நாம் தினந்தோறும் தெரிந்தும் தெரியாமலும் எத்தனையோ தவறுகள் செய்கிறோம். மனதால் கெட்டதை நினைக்கிறோம். வாக்கால் மற்றவர்களைப் புண்படுத்துகிறோம். சுய நலம் அதிகரிக்கும் போது செய்யும் காரியங்கள் தவறுகளாகி விடுகின்றன. கவனம் இப்படித் திசை மாறிப் போகும்போது என்றாவது ஒரு நாள் அதற்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என்கிறது இந்து சமயப் புராணங்கள்.
* இறைவனைப் பற்றிய நூல்களைப் படித்து அதன்படி வாழ்க்கையை நடத்தாமல் இருப்பது ஒரு பிழை. இது “கல்லாப் பிழை”
* இறைவனைப் பற்றிய எண்ணமே இல்லாமல் வாழ்வதும் பிழையே. இது “கருதாப் பிழை”
* இறைவனது கருணையை எண்ணி எண்ணிக் கசிந்து மனம் உருகி வாழாவிட்டால் அதுவும் பிழையே. இது “கசிந்து உருகி நில்லாப் பிழை”
* இறைவனை மறப்பது நன்றி மறப்பதற்கு சமம். அப்படிப்பட்ட நாட்கள் பிறவாத நாட்கள் என்கிறார் அப்பர் சுவாமிகள். இது “நினையாப் பிழை”
முன்பெல்லாம் பஞ்சாக்ஷர ஜபம் செய்யாத வீடுகள் மிகக் குறைவாக இருந்தது. அதற்கு மேல் மந்திரம் வேறு எதுவும் இல்லாததால் நான்கு வேத நடுவில் இருக்கும் மகிமை உள்ள இந்த மந்திரத்தைப் பெரியோர்கள் ஜபிக்கும்படிச் சொன்னார்கள். ஆதலால் இதைச் செய்யாமல் இருப்பது பெரிய பிழை ஆகிறது. இது “பஞ்சாக்ஷர ஜபம் செய்யாத பிழை”
* தோத்திரங்களால் துதித்தல் மிகவும் முக்கியமானது. தேவர்களும், அசுரர்களும், முனிவர்களும் பிறரும் செய்த தோத்திரங்கள் ஏராளமாகப் புராணங்களில் காணப்படுகின்றன. இறைவனை அவனது நாமங்களால் துதித்தால் பிழைகளை மன்னித்து அருள்வான். அப்படித் துதிக்காமல் இருப்பதும் பிழைதான். இது “துதியாப்பிழை”
* தெய்வம் நமக்குத் தந்த கைகள் அவனைத் தொழுவதற்கே ஏற்பட்டவை. மனிதர்களைத் தொழுது விட்டுத் தெய்வத்தை தொழாதவர்களும் இருக்கிறார்கள். இது “தொழாப்பிழை”
- இப்படியாகப் பல பிழைகளை நாள்தோறும் செய்கிறோம். இதைத் தெய்வத்தைத் தவிர யாரால் மன்னிக்க முடியும்?
“கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நினஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்து அருள்வாய் கச்சி ஏகம்பனே”
எனும் பாடல் நம் பிழைகளை எடுத்துக்காட்டி, அப்பிழைகளைப் பொறுத்தருளும்படி இறைவனை வேண்டுவதாக அமைந்திருக்கிறது.
பட்டினத்தார் பாடிய இப்பாடல் காஞ்சி ஏகாம்பரநாத சுவாமி மீது பாடப் பெற்றது.
இப்பாடலை, நாள்தோறும் பாடி நம் பிழைகளை பொறுத்தருள இறைவனை வேண்டலாமே...?