முருகனை வணங்கும் அனைவரும் ஓம் சரவணபவ என்ற மந்திரத்தைக் கூறுவது வழக்கம். இந்த மந்திரத்தில் உள்ள ‘சரவணபவ’ என்ற சொல்லைப் பிரித்தால் இதன் உண்மைப் பொருள் நமக்கும் எளிதாய் விளங்கும். சரவணம் + பவ = சரவணபவ. ‘சரவணம்’ என்றால் ‘தர்ப்பை’ என்று பொருள். ‘பவ’ என்றால் தோன்றுதல் என்று பொருள். தர்ப்பைக் காட்டில் இருந்து முருகன் தோன்றியதால், அவருக்கு “சரவணபவ’ எனப் பெயர் வந்தது.
சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணில் இருந்து நெருப்பை வெளியிட, அதைத் தாங்கி சென்ற வாயு பகவான், தர்ப்பைக் காட்டில் இருந்த பொய்கை ஆற்றில் அந்த நெருப்பை விட்டார். அதைத்தான் சரவணப் பொய்கை என்கிறோம். பொய்கை ஆற்றை அடைந்த அந்த நெருப்புப் பொறிகள் ஆறு குழந்தைகளாக மாறின. அந்தக் குழந்தைகள் அனைத்தும் கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தன. குழந்தைகளின் தாயான பார்வதிதேவி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது ஆறுமுகத்தோடும் பன்னிரண்டு கைகளோடும் நம் தமிழ் கடவுளான முருகன் தோன்றினார் என்கிறது கந்தபுராணம்.