுத்துச்சென்று, நதிக்கரைகளில் அமர்ந்து நதிகளை தாயாகக் கருதி பூஜித்து விருந்துண்டு மகிழ்வார்கள். இந்தத் தினத்தில் செய்யப்படும் மங்கல காரியங்கள் பன்மடங்கு பலன் தரும் என்பது நம்பிக்கை.